இம்பால், ஜூன் 28-
மணிப்பூரில் நடக்கும் கலவரத்தை காரணமாக வைத்து, அரசு ஊழியர்கள் பலரும் பணிக்கு வர மறுப்பதால், ‘வேலை பார்க்காவிட்டால் சம்பளம் இல்லை’ என்ற புதிய விதிமுறையை, அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
குற்றச்சாட்டு
வட கிழக்கு மாநிலமான மணிப்பூரில் முதல்வர் பைரேன் சிங் தலைமையிலான பா.ஜ., ஆட்சி நடக்கிறது.
இங்கு, இரு சமூகத்தினருக்கு இடையே ஏற்பட்ட மோதல், பெரும் கலவரமாக மாறி, ஒரு மாதமாக வன்முறை சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன.
இந்நிலையில், வன்முறையை காரணமாக வைத்து பெரும்பாலான அரசு ஊழியர்கள் பணிக்கு வருவது இல்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதனால், அரசு அலுவலகங்களில் பணிகள் முடங்கியுள்ளன. பொதுமக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதையடுத்து, மணிப்பூர் மாநில அரசு அதிரடி நடவடிக்கையை அறிவித்துள்ளது.
இது குறித்து, அம்மாநில நிர்வாகத் துறை வெளியிட்டுள்ள அறிக்கை:
வேலைக்கு வராத அரசு ஊழியர்களுக்கு சம்பளம் இல்லை என்ற புதிய விதிமுறை நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.
முதல்வர் தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அனைத்து அரசு துறை செயலர்களும், தங்கள் துறைக்கு உட்பட்ட ஊழியர்கள் பெயர், அவர்களது பணி, அவர்கள் வேலைக்கு வந்த நாட்கள், வராத நாட்கள் உள்ளிட்ட அனைத்து விபரங்களையும் தலைமைச் செயலகத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும். முன் அனுமதி பெறாமல், தகுந்த காரணம் இல்லாமல் விடுமுறை எடுத்த ஊழியர்களின் விபரங்களையும் அனுப்ப வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மணிப்பூரில் அரசு துறைகளில் ஒரு லட்சம் ஊழியர்கள் பணியாற்றுகின்றனர்.
ராணுவம் கோரிக்கை
மணிப்பூரில் கலவரம் நடக்கும் பல இடங்களில் பெண்களும் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
இவர்கள் முக்கிய சாலைகளை மறித்து போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இதனால், ராணுவ வீரர்கள் பாதுகாப்பு பணிக்காக செல்வதிலும், அத்தியாவசிய பொருட்களின் போக்குவரத்திலும் இடையூறு ஏற்படுகிறது.
இதையடுத்து ராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக எங்களை பணி செய்ய அனுமதியுங்கள்’ என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்