கேன்பெர்ரா:
ஆஸ்திரேலியாவில் படிக்கும் இந்திய மாணவர்கள் விசா ஏதுமின்றி அங்கேயே 8 ஆண்டுகள் வரை வேலை செய்ய அந்நாட்டு அரசு அனுமதி வழங்கியுள்ளது.
ஆஸ்திரேலியாவில் லட்சக்கணக்கான இந்தியர்கள் வசித்து வருகின்றனர். அதேபோல, இந்திய மாணவர்கள் பலரும் அங்குள்ள கல்லூரி, பல்கலைக்கழகங்களில் படித்து வருகின்றனர். இவ்வாறு அங்கு படிக்கும் இந்தியா உள்ளிட்ட வெளிநாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் அங்கே வேலை செய்ய பல கட்டுப்பாடுகள் இதுவரை இருந்தன. குறிப்பாக, அவர்களின் மாணவர் விசாக்காலம் (Student Visa) முடிந்து சில குறிப்பிட்ட காலம் வரையே அவர்களால் அங்கே வேலை செய்ய முடியும் என்ற நிலை இருந்தது.
இந்நிலையில், இந்தியா – ஆஸ்திரேலியா நாடுகள் இடையே அண்மையில் ஏற்பட்ட ஒப்பந்தத்தின் படி, அந்நாட்டு அரசு ஒரு புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. MATES என அழைக்கப்படும் இந்த திட்டத்தின் கீழ் இந்திய மாணவர்கள் விசா இல்லாமலேயே அங்கு 8 ஆண்டுக்காலம் பணிபுரியலாம். பொறியியல், தகவல் தொழிநுட்பம், செயற்கை நுண்ணறிவு, நிதி தொழில்நுட்பம், மாற்று எரிசக்தி, சுரங்கம் ஆகிய துறைகளைச் சேர்ந்தவர்கள் இதற்கு தகுதியானவர்கள் என ஆஸ்திரேலியா அரசு தெரிவித்துள்ளது. ஜூலை 1-ம் தேதி முதல் இந்த திட்டம் அமலுக்கு வரவுள்ளது.
அதேபோல, ஆஸ்திரேலியாவில் ஸ்டூடண்ட் விசா வைத்திருப்போர், இரண்டு வாரங்களுக்கு 48 மணிநேரம் வேலை செய்யவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.