இரண்டு பாகங்கள் வேண்டவே வேண்டாம் : இயக்குனருக்கு தடை போட்ட பிரபாஸ்
பாகுபலி படத்தின் மிகப்பெரிய வெற்றிக்குப் பிறகு வரலாற்று படங்களை அல்லது புராண படங்களை இரண்டு பாகங்களாக எடுத்து வெளியிட்டாலும் ரசிகர்களிடம் அதற்கு வரவேற்பு கிடைக்கும்,வசூலையும் அள்ளலாம் என இயக்குனர்கள், தயாரிப்பாளர்களுக்கு மிகப்பெரிய நம்பிக்கை ஏற்பட்டது. அப்படித்தான் தமிழில் இதுவரை எடுக்க தயக்கம் காட்டப்பட்டு வந்த பொன்னியின் செல்வன் நாவல் கூட இரண்டு பாகங்களாக உருவாக்கப்பட்டு கடந்த வருடம் முதல் பாகமும் இந்த வருடம் இரண்டாம் பாகமும் வெளியாகி நல்ல வரவேற்பையும் வசூலையும் பெற்றன.
இதைத் தொடர்ந்து இயக்குனர் வெற்றிமாறன் தனது வட சென்னை, விடுதலை போன்ற படங்களுக்கு இரண்டாம் பாகங்களை உருவாக்கி வருகிறார். அதற்கும் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு இருக்கிறது. அந்த விதமாக சமீபத்தில் பிரபாஸ் நடிப்பில் வெளியான ஆதிபுருஷ் படத்தையும் இரண்டு பாகங்களாக வெளியிடலாம் என இந்த படம் எடுக்கப்பட்டு வந்த சமயத்திலேயே பிரபாஸிடம் கூறினாராம் இந்த படத்தின் இயக்குனர் ஓம் ராவத்.
அதற்கு காரணம் கைவசம் கிட்டத்தட்ட மூன்றரை மணி நேரம் காட்சிகள் இருப்பதாகவும் இன்னும் காட்சிகளை அதிகரித்து இரண்டு பாகங்களாக வெளியிடலாம் என்றும் கூறியுள்ளார் ஓம் ராவத். ஆனால் பிரபாஸோ இந்தப்படம் ஒரு பாகமாக மட்டுமே வெளியாக வேண்டும். அப்போதுதான் அதற்கான சரியான வரவேற்பு கிடைக்கும் என்று கூறி இரண்டு பாகங்களாக வெளியிட வேண்டும் என்கிற இயக்குனரின் விருப்பத்திற்கு ஆரம்பத்திலேயே தடை போட்டு விட்டாராம். சமீபத்திய பேட்டி ஒன்றில் இந்த தகவலை இயக்குனர் ஓம் ராவத்தே வெளிப்படுத்தியுள்ளார்.