தமிழகத்தின் பொருளாதாரக் குற்றப் பிரிவின் ஐ.ஜி.யாக இருக்கும் ஆசியம்மாள் எல்லோரது கவனத்தையும் தன்பக்கம் ஈர்த்திருக்கிறார். தமிழகத்தில் பல ஆண்டு காலமாக மோசடியில் ஈடுபட்டுவந்த நிறுவனங்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்ததுடன் இல்லாமல், இந்த நடவடிக்கைகள் குறித்த அப்டேட்ஸ்களைப் பத்திரிகையாளர்களை அழைத்து விளக்கமாக எடுத்துச் சொல்லி இருக்கிறார்.
தமிழகத்தில் நடந்துவந்த மோசடித் திட்டங்கள் பற்றி நாணயம் விகடன் வார இதழ் கடந்த பல ஆண்டுகளாகவே தொடர்ந்து கட்டுரை வெளியிட்டு, மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. இந்த மோசடி நிறுவனங்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று நாணயம் விகடன் தொடர்ந்து கோரிக்கை வைத்துவந்த அதே சமயத்தில், மக்களும் இது மாதிரியான மோசடித் திட்டங்களில் இருந்து விலகி இருக்கவேண்டும் என்று அறிவுரை சொல்லி வந்தது.
தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டுவந்த மோசடி நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று தொடர்ந்து சொல்லிவந்தாலும், பெரிய அளவில் நடவடிக்கை எடுக்கப்படாததன் காரணமாகத்தான் பி.எ.சி.எல், எம்.ஆர்.டி.டி., செந்தூர்ஃபின்கார், எல்ஃபின், ஆருத்ரா, ஹிஜாவு, நியோமேக்ஸ் என பல மோசடி நிறுவனங்கள் உருவாகி, மக்களின் பணம் பல ஆயிரம் கோடிக்குமேல் பறிபோனது.
குறிப்பாக, தமிழ்நாட்டில் ஆருத்ரா, ஹிஜாவ், ஐஎப்எஸ் உள்ளிட்ட 21 நிதி நிறுவனங்களில் 3 லட்சத்துக்கும் அதிகமானனோர், அதிக வட்டி பணத்துக்கு ஆசைப்பட்டு ரூ.14,168 கோடி முதலீடு செய்து ஏமாந்துள்ளனர். இது புகார் அளித்தவர்கள் போட்டதாக சொல்லப்படும் பணம் மட்டுமே ஆகும். ஆனால், இது மாதிரியான மோசடி நிறுவனங்களில் பணம் போட்டு இழந்தவர்களில் 80% புகார் செய்வதே இல்லை. அந்தப் பணத்தையும் சேர்த்துக் கணக்கிட்டால், பல்லாயிரம் கோடி ரூபாய் மக்கள் பணம் பறிபோயிருக்கும் என்பது நிச்சயம்!
ஆனால், பொருளாதாரக் குற்றப் பிரிவின் ஐ.ஜி.யாக ஆசியம்மாள் பதவியேற்றபிறகு, மோசடி நிறுவனங்கள் மீதான நடவடிக்கை துரிதமடைந்திருக்கிறது. கடந்த சில மாதங்களாக மோசடி நிறுவனங்கள் மீது பொருளாதாரக் குற்றப் பிரிவு என்னென்ன நடவடிக்கை எடுத்திருக்கிறது என்பதை, சென்னை அசோக் நகரில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவு தலைமை அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பின் போது ஐஜி ஆசியம்மாள் விளக்கமாக எடுத்துச் சொன்னார்.
அவர் கூறியதாவது…
‘‘நியோமேக்ஸ் நிறுவனம் தொடர்பாக கடந்த வழக்கு பதிவு செய்திருக்கிறோம். 15 நபர்களிடம் இருந்து சுமார் 4 கோடி ரூபாய் அளவுக்கு புகார்களைப் பெற்றுள்ளோம். நியோமேக்ஸ் நிறுவனத்தில் ஐந்து முக்கியமான நிறுவனங்களும் 15 துணை நிறுவனங்களும் உள்ளன. இந்த நிறுவனங்கள் தொடர்பாக 15 இடங்களில் சோதனை நடத்தினோம். இந்தச் சோதனையில் 9 லட்சம் ரூபாயும், 1000 கிராம் தங்கமும், 13 கிலோ வெள்ளியும் பிடிபட்டுள்ளது. பல லட்சம் மதிப்புள்ள கார்களும், இரு சக்கர வாகனங்களும் பிடிபட்டுள்ளன. இந்த நிறுவனத்தை நடத்திவந்தவர்களின் வங்கிக் கணக்குகளை முடக்க நடவடிக்கை எடுத்துவருகிறோம். 62 அசல் பத்திரங்களைக் கைப்பற்றி இருக்கிறோம்.
இந்த நிறுவனம் குறித்த தனிப்பட்ட நபர்கள் புகார் சொன்னால், உடனே அவர்களுக்கு பணம் தந்து வாயை மூடும் வேலையை இந்த நிறுவனம் செய்துவந்தது. இனி அப்படி செய்யாமல், மக்கள் தைரியமாக முன்வந்து நியோமேக்ஸ் நிறுவனத்தின் மீது புகார் அளிக்கலாம்.
ஐ.எஃப்.எஸ் நிறுவனத்தின் மீது ஏற்கெனவே குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துவிட்டோம். 132 சொத்துகளைக் கண்டறிந்திருக்கிறோம். இதன் கைட்லைன் மதிப்பு சுமார் 32 கோடி. இதன் மார்க்கெட் மதிப்பைக் கணக்கிட்டால் இன்னும் பலமடங்கு அதிகமாக இருக்கும். மோகன்பாபுவின் பெயரில் 8 சொத்துகள், சரவணக்குமார் பெயரில் 22 சொத்துகள், ஜகந்நாதன் பெயரில் 13 சொத்துகள் என மொத்தம் 132 சொத்துகளைக் கண்டறிந்துள்ளோம்.
அரூத்ரா நிறுவனத்தின் 49-க்கும் மேற்பட்ட சொத்துகளைக் கண்டறிந்திருக்கிறோம். இவற்றின் கைட்லைன் மதிப்பு 24 கோடிக்குமேல். மார்க்கெட் மதிப்பின்படி பார்த்தால் பல மடங்கு அதிகமாக இருக்கும்.
ஹிஜாவு நிறுவனத்தின் 139 சொத்துகள் கண்டறியப்பட்டுள்ளன. இவற்றின் கைட்லைன் மதிப்பு 13 கோடி ரூபாய்க்குமேல்.
தமிழகம் முழுவதும் 3 லட்சம் பேரிடம் ரூ.14,168 கோடி மோசடி செய்த விவகாரத்தில் ஆருத்ரா, ஹிஜாவ், ஐஎப்எஸ் நிதி நிறுவனங்களின் வழக்குகளில் மட்டும் 1,500 ஏஜென்டுகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். முதல்கட்டமாக 200 பேர் நேரில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நடக்கும் மோசடி நிறுவனங்கள் பற்றிய தகவல்களை மக்கள் தைரியமாக எங்களிடம் சொல்லலாம். நாங்கள் நடவடிக்கை எடுக்கத் தயாராக இருக்கிறோம்’’ என்று தெரிவித்துள்ளார்.
இதுகுறித்த புகாரின் பேரில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் அந்த நிறுவனங்களின் இயக்குனர்கள், ஏஜென்ட்டுகளை கைது செய்து வருகின்றனர். மேலும், வெளிநாடுகளில் தலைமறைவாக உள்ள குற்றவாளிகளையும், அவர்களின் சொத்துகளை முடக்கவும் இன்டர்போல் போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
காலம் கடந்த நடவடிக்கைகள்தான். ஆம், மோசடி நிறுவனங்கள் குறித்து தொடர்ந்து நாம் செய்திகளை வெளியிட்டு வருகிறோம். நம் வரைக்கும் தகவல்கள் வருகின்றன என்றால், காவல் துறையினரின் கவனத்துக்கு வராமலா இருக்கும்? சொல்லப்போனால், கயவாளி காக்கிகள் சிலருடைய ஆசிகளுடன் தான் இந்தப் பொருளாதார மோசடிக் கும்பல்கள் நடைபோடுகின்றன என்பது ஆசியம்மாளுக்கும் தெரியும். சமீபத்தில், இதே ஆசியம்மாள் தலைமையிலான பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீஸார்தான், வேலூர் ஐஎஃப் எஸ் மோசடி கும்பலுடன் தொடர்புடைய முன்னாள் காவல்துறை அதிகாரியான ஹேமந்திர குமாரைக் கைது செய்தனர்.
இதைப் பற்றி பேசும் நேர்மையான காக்கிகள் சிலர்,
‘’வேலூர் ஐ.எஃப்.எஸ் நிறுவனத்துடன் தொடர்பிலிருந்த ஹேமந்திர குமார், காவல் துறை பலத்துடன் மோசடிக்கு உதவியிருக்கிறார். ஒருகட்டத்தில் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, ஐ எஃப் எஸ் நிறுவனத்திலேயே இணைந்துவிட்டார். அந்த அளவுக்கு பணம் கொழித்திருக்கிறது.
அத்துடன், ‘உள்ளே… வெளியே’ மங்காத்தா ஸ்டைலில், இவர் வெளியே இருந்துகொண்டு, உள்ளே இருந்த காக்கிகள் பலரையும் மோசடிக்குப் பயன்படுத்தியுள்ளார். அப்படி மோசடிக்கு உடந்தையாக இருந்தவர்களில் உயர் அதிகாரிகளான காக்கிகள் சிலரும் அடக்கம். அவர்களெல்லாம் நடவடிக்கை ஏதுமின்றி தப்பிவிட்டனர்” என்று குமுறலை வெளிப்படுத்தினர்.
இந்த இரு ஐ எஃப் எஸ் மட்டுமல்ல, ஏற்கெனவே சிக்கியிருக்கும் நியோமேக்ஸ், பி.ஏ.சி.எல் உள்ளிட்ட அத்தனை மோசடிக் கும்பல்களின் பின்னணியிலும் கயவாளி காக்கிகளின் ‘மங்காத்தா’ ஆட்டம்தான். சிக்காமல் இருக்கும் கும்பல்களைக் காப்பாற்றிக் கொண்டிருப்பதும் இதே ‘மங்காத்தா’தாக்கள்தான்.
இவர்களுடன் அனைத்துக் கட்சி அரசியல்வாதிகளும் கைகோத்து செயல்பட்டு வருகின்றனர். அவர்கள் மீதெல்லாம் தைரியமாக `கை’ வைக்கவேண்டும் பொருளாதாரக் குற்றப்பிரிவு.
இது மட்டுமல்ல, இன்னும் எண்ணற்ற மோசடிக்கும்பல்கள் ‘கடை’ திறந்துவைத்துள்ளன. மேற்கொண்டும் ‘கடை’ திறக்கக் காத்திருக்கின்றன. பொதுமக்கள் ஏமாந்துபோய் புகார் கொடுத்தால்தான் நடவடிக்கை எடுப்போம் என்று காத்திருக்காமல், `போலீஸ் பவரை’ உடனுக்குடன் காட்ட ஆசியம்மாள் முன்வர வேண்டும். அதற்கு முன்னோட்டமாக இந்த ‘உள்ளே.. வெளியே’ மங்காத்தாக்களை கொத்தோடு தூக்க வேண்டும்.
சாதிப்பாரா ஆசியம்மாள்?