லக்னோ: உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் இருந்து டெல்லி வந்து கொண்டிருந்த வந்தே பாரத் ரயில் மோதி ஒருவர் உயிரிழந்தார். துண்ட்லா என்ற பகுதியில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
நாடு முழுவதும் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படுகின்றன. முதல் வந்தே பாரத் ரயில் டெல்லி முதல் வாரணாசி இடையே கடந்த 2019ம் ஆண்டு பிப்ரவரி மாதம் பிரதமர் நரேந்திர மோடியால் தொடங்கி வைக்கப்பட்டது . அன்று முதல் எல்லா வந்தே பாரத் ரயில்களையும் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அமைச்சர்கள் தொடங்கி வைத்து வருகிறார்கள்.
இந்நிலையில் வந்தே பாரத் ரயில் முதல்முறையாக குஜராத் மாநிலம் அஹமதாபாத் அருகே விபத்தில் சிக்கியது. அப்போது ஒரு பெண் மீது மோதியது, அந்த பெண் உயிரிழந்தார். அதன்பிறகு அதே ரயில் எருமை மாட்டின் மீது மோதியது. இதேபோல் மும்பை வந்தே பாரத் ரயிலும் எருமை மாட்டின் மீது மோதியது. வடமாநிலங்களில் அடிக்கடி விலங்குகளால் ரயில்கள் விபத்தில் சிக்குவது நடந்து வருகிறது.
அதேநேரம் தென்மாநிலங்களில் வந்தே பாரத் ரயில்கள் கல்வீச்சு சம்பவங்களால் அடிக்கடி பாதிக்கப்பட்டன. ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் வந்தே பாரத் ரயில் தாக்கப்பட்டது. கர்நாடகா மாநிலம் பெங்களூரு அருகேயும் கல்வீச்சால் பாதிக்கப்பட்டது.
இந்நிலையில் உத்தரபிரதேசத்தில் துன்ட்லா அருகே வந்தே பாரத் ரயில் மோதியதில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். உத்தரப்பிரதேச மாநிலம் ஜலேசர் மற்றும் போரா ரயில் நிலையங்களுக்கு இடையே துண்ட்லாவில் நேற்று முன்தினம் இந்த விபத்து ஏற்பட்டிருக்கிறது.
வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் வாரணாசியில் இருந்து டெல்லிக்கு வந்து கொண்டிருந்தபோது இந்த சம்பவம் நடந்துள்ளது. லோகோ பைலட் சக்கரங்களில் இருந்து வந்த வித்தியாசமான சத்தத்ததை கவனித்தார். அவர் உடனே பர்வாரி ரயில் நிலையத்தில் ரயிலை நிறுத்தினார். அதில் இருந்தவரின் உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.