புதிய சட்டத்தால் தென் கொரியாவில் அனைவருக்கும் வயது குறைந்தது: சுவாரஸ்யப் பின்னணி

சியோல்: தென் கொரியா இயற்றியுள்ள புதிய சட்டத்தினால் வயதை கணக்கிடும் பாரம்பரிய முறைகள் கைவிடப்பட்டு சர்வதேச நடைமுறை அமலுக்கு வருகிறது. இந்த அறிவிப்பு தென் கொரியர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

தென் கொரியாவில் வயதின் கணக்கீடு என்பது பிற நாடுகளிலிருந்து வேறுபடுகிறது. அவர்கள் வயதை கணக்கிட 2 முறையை பின்பற்றுகிறார்கள். அதாவது ஓர் குழந்தை பிறக்கும் போதே அது ஒரு வயதுடன் பிறப்பதாக அவர்கள் நிர்ணயிக்கின்றனர். அதாவது தாயின் கர்ப்பப் பையில் இருக்கும்போதே குழந்தையின் வயது எண்ணிக்கை தொடங்குகிறது.

இரண்டாவது முறை அந்நாட்டில் பிறந்த நாள் தேதியில் தான் ஒருவரின் வயது கூடுதல் பெறுகிறது என்றில்லை. ஜனவரி 1 ஆம் தேதியை அவர்கள் கடக்கும் போதே அவர்களுக்கு ஒரு வயது கூடி விடுகிறது. வயது கூடுவதில் பிறந்த தேதி கணக்கில் கொள்ளப்படாது.

இந்த நிலையில் இந்த முறைகளை நீக்கி தற்போது சர்வதேச அளவிலான வயது கணக்கீட்டு முறையை தென்கொரியா ஏற்றுக் கொண்டுள்ளது.தென் கொரியா பின்பற்றிய இந்த முறையால் ஒருவகையில் கொரியர்களுக்கு பொருளாதாரம், வேலை வாய்ப்பு சார்ந்த இழப்பீடுகளும், குழப்பங்களும் ஏற்படுவதாக அரசியல் கட்சிகள் தொடர்ந்து விமர்சனங்கள் எழுப்பி வந்தன. இந்த நிலையில் யூன் சுக் யோல்ட் தலைமையிலான அரசு இந்த மாற்றத்தை கொண்டுள்ளது. அதன்படி இனி பிறந்த நாள் அன்றே அனைவருக்கும் வயது அதிகரிக்கும். புதிய முறையை சுமார் 70 % தென்கொரிய மக்கள் இந்த மாற்றத்தை வரவேற்றுள்ளனர்.

புதிய சட்ட மாற்றம் குறித்து தென் கொரியாவைச் சேர்ந்த லீ பேசும்போது, “ இந்த அறிவிப்பு மகிழ்ச்சியாக உள்ளது. நான் அடுத்த வருடம் 60 வயதை கடக்க இருக்கிறேன். இந்த நிலையில் இந்த அறிவிப்பு நான் இளமையாக இருப்பதை உணர்த்துகிறது.” என்றார்.

அலுவலக ஊழியர் ஹாங் சுக் மின் பேசும்போது, “என் வயதை வெளிநாட்டவர்களிடம் கூறும்போதும் எப்போதும் நான் குழப்பம் அடைவேன். தற்போது அந்த பிரச்சினை தீர்ந்துள்ளது என்று நினைக்கிறேன்.” என்று தெரிவித்தார்.

எனினும் இந்த வயது கணக்கீடு மாற்றத்தால் புகையிலை பொருட்கள், மதுபானம் பயன்பாட்டை தீர்மாணிக்கும் வயதிலும் குழப்பங்கள் ஏற்படுவதாக சிலர் குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.