பொது சிவில் சட்டம்: “வாக்கு வங்கிப் பசியால் எதிர்க்கட்சிகள் முஸ்லிம்களைத் தூண்டிவிடுகின்றன!" – மோடி

அமெரிக்காவில் நான்கு நாள்கள் சுற்றுப்பயணத்தை முடித்துவிட்டு நாடு திரும்பிய பிரதமர் மோடி, நேற்றைய தினம் மணிப்பூர் கலவரம் தொடர்பாக ஆலோசனை நடத்தினார்.இந்த நிலையில், பொது சிவில் சட்ட விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் இஸ்லாமியர்களைத் தூண்டிவிட்டு வாக்கு வங்கி அரசியல் செய்வதாகக் கூறி, பொது சிவில் சட்டத்தைக் கொண்டுவர வேண்டும் என்று வலியுறுத்தியிருக்கிறார்.

மோடி

முன்னதாக, மத்தியப் பிரதேசத்தில் ஐந்து வந்தே பாரத் ரயில்களை கொடியசைத்து தொடங்கிவைத்த பிரதமர் மோடி, அதைத் தொடர்ந்து போபாலில் நடைபெற்ற பா.ஜ.க கூட்டத்தில் கலந்துகொண்டார். அப்போது தொண்டர்கள் மத்தியில் உரையாற்றிய பிரதமர் மோடி, “முத்தலாக்கை யார் யாரெல்லாம் ஆதரிக்கிறார்களோ, அவர்களெல்லாம் வாக்கு வங்கிப் பசியில் இருக்கிறார்கள். அவர்கள் இஸ்லாமியப் பெண்களுக்கு அநீதி இழைக்கிறார்கள். முத்தலாக், இஸ்லாமியப் பெண்களைத் தாண்டி மொத்த குடும்பத்தையே சீரழித்துவிடும். சரி அப்படியே முத்தலாக் இஸ்லாமிய மதத்தில் மிக அவசியமானது என்றால், எதற்காக கத்தார், ஜோர்டான், இந்தோனேசியா, பாகிஸ்தான், வங்காளதேசம் போன்ற நாடுகளில் அது தடைசெய்யப்பட்டிருக்கிறது.

இரண்டு விதிமுறைகள் இருந்தால் குடும்பம் நன்றாக இயங்குமா… அதுபோல இரண்டு விதமான சட்டங்கள் இருந்தால் நாடு நன்றாகச் செயல்படுமா… நம்முடைய அரசியலமைப்பு அனைவருக்கும் சம உரிமையை வழங்குகிறது. பொது சிவில் சட்டமும் அதன் ஒரு பகுதியே. உச்ச நீதிமன்றமும் அதனை அமல்படுத்தச் சொல்கிறது. ஆனால், எதிர்க்கட்சியினர் பொது சிவில் சட்டத்தின்பேரில் மக்களைத் தூண்டிவிடுகிறார்கள். இதன் மூலம் எந்தெந்த அரசியல் கட்சிகள் தங்களைத் தூண்டிவிட்டு அரசியல் ஆதாயம் பெறுகிறார்கள் என்பதை இஸ்லாமியர்கள் தெரிந்துகொள்ளவேண்டும்.

மோடி

அவர்களின் திருப்திப்படுத்துதல் அரசியலுக்கு இஸ்லாமியர்கள் பலியாகிவிட்டனர். எனவே இஸ்லாமியர்கள் இதுபோன்ற அரசியலுக்குப் பலியாகாமலிருக்க, பா.ஜ.க-வினர் இஸ்லாமியர்களிடம் சென்று இதுபற்றி கற்பிக்க வேண்டும்” என்று கூறினார்.

மேலும், பாட்னாவில் எதிர்க்கட்சிகள் ஒன்று கூடியதைச் சாடிய மோடி, “ஊழல் எதிர்ப்பு நடவடிக்கையிலிருந்து தப்பிக்க எதிர்க்கட்சிகள் முயற்சி செய்கின்றன. ஊழல் தலைவர்கள் தங்களுக்குள் ஒருவரையொருவர் காப்பாற்ற முயல்கின்றனர். ஆனால், அவர்களில் யாரையும் நான் விட்டுவைக்க மாட்டேன். ஒவ்வொரு ஊழல்வாதியையும் கடுமையாகத் தண்டிப்பேன்” என்றார்.

டி.கே.எஸ்.இளங்கோவன்

மோடி இத்தகைய பேச்சுக்கு எதிர்க்கட்சிகள் தரப்பிலிருந்து பல்வேறு எதிர்ப்புகள் வந்தவண்ணம் இருக்கின்றன. அந்த வரிசையில் தி.மு.க-வைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் டி.கே.எஸ்.இளங்கோவன், “பொது சிவில் சட்டத்தை முதலில் இந்து மதத்தில் அமல்படுத்த வேண்டும். தாழ்த்தப்பட்ட, பழங்குடி மக்கள் உட்பட அனைத்துச் சாதியினரும், இந்தியாவிலுள்ள எந்தக் கோயிலில் வேண்டுமானாலும் அர்ச்சனை செய்ய அனுமதிக்கப்பட வேண்டும். ஒவ்வொரு மதத்துக்கும் பாதுகாப்பளிக்கிறது அரசியலமைப்புச் சட்டம். அதனால்தான் நாங்கள் பொது சிவில் சட்டத்தை எதிர்க்கிறோம்” என்று தெரிவித்திருக்கிறார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.