தஞ்சாவூர்: கும்பகோணம் அருகே சாக்கோட்டையில், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினர் 8 பேர் நள்ளிரவில் கைது செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கும்பகோணம் அருகே சாக்கோட்டையில் இயங்கி வரும் தனியார் பள்ளிக்கு பாதை அமைத்து தரக்கோரி பாஜகவினர் நேற்று (ஜூன் 27) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பாஜக தஞ்சை வடக்கு மாவட்ட தலைவர் சதீஷ்குமார் தலைமையில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தனியார் பள்ளிக்கு வரும் பாதையை மூடிய தனியார் தொழிலதிபரை கண்டித்தும், அதனை கண்டுகொள்ளாமல் பள்ளியை நடத்தி வரும் தனியார் பள்ளி நிர்வாகத்தைக் கண்டித்தும் பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
25க்கும் மேற்பட்டோர் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற நிலையில், தஞ்சை வடக்கு மாவட்ட பாஜக தலைவர் உள்ளிட்ட 8 பேர் கைது அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த கைது நடவடிக்கையை கண்டித்து ஜூன் 28ஆம் தேதி ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதியிலும் கண்டன ஆர்ப்பாட்டம், சாலை மறியல் போராட்டம் நடைபெறும் என தஞ்சை வடக்கு மாவட்ட பாஜக சார்பில் நள்ளிரவில் அறிவிக்கப்பட்டுள்ளது.
கும்பகோணம் சட்டமன்ற தொகுதியில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் பாஜக மாநில பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம் கலந்து கொள்வார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.