Dont the people of the country have brains? The court blasted the film crew! *Adipurush | நாட்டு மக்களுக்கு மூளை இல்லையா? பட குழுவினரை விளாசிய நீதிமன்றம்! *ஆதிபுருஷ்

லக்னோ, ஆதிபுருஷ் படம் தொடர்பான வழக்கில், ‘நாட்டு மக்களை மூளையற்றவர்களாக கருதுகிறீர்களா’ என, படக் குழுவினரிடம், அலகாபாத் உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

இந்த வழக்கில், படத்தின் வசன கர்த்தா மனோஜ் முண்டாஷிர் சுக்லாவை சேர்க்க உத்தரவிட்டு, இது குறித்து ஒரு வாரத்திற்குள் அவர் விளக்கம் அளிக்கும்படி, ‘நோட்டீஸ்’ அளித்துள்ளது.

பாலிவுட் இயக்குனர் ஓம் ராவத் இயக்கத்தில், தெலுங்கு நடிகர் பிரபாஸ் நடிப்பில், ராமாயணத்தை தழுவி எடுக்கப்பட்டுள்ள ஆதிபுருஷ் படம், தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில், கடந்த 16ம் தேதி நாடு முழுதும் வெளியானது.

படத்தில் ஹிந்துக்களின் உணர்வுகளை புண்படுத்தும் வகையில் சில வசனங்கள் இடம் பெற்றதாக, சமூக வலைதளத்தில் சிலர் கண்டனம் தெரிவித்தனர். இதையடுத்து, சர்ச்சைக்குரிய வசனங்கள் திருத்தப்பட்டு மீண்டும் வெளியிடப்பட்டது.

இதற்கிடையே, மத உணர்வுகளை புண்படுத்தும் வகையில் ஆதிபுருஷ் உள்ளதாக கூறி படத்திற்கு தடை விதிக்க, உ.பி.,யில் உள்ள அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு, நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிமன்றம் கூறியதாவது:

ஆதிபுருஷ் படத்தை பார்த்து விட்டு, மக்கள் சட்டம் – ஒழுங்கு பிரச்னையை ஏற்படுத்தாதது நல்லது.

ஹனுமனையும், சீதையையும் ஒன்றுமில்லாதது போல் காட்டி உள்ளனர். மேலும், ஒருசில காட்சிகள், 18 வயதுக்கு மேற்பட்டோர் மட்டுமே பார்க்க வேண்டியது போல் உள்ளன.

இது, மிகவும் தீவிரமான விவகாரம். இதில், தணிக்கை குழு என்ன செய்தது என்றே தெரியவில்லை.

படத்தை நிறுத்தினால் மட்டுமே, உணர்வுகளால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் கிடைக்கும்.

படத்தை தயாரித்தவர்கள் நாட்டு மக்களையும், இளைஞர்களையும் மூளையற்றவர்களாகக் கருதுகின்றனரா? படம் முழுக்க, ராமர், லட்சுமணன், ஹனுமனைக் காட்டி விட்டு, ராமாயணம் இல்லை என்று சொன்னால் எப்படி?

இந்த வழக்கில், படத்தின் வசன கர்த்தா மனோஜ் முண்டாஷிர் சுக்லாவை சேர்க்க உத்தரவிடப்படுகிறது. இது குறித்து, அவர் ஒரு வாரத்திற்குள் விளக்கம் அளிக்க வேண்டும்.

இவ்வாறு நீதிமன்றம் கூறியது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.