பாலக்காடு:கேரள மாநிலம், கஞ்சிக்கோடு வனப்பகுதியில் தாய் யானையை பிரிந்து, தவிக்கும் குட்டி யானையை வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.
கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், கோவை- – கொச்சி தேசிய நெடுஞ்சாலை அருகே வாளையார் வனப்பகுதி உள்ளது. இந்த வனத்தின் எல்லை பகுதியான கஞ்சிக்கோடு வல்லடி ஆரோக்கியமடை அருகே, கடந்த இரு வாரங்களாக இரண்டு வயது குட்டி யானை உலா வருகிறது.
அப்பகுதியில் சுற்றும் குட்டியானையை, மக்கள் அலைபேசி படம் பிடிக்கின்றனர். குட்டி யானையை அதன் தாய் இருக்கும் கூட்டத்துக்கு அருகில், வனத்துறை சார்பில் கொண்டு சென்று விட்டிருந்தன.
ஆனால், மீண்டும் கூட்டத்தில் இருந்து விலகி அதே பகுதியில் முகாமிட்டு உணவு உட்கொண்டு துள்ளிக்குதித்து விளையாடி கொண்டுள்ளது. தானாக உணவை தேடி உட்கொள்ளும் குட்டி யானையை, அப்பகுதி மக்களும், வனத்துறையினரும் ஆச்சரியத்துடன் பார்க்கின்றனர்.
இதுகுறித்து வனத்துறையினர் கூறியதாவது:
தற்போது குட்டி யானையின் உடல்நிலையில் எந்த பாதிப்பும் இல்லை. குட்டி யானையை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். கடந்த இரு நாட்களாக உணவு உட்கொள்ளாமல் இருப்பது கவலை அளிக்கின்றனர்.
தாய் யானை அழைத்து செல்லாவிட்டால், குட்டி யானையை பராமரிக்கும் தொடர் நடவடிக்கையை, உயர் அதிகாரிகளின் அறிவுரையின்படி மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு, கூறினர்.
கடந்த வாரம், பாலக்காடு மாவட்டம் அட்டப்பாடி அகளி பாலுாரில் வழி தவறி வந்த குட்டி யானையை, தாய் யானை இரண்டு வாரம் கடந்தும் அழைத்து செல்லாததால், வனத்துறையின் பராமரிப்பில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement