சென்னை: எம். குமரன் சன் ஆஃப் மகாலக்ஷ்மி, கஜினி, போக்கிரி என பல ஹிட் படங்களில் நடித்து தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வந்த நடிகை அசின் தொழிலதிபர் ராகுல் ஷர்மாவை திருமணம் செய்து வாழ்ந்து வரும் நிலையில், இருவருக்கும் இடையே விவாகரத்து என வதந்தி ஒன்று தீயாய் பரவியது.
வட இந்திய மீடியாக்களில் நடிகை அசின் தொழிலதிபர் ராகுல் ஷர்மாவை விவாகரத்து செய்யப் போவதாக வெளியான செய்திகளை பார்த்து ஷாக்கான அசின் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதிரடியாக அதற்கு மறுப்பு தெரிவித்து போஸ்ட் போட்டுள்ளார்.
கடந்த 2001ம் ஆண்டு மலையாளத்தில் வெளியான நரேந்திரன் மகன் ஜெயகாந்தன் வகா படத்தின் மூலம் திரைத்துறையில் நடிகையாக அறிமுகமானாவர் அசின்.
ஹிட் ஹீரோயின்: 2004ல் ஜெயம் ரவிக்கு ஜோடியாக எம். குமரன் சன் ஆஃப் மகாலக்ஷ்மி படம் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமான அசின் உள்ளம் கேட்குமே, மஜா, சிவகாசி, வரலாறு, ஆள்வார், போக்கிரி, வேல், தசாவதாரம், கஜினி, காவலன் உள்ளிட்ட பல தமிழ்ப் படங்களில் நடித்தார்.
அசின் நடிப்பில் வெளியான அத்தனை படங்களுமே சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தன. ஒரு சில படங்கள் மட்டும் தான் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. காவலன் படத்திற்கு பிறகு பாலிவுட்டில் நடிக்க ஆரம்பித்த அசின் ரெடி, ஹவுஸ்ஃபுல் 2, போல் பச்சான், கில்லாடி 786, ஆல் இஸ் வெல் உள்ளிட்ட படங்களில் நடித்தார். அதன் பின்னர் திருமணம் செய்துக் கொண்டு கணவரையும் குழந்தையையும் கவனிக்க ஆரம்பித்து விட்டார்.
மைக்ரோமேக்ஸ் ஓனர்: கஜினி படத்தில் செல்போன் கம்பெனி ஓனரான சஞ்சய் ராமசாமியை தெரியாமல் காதலித்தது போலவே நிஜத்திலும் மைக்ரோமேக்ஸ் ஓனர் ராகுல் ஷர்மாவை காதலித்து 2016ம் ஆண்டு திருமணம் செய்துக் கொண்டார்.
இந்த தம்பதியினருக்கு 2017ம் ஆண்டு அரின் எனும் பெண் குழந்தை பிறந்து வளர்ந்து வருகிறது. இந்நிலையில், திடீரென அசின் பற்றிய வதந்தி ஒன்று வட இந்தியாவில் தீயாக பரவி வருகிறது.
அசின் விவாகரத்து வதந்தி: நடிகை அசின் தனது கணவருடன் சம்மர் ஹாலிடே டூர் சென்றிருந்த நிலையில், திடீரென அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்ட கணவரின் புகைப்படங்களை எல்லாம் அவர் டெலிட் செய்து விட்டார்.
நடிகைகள் சோஷியல் மீடியாவில் போட்டோக்களை டெலிட் செய்தாலே விவாகரத்து தான் என்கிற முடிவுக்கு வந்து விட்ட நெட்டிசன்கள் அசின் விவாகரத்து செய்யப் போகிறாரா என சோஷியல் மீடியாவில் பதிவிட சில யூடியூப் சேனல்கள் அசின் விவாகரத்து செய்து விட்டார் என்றே வதந்தியை கிளப்பினர்.
ஆத்திரமடைந்த அசின்: இந்த செய்தி நடிகை அசின் பார்வைக்கு சென்ற நிலையில், தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு போஸ்ட் போட்டு இது முற்றிலும் வதந்தி என சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
நாங்களே ஜாலியாக டூர் செய்துக் கொண்டு பிரேக்ஃபாஸ்ட் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது இப்படியொரு கொஞ்சம் கூட லாஜிக்கே இல்லாத ஒரு செய்தி வருவதை பார்த்து வேடிக்கையாகத்தான் இருக்கு என்றும் உங்களுக்கு வேற வேலை இல்லையா? இன்னும் பெட்டரா ஏதாவது ட்ரை பண்ணுங்க என நடிகை அசின் விவாகரத்து வதந்திக்கு உடனடியாக முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.