கோவை: தமிழகத்தில் சென்னையை தொடர்ந்து கோயம்புத்தூர், மதுரையில் மெட்ரோ ரயில் திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளது. இந்த இருநகரங்களிலும் இதற்கான ஆய்வு நடைபெறும் நிலையில், வரும் ஜூலை 15-ம் தேதிக்குள் விரிவான திட்ட அறிக்கையை தமிழக அரசிடம் சமர்ப்பிக்க சென்னை மெட்ரோ அதிகாரிகள் முடிவு செய்துள்ளது.
தமிழ்நாட்டின் தலைநகரமான சென்னையில் மெட்ரோ ரயில் திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. புறநகர் ரயில் வழித்தடங்கள் இல்லாத, அதேநேரம் சென்னையின் மிகமிக முக்கியமான பகுதிகளான வண்ணாரப்பேட்டை விமான நிலையம் இடையே கோயம்பேடு, கீழ்பாக்கம் அண்ணாநகர் வழியாக ஒரு வழித்தடத்திலும், சைதாப்பேட்டை, ஆயிரம் விளக்கு வழியாக மறுவழித்தடத்தில் இயக்கப்படுகிறது. சென்னை இரண்டு வழித்தடங்களில் மொத்தம் 54 கி.மீ. தொலைவுக்கு மெட்ரோ ரயில்கள் இயங்கி வருகிறது.
சென்னையில் மிக மோசமான போக்குவரத்து நெரிசலில் வாகனங்களில் செல்வதற்கு மெட்ரோ ரயிலில் செல்வது எளிது மற்றும் பாதுகாப்பானது என்பதால், பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதையடுத்து, சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் 3 வழித் தடங்களில் செயல்படுத்தப்பட உள்ளது.
மாதவரத்தில் இருந்து சிப்காட் வரை 45.8 கிலோ மீட்டர் தூரத்துக்கு 3-வது வழித்தடம் அமைக்கப்பட்டு வருகிறது. இதேபோல் கலங்கரை விளக்கத்தில் இருந்து பூந்தமல்லி புறவழிச்சாலை வரை 26.1 கிலோ மீட்டர் தூரத்துக்கு 4-வது வழித்தடம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதேபோல் மாதவரத்தில் இருந்து சோழிங்கநல்லூர் வரை 47 கிலோ மீட்டர் தூரத்துக்கு 5-வது வழித்தடமும் அமைக்கப்பட்டு வருகிறது.சென்னையில் வரும் 2026 முதல் 2028ம் ஆண்டுகள் கிட்டத்தட்ட மெட்ரோ பணிகள் அனைத்தும் முடிந்து மெட்ரோ ரயில்கள், சென்னையில் டவுன் பஸ் போல் ஓடப்போகிறது.
இந்நிலையில் சென்னையை போல் மற்ற பெருநகரங்களிலும், தொலைநோக்கு பார்வையுடன் மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசுஆர்வம் காட்டி வருகிறது. குறிப்பாக சென்னைக்கு அடுத்தபடியாக பெரிய நகரமான கோவையிலும், மதுரையிலும் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
கோயம்புத்தூரில் ரூ.9,000 கோடியிலும், மதுரையில் ரூ.8,500 கோடியிலும் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. சென்னை மெட்ரோ ரயில் அதிகாரிகள், கோவை, மதுரையில் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்துவதற்காக ஆலோசனை நடத்தினர். தொடர்ந்து, விரிவான திட்ட அறிக்கை தொடர்பாக ஆய்வு மேற்கொள்ள நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். தற்போது, இந்த ஆய்வு பணி தீவிரமாக நடைபெறுகிறது.
இதற்கிடையே, சென்னையில் இருந்து கோயம்புத்தூர், மதுரை ஆகிய நகரங்களுக்கு மெட்ரோ ரயில் நிறுவன உயர் அதிகாரிகள் சென்று, ஆய்வு நடத்தி வருகின்றனர். விரிவான திட்ட அறிக்கையை சமர்ப்பிப்பது தொடர்பாக ஆலோசித்தனர்.
இது குறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறும் போது, “சென்னையை தொடர்ந்து, மதுரை மற்றும் கோயம்புத்தூரிலும் மெட்ரோ ரயில் திட்டம் செயல் படுத்த விரிவான திட்ட அறிக்கை தயாரிப்பு பணிகள் 90 சதவீதம் நிறைவடைந்துள்ளன.
எங்கெல்லாம் மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைகின்றன, பேருந்து, ரயில் நிலையங்கள் இணைப்பு பகுதிகள், பயணிகள் அதிகமாக இருக்கும் இடங்களில் பெரிய மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைப்பது குறித்து கடந்த இரண்டு நாள்களாக கோயம்புத்தூர் மற்றும் மதுரையில் ஆய்வு நடத்தினோம். விரிவான திட்ட அறிக்கையை வரும் ஜூலை 15ம் தேதிக்குள் தமிழக அரசிடம் சமர்ப்பிக்க முடிவு செய்துள்ளோம்.அதில் ரயில் நிலைய வகை, செலவுகள், செயல்படுத்தப்படும் முறை, மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைவிடங்கள் உள்பட பல்வேறு விவரங்கள் இடம் பெறும் என்றனர்.