மாவட்டச் செயலாளர் குறித்து புகார்; திமுக-லிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிர்வாகிகள்! – பின்னணி என்ன?

சேலம் மாவட்ட தி.மு.க-வில் கோஷ்டிப்பூசல் என்பது தலைவிரித்து ஆடுகிறது. ஒருபுறம் எம்.எல்.ஏ ராஜேந்திரன் அணி, மற்றொருபுறம் எம்.பி பார்த்திபன் அணி என தனித்தனி கோஷ்டிகள் இருப்பதால், வீரபாண்டியார் மறைவுக்குப் பின்னர் சேலம் தி.மு.க-வில் உட்கட்சிப்பூசல் அடிக்கடி உச்சம் தொட்டுக் கொண்டிருக்கிறது. இந்த கோஷ்டிப்பூசலின் விளைவாக கடந்த சட்டமன்றத் தேர்தலில், 11 சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்ட சேலத்தில், ஒரே ஒரு தொகுதியில் மட்டும்தான் தி.மு.க-வால் வெற்றி பெற முடிந்தது. மற்ற 10 தொகுதிகளிலும் அ.தி.மு.க கூட்டணியே வெற்றிபெற்றுது.

இந்த நிலையில், கோஷ்டிப்பூசலின் உச்சக்கட்டமாக மீண்டும் ஒரு சம்பவம் அரங்கேறியிருக்கிறது சேலத்தில். தி.மு.க நிர்வாகிகளே, தி.மு.க., எம்.எல்.ஏ ராஜேந்திரன் குறித்து சமூக வலைதளங்களில் பதிவிட்ட கருத்துதான், சேலம் தி.மு.க-வில் அனலைக் கிளப்பியிருக்கிறது.

சக்கரை சரவணன்

சேலம் மாநகராட்சி 18-வது வார்டு தி.மு.க கவுன்சிலராக இருந்து வருபவர் சர்க்கரை சரவணன். இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு சேலம் மத்திய மாவட்டச் செயலாளரும், வடக்கு சட்டமன்ற உறுப்பினருமான எம்.எல்.ஏ இராஜேந்திரன் குறித்து தனது முகநூல் பக்கத்தில், “கட்சி சீனியர்களை மாவட்டச் செயலாளர் கொஞ்சம்கூட மதிப்பதில்லை. அவருடைய சமூகத்தினருக்கே அனைத்து பொறுப்புகளையும் வழங்குகிறார்.

கட்சிக்காக உண்மையாக உழைத்தவர்களுக்கு அங்கீகாரம் இல்லாமல் போயிற்று… இவர் தொடர்ந்து மாவட்டச் செயலாளராக இருந்தால் கட்சி சீனியர்கள் ஒவ்வொருவரும் கட்சியைவிட்டுச் சென்றுவிடுவார்கள்” என்று பதிவுசெய்திருந்தார். இதேபோன்று தலைமைச் செயற்குழு உறுப்பினர் ஜெயக்குமாரும், மாவட்டச் செயலாளர் குறித்து தலைமையிடம் புகாரளித்திருக்கிறார்.

ஜெயக்குமார்

இந்த நிலையில் தி.மு.க பொதுச்செயலாளர் துரைமுருகன் கழகக் கட்டுப்பாட்டை மீறி சக்கரை சரவணன், ஜெயக்குமார் ஆகியோர் செயல்பட்டதாகக் கூறி, அவர்களை கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் நீக்கி, ஒழுங்கு நடவடிக்கை மேற்கொண்டிருக்கிறார்.

இது குறித்து கவுன்சிலர் சக்கரை சரவணனிடம் பேசியபோது, “நான் கட்சிக்காக ஓடாய் உழைத்திருக்கேன். கட்சி வேலைகளைச் செய்து, தலைவர் கலைஞரால் பாராட்டும் பெற்றிருக்கிறேன். தற்போது தளபதியின் காலத்திலும் கட்சி வேலை செய்ய கடமைபட்டிருக்கிறோம். ஆனால் மாவட்டச் செயலாளர் ராஜேந்திரன், சீனியர்களைக் கண்டாலே துரத்துகிறார், ஓரங்கட்டுகிறார். இது என்னைப்போன்ற கட்சி சீனியர்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.

எம்.எல்.ஏ., ராஜேந்திரன்

இதுவரை எந்தவித பதவிக்கும் அவருடைய சமூகத்தாரையும், அவருக்கு வேண்டப்பட்டவர்களையும் மட்டும்தான் நியமித்திருக்கிறார். இது எந்தவிதத்தில் நியாயம். அதனால்தான் அவர்மீது தலைமைக்குப் புகார் அனுப்பியிருந்தேன். அதன் நகலைத்தான் முகநூலில் பதிவிட்டிருந்தேன்” என்றார்.

மேலும் இது தொடர்பாக தலைமைச் செயற்குழு உறுப்பினர் ஜெயக்குமாரைத் தொடர்புகொண்டபோது, “கட்சித் தலைமை என்ன முடிவுசெய்திருக்கிறதோ, அதற்கு கட்டுப்பட்டு நான் செல்கிறேன். நான் வேறு எதுவும் சொல்ல விரும்பவில்லை” என்றார்.

இது குறித்து மாவட்டச் செயலாளர் ராஜேந்திரனை தொடர்புகொண்டபோது, அவர் நம்முடைய அழைப்பை ஏற்கவில்லை.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.