சென்னை புறநகரிலுள்ள கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்திருக்கிறது கண்ணகி நகர். சென்னை நகர்ப் பகுதியிலுள்ள நீர்நிலைப் பகுதிகள் தொடங்கி பல்வேறு இடங்களிலுள்ள மக்களை கண்ணகி நகர் குடியிருப்புக்குத்தான் மாற்றப்படுவது வழக்கம். சென்னை சுற்றுவட்டாரத்தில் பெரும் மீள்குடியேற்றப் பகுதியாக அனைவராலும் அறியப்படும் இடம் கண்ணகி நகர். இந்தக் குடியிருப்புகளில் மட்டும் ஒரு லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வாழ்கிறார்கள்.
கடந்த ஜனவரி மாதம் தென் சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கப்பாண்டியனின் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து இந்தப் பகுதியில் ஒரு சமூக நலக்கூடம் கட்ட முடிவுசெய்யப்பட்டது. 1.25 கோடி ரூபாய் செலவில் கட்டப்படும் இந்தக் கட்டடத்துக்குக் கடந்த ஜனவரி மாதம் 19-ம் தேதி அடிக்கல் நாட்டும் விழா நடைபெற்றது. இந்த விழாவில், மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தென் சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன், சோழிங்கநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் அரவிந்த் ரமேஷ் ஆகியோர் கலந்துகொண்டனர்.
அடிக்கல் வைத்து ஐந்து மாதங்களாகும் நிலையில், அங்குக் கட்டடம் கட்டுவதற்காகப் பள்ளம் தோண்டப்பட்டது. அந்தப் பள்ளமானது அருகிலுள்ள குடியிருப்புக் கட்டடத்தின் அடித்தளம் தெரியும் அளவுக்கு ஆழமாகத் தோண்டப்பட்டிருக்கிறது. அதோடு, அருகிலுள்ள குடியிருப்புக் கட்டடங்களில் விரிசலும் ஏற்பட்டிருப்பதால், கட்டடங்கள் இடிந்து விழுந்துவிடுமோ என்ற அச்சம், அந்தக் குடியிருப்புவாசிகளிடம் எழுந்திருக்கிறது. சம்பந்தப்பட்ட குடியிருப்புக் கட்டடத்தில் மட்டும் 150-க்கும் அதிகமான மக்கள் வசிக்கிறார்கள். இது குறித்து பலமுறை புகார் அளித்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று குடியிருப்புவாசிகள் குற்றம்சாட்டுகிறார்கள்.
இந்த விவகாரம் குறித்து தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய உயரதிகாரிகளிடம் பேசினோம். “சமுதாய நலக்கூடம் கட்டும் பணிக்காகப் பள்ளம் தோண்டியபோது குடியிருப்பின் அடித்தள பில்லர் வெளியே தெரிந்ததைப் பார்த்து மக்கள் அச்சமடைந்திருக்கிறார்கள். உண்மையில் அந்தக் குடியிருப்புக்கு எந்த பாதிப்பும் கிடையாது. கட்டடம் மிகவும் உறுதியாகவே இருக்கிறது. அந்தக் குடியிருப்பில் இருப்பவர்கள் பயப்படத்தேவையில்லை. நாளை பில்லர் வெளியே தெரியும் பகுதி மூடப்படும். அதே சமயத்தில் இந்த விவகாரத்தில் அந்தப் பகுதியிலுள்ள அதிகாரிகள் தவறு செய்திருந்தால், அவர்கள்மீதும் துறைரீதியாக விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கப்படும்” என்றனர்.
ஆபத்து எதுவும் இல்லை என்று சொல்லும் அதே சமயத்தில், அந்தக் குடியிருப்பிலிருந்தவர்களை, `இரவு நேரத்தில் வேறு எங்காவது தங்கிக்கொள்ளுங்கள்’ என்று ஆய்வுக்கு வந்த அதிகாரிகள் சொன்னதுதான் குடியிருப்புவாசிகளுக்கு பெரும் அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது. உடனடியாக, கட்டடத்தின்உறுதித்தன்மை குறித்து ஆய்வுசெய்து, மக்களின் அச்சத்தைப் போக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் செய்ய முன்வருமா அரசு?!