புறகணிக்கப்பட்ட முக்கிய மைதானங்கள்… உலகக்கோப்பையை ஆட்டிப்படைக்கும் அரசியல் என்ன?

ICC World Cup 2023: 2023 ஆடவர் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பைக்கான மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அட்டவணையை அறிவித்தது ஐசிசி நேற்று அறிவித்தது. போட்டி தொடங்க இன்னும் 100 நாட்கள் உள்ளன. அகமதாபாத்தின் நரேந்திர மோடி மைதானத்தில் வரும் அக்டோபர் 5 ஆம் தேதி போட்டியின் தொடக்க ஆட்டமும், நவம்பர் 19ஆம் தேதி இறுதிப்போட்டியும் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மும்பை மற்றும் கொல்கத்தா முறையே நவம்பர் 15,16 ஆம் தேதிகளில் அரையிறுதி போட்டியை நடத்துகின்றன.

மிகப்பெரிய தொடர்

ஒட்டுமொத்தமாக, 10 மைதானங்கள் உலகக்கோப்பை போட்டிகளை நடத்தும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. இது வரலாற்றில் இதுவரை இல்லாத மிகப்பெரிய ஐசிசி நிகழ்வாகும். குஜராத், மும்பை, கொல்கத்தா மைதானங்களை தவிர, மற்ற ஏழு நகரங்கள் பெங்களூரு, சென்னை, டெல்லி, தர்மசாலா, ஹைதராபாத், லக்னோ மற்றும் புனே ஆகும். 

முக்கிய நகரங்கள் மிஸ்ஸிங்

பொதுவாக, மெட்ரோ நகரங்களில்தான் உலகக் கோப்பை போட்டிகள் நடக்கின்றன. ஆனால் மண்டல வாரியாகவும் சில போட்டிகள் நடக்கும். மேலும் இது ஒரு ஐசிசி நிகழ்வாக இருந்தாலும், பெரும்பாலும் உள்ளூர் ஏற்பாட்டுக் குழுவான பிசிசிஐயின் பரிந்துரைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. 2023 உலகக் கோப்பைக்கான சில பெரிய மைதானங்கள் சேர்க்கப்பட்டுள்ள நிலையில், சில முக்கிய நகரங்கள் – மொஹாலி, இந்தூர், ராஜ்கோட், ராஞ்சி மற்றும் நாக்பூர் போன்றவற்றைத் தவறவிட்டதால், இந்த மைதானங்களின் அதிகாரிகள் ஏமாற்றமடைந்துள்ளனர்.

எதிர்பார்ப்பும், ஏமாற்றமும்

இந்தூரில் உள்ள ஹோல்கர் ஸ்டேடியம் பல்வேறு வடிவங்களில் சர்வதேச போட்டிகளை தொடர்ந்து நடத்தி வருகிறது. சமீபத்தில். ஆஸ்திரேலியா அணியுடனான பார்டர்-கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் ஒரு டெஸ்ட் போட்டி அங்கு வெளியிடப்பட்டது. இருப்பினும், அந்த மைதானம் உலகக் கோப்பை போட்டியைத் தவறவிட்டதால், மத்தியப் பிரதேச கிரிக்கெட் சங்கத் தலைவர் அபிலாஷ் காண்டேகர் ஏமாற்றமடைந்தார்.

“இந்தூரில் 1987ஆம் ஆண்டு ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே உலகக் கோப்பை போட்டி நடைபெற்றது. இந்தூர் தற்போது புறக்கணிக்கப்பட்டதால் நாங்கள் வருத்தப்படுகிறோம். பிசிசிஐயின் நிர்ப்பந்தம் எனக்குத் தெரியாது. இந்தூர் ஒரு நீண்ட நெடிய கிரிக்கெட் வரலாற்றைக் கொண்டுள்ளது, எனவே உலகக் கோப்பை போட்டி நடக்கும் என்று நாங்கள் எதிர்பார்த்தோம். இது உலகக் கோப்பை போட்டி நடைபெற்றிருக்க வேண்டிய மைதானம்” என்று காண்டேகர் ஊடகங்களிடம் கூறினார். 

அனைத்தும் அரசியல்…

2011 ஒருநாள் உலகக்கோப்பை தொடரில், இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிரடியான அரையிறுதி ஆட்டத்தை அரங்கேற்றிய மொஹாலி, தற்போதைய உலகக் கோப்பை போட்டியில் தவறவிட்ட மற்றொரு முக்கிய இடம். குறிப்பாக, மொஹாலி 1996ஆம் ஆண்டு முதல் உலகக் கோப்பை போட்டிகளை நடத்துகிறது.

“பெருநகரங்கள் மற்றும் அலுவலகப் பணியாளர்கள் இருக்கும் நகரங்களில் மட்டுமே போட்டிகள் ஒதுக்கப்பட்டதாக தெரிகிறது. நாங்கள் மிகவும் கடினமாக முயற்சி செய்தோம், ஆனால் ஒரு போட்டியை கூட பெற முடியவில்லை. ஒரு பயிற்சி போட்டியைக் கூட பெறாதது ஏமாற்றமளிக்கிறது” என்று பஞ்சாப் கிரிக்கெட் சங்க வட்டாரம் தெரிவித்துள்ளது. பஞ்சாப் விளையாட்டுத் துறை அமைச்சர் குர்மீத் சிங் மீட் ஹேயர், மொஹாலியை மைதானங்களின் பட்டியலில் இருந்து நீக்கியது மிகப்பெரும் அரசியல் முடிவு என்று கருத்து தெரிவித்துள்ளார்.

“உலகக் கோப்பை இந்தியாவுக்கு வருவது மகிழ்ச்சி அளிக்கிறது, ஆனால் இந்திய கிரிக்கெட்டின் பல சூப்பர் ஸ்டார்களை உருவாக்கிய மைதானம், நாட்டின் முதல் ஐந்து மைதானங்களில் ஒன்றாக இருந்த ஒரு மைதானத்திற்கு ஒரு ஆட்டம் கூட கிடைக்கவில்லை என்பது வருத்தமளிக்கிறது. மறுபுறம், அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் தொடக்க ஆட்டம் மற்றும் இறுதிப் போட்டி மற்றும் இந்தியா-பாகிஸ்தான் இடையே பெரிய ஆட்டம் நடைபெறுகிறது. அண்டை மாநிலத்தில் இருக்கும் தர்மசாலாவுக்கும் ஐந்து ஆட்டங்களை வழங்குகிறீர்கள், ஆனால் பஞ்சாப்புக்கு ஒன்று கூட கிடைக்கவில்லை. இதன் மூலம் அரசியல் நடத்தப்படுவது தெளிவாகிறது,” என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.