தஞ்சாவூர்: தஞ்சாவூர் தென்னக பண்பாட்டு மையத்தில் கோடை விழா விமரிசையாக நடைபெற்றது. கேரளா மாநிலத்தின் பாரம்பரிய நடனமான தெய்யம் நடனத்தை கண்டு தஞ்சாவூர் மக்கள் மெய்சிலிர்த்தனர். காந்தாரா தெய்வம் நேரில் வந்து விட்டதோ என்று ஆச்சரியத்துடன் பார்த்து ரசித்தனர்.
தஞ்சாவூர் தென்னக பண்பாட்டு மையத்தில் ஆண்டுதோறும் கோடை விழா நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்தாண்டு கோடை விழா கடந்த ஜூன் 21 ஆம் தொடங்கி 26 ஆம் தேதியுடன் நிறைவு பெற்றது. தினமும் மாலை 6:30 மணி முதல் இரவு 9 மணி கலை நிகழ்ச்சிகள் தொடர்ந்து ஐந்து நாட்கள் நடைபெற்றது.
இதில் இந்தியாவின் 15 மாநிலங்களை சேர்ந்த 400 கலைஞர்கள் கலந்து கொண்டனர். ஒவ்வொரு மாநிலத்தின் பாரம்பரிய கலைகளை நிகழ்த்தும் விதமாக அம் மாநிலத்தின் தனித்துவமான இசைகளை வாசித்து நடமானடினர். குறிப்பாக கேரளா நாட்டின் தனித்துவமான தெய்யம் நடனம் பலரது கவனத்தையும் ஈர்த்தது. காந்தாரா படத்தில் இடம்பெற்றிருக்கும் காட்சிகள் நம்மை மெய்சிலிர்க்க செய்தது. அந்த வகையில் அதை நேரில் கண்ட தஞ்சை மக்கள், ஆச்சரியமாக தெய்யம் நடனத்தை கண்டு ரசித்தனர். தஞ்சாவூர் எம்2 போட்டோகிராபி நிறுவன உரிமையாளர் ஆர்டிஸ்ட் மணிவண்ணன் தனது கேமராவினால் இந்த நடனத்தை தத்ரூபமாக புகைப்படம் எடுத்து இணையத்தில் பதிவிட்டுள்ளார்.
தெய்யம் என்பது கேரளாவின் ஒரு பிராந்திய நாட்டுப்புற நடனம். இது பல்வேறு பகவதி தெய்வங்கள் மற்றும் பிற தெய்வங்களை வணங்குவதற்காக நிகழ்த்தப்படுகிறது. விஷ்ணுவின் ஆறாவது அவதாரமான பரசுராமரால் வட கேரள மக்களுக்கு, குறிப்பாக மலபார் பகுதி மக்களுக்கு இந்த தெய்யம் வழங்கப்பட்டது என்று இந்து புராணங்கள் கூறுகின்றன. “தெய்யம்” என்பது உள்ளூர் மொழியின் பிரதானமாகும். கேரளாவில் கடவுளுடன் இணைவதற்கான ஒரு வழி தெய்யம். கேரளாவில் பாரம்பரிய தெய்யம் நிகழ்ச்சிகள் அக்டோபரில் தொடங்கி மே மாதம் வரை தொடரும்.
கண்ணூர் மற்றும் காசர்கோடில் உள்ள பல கோவில்களில் டிசம்பர் முதல் ஏப்ரல் வரை ஒவ்வொரு குளிர்காலத்திலும் தெய்யம் நடன நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. நானூறுக்கும் மேற்பட்ட வெவ்வேறு வகையான தெய்யங்கள் உள்ளன, ஒவ்வொன்றும் அணிகலன்கள், கருவிகள் மற்றும் அசைவுகளுக்கு அதன் சொந்த விதிகளைக் கொண்டுள்ளன. விஷ்ணுமூர்த்தி, குலிகன், குட்டிச்சாத்தன் ஆகிய மூன்றும் மிகவும் பிரசித்தி பெற்ற தெய்யங்கள்.
தெய்யம் என்பது தெய்வீக நடனம் என்பது நாட்டுப்புறக் கலை மட்டுமல்ல. ரிஷப் ஷெட்டியின் காந்தாரா திரைப்படம் வெளியான பிறகு அனைவரின் கவனத்தையும் கவர்ந்தது. காந்தாரா திரைப்படத்தின் மூலம் பஞ்சுருளி தெய்யம் என்ற நடனம் எனும் வார்த்தை இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்தது. கர்நாடக மாநிலத்தின் மங்களூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள அம்மன் கோவில்களில் நடைபெறும் ஒரு வித நடனக்கலைக்கு பெயரே தெய்யம். வாராகி அம்மனின் அவதார ரூபத்தில் வண்ண ஆடைகள் உடுத்தி, பச்சை பனை ஓலைகள் பின்னந்தலையில் பின்னி, உடம்பு முழுவதும் பித்தளை ஆபரணங்களால் அலங்கரித்து, மூகத்தில் சாயம் பூசி இந்த நடன நிகழ்ச்சி நடைபெறும். கன்னடா படமான காந்தாராவில் பஞ்சுருளி தெய்யம் எனும் நடனம் இடம் பெற்றது. அப்பொழுது முதலே தமிழ்நாட்டிலும் சில தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் காந்தாரா போல தெய்யம் நடனம் ஆடப்பட்டு வருகிறது.
கேரளா மற்றும் கர்நாடக மாநிலத்தில் மட்டுமே பார்க்க கூடிய இந்த தெய்வீக தெய்யம் நடனம் தஞ்சையில் நடைபெற்றதால் அதிக அளவிலான பொதுமக்கள் ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர். தஞ்சாவூரில் கலை கலாச்சார விழாவில் ஆடப்பட்ட தெய்யம் நடனத்தை மக்கள் மெய்சிலிர்க்க ரசித்தனர். நடனம் முடிந்த உடன் மக்கள் எழுப்பிய கரவொலி அடங்க வெகுநேரமானது.