விஜய் யாருனே எனக்கு தெரியாது.. ஒரு கும்பல் என்றைக்கும் கட்சி ஆகாது.. குருமூர்த்தி சரவெடி

சென்னை: நடிகர் விஜய்யின் அரசியல் பிரவசேம் குறித்த கேள்விக்கு பத்திரிகையாளர் குருமூர்த்தி அளித்த பதில் அவரது ரசிகர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் விஜய் அண்மையில் தமிழகத்தில் உள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளிலிலும் அதிக மதிப்பெண்களை பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை கொடுத்தார். அந்த நிகழ்ச்சியில், “மாணவர்கள் அம்பேத்கர், பெரியார், காமராஜ் ஆகியோரை படிக்க வேண்டும்” என அவர் கூறினார். இந்த நிகழ்ச்சியும், அவரது பேச்சும் விஜய்யின் அரசியல் பிரவேசத்தை அப்பட்டமாக தெரிவிப்பதாக இருந்தது.

இதனிடையே, விஜய் அரசியலுக்கு வருவதை திருமாவளவனும், சீமானும் கடுமையான சொற்களால் விமர்சித்தனர். “சினிமா நடிகர்கள் அரசியலுக்கு வருவது தமிழகத்தின் சாபக்கேடு” என திருமாவளவன் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. மேலும், விஜய் ரசிகர்களும் இதற்கு கடுமையாக எதிர்வினையாற்றினர்..

இந்த சூழலில், துக்ளக் பத்திரிகை ஆசிரியர் குருமூர்த்தி சென்னையில் செய்தியாளர்களை இன்று சந்தித்தார். அப்போது அவரிடம் விஜய் அரசியலுக்கு வருவது குறித்து கேள்வியெழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்து குருமூர்த்தி பேசியதாவது:

அவரை பற்றி எனக்கு தெரியவே தெரியாது. சினிமாவை பற்றியே எனக்கு தெரியாது. விஜய்யை பற்றி எப்படி தெரியும்? என்னை பொறுத்தவரை, தமிழ்நாட்டில் இனி ஒரு நடிகர் அரசியலுக்கு வந்து பெரிய அளவில் வெற்றி பெற முடியாது என நான் நம்புகிறேன். அப்படி நடக்கும் என்று எனக்கு தோன்றவில்லை. எம்ஜிஆர் அரசியலில் வெற்றி பெற்றதற்கு காரணம், திமுகவில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக எம்ஜிஆரும், அவரது ரசிகர்களும் இருந்தனர். திமுக கூட சேர்ந்து வேலை செய்து அரசியலை அத்துப்படியாக அவர்கள் கற்றுக்கொண்டனர்.

அதாவது, அதிமுக என்று ஒரு கட்சி தோன்றுவதற்கு முன்பே அது திமுகவில் இருந்து வந்தது என்பதுதான் உண்மை. அதனால் அவர் அதிமுகவை உருவாக்கும் போது, அவரது ரசிகர்கள் தொண்டர்களாக மாறி இருந்தார்கள். ஒரு கும்பலை ஒரு கட்சியாக மாற்ற முடியாது. மிகவும் சிரமமான வேலை அது. 10 கட்சிகள் இணைந்தே கூட்டணி அமைக்க திணறி வரும் போது, 10 லட்சம் பேர் சேர்ந்து ஒரு கட்சியாக உருவாவது எவ்வளவு பெரிய கஷ்டம்? எனவே, இந்த முயற்சி எல்லாம் பெரிய அளவில் வெற்றி அடையாது. இவ்வாறு குருமூர்த்தி கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.