போபால்: மத்திய பிரதேச சட்டசபை தேர்தலில் ஆளும் பாஜக, காங்கிரஸ் இடையே மிக கடுமையான போட்டி இருக்கும் என ஏபிபி- சி வோட்டர் சர்வே முடிவுகள் தெரிவித்துள்ளன.
மத்திய பிரதேச மாநில சட்டசபை தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இத்தேர்தலில் ஆளும் பாஜக, பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவுகிறது.
230 இடங்களைக் கொண்ட மத்திய பிரதேச சட்டசபைக்கு 2018-ல் நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் 114 இடங்களில் வென்றது. பாஜக 109 இடங்களைக் கைப்பற்றியது. 4 சுயேட்சைகளுடன் இணைந்து காங்கிரஸ் கட்சி, கமல்நாத் தலைமையில் ஆட்சி அமைத்தது. ஆனால் ஜோதிராதித்யா சிந்தியா தலைமையில் 22 காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் பாஜகவுக்கு தாவியதால் கமல்நாத் அரசு கவிழ்ந்தது. இதனையடுத்து சிவராஜ் சிங் சவுகான் தலைமையில் பாஜக ஆட்சி அமைத்தது. தற்போது மத்திய பிரதேச சட்டசபையில் பாஜகவுக்கு 127 எம்.எல்.ஏக்களும் காங்கிரஸுக்கு 96 எம்.எல்.ஏக்களும் உள்ளனர்.
இத்தேர்தலைப் பொறுத்தவரை பாஜகவுக்கு கடும் சோதனையாக இருக்கும் என்றே கூறப்படுகிறது. இதுவரையான அனைத்து கருத்து கணிப்புகளுமே பாஜக பெரும் தோல்வியை தழுவும் என்றே கூறி வருகின்றன. இந்நிலையில் ஏபிபி- சிவோட்டர் கருத்து கணிப்பு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன.
ஏபிபி- சிவோட்டர் கருத்து கணிப்பு முடிவுகள்:
காங்கிரஸ் 108-120 இடங்கள் (41.4% வாக்குகள்)
பாஜக 106-118 இடங்கள் (41.3% வாக்குகள்)
2018-ம் ஆண்டை ஒப்பிடுகையில் காங்கிரஸ் கட்சிக்கு சுமார் 5% கூடுதல் வாக்குகள் கிடைக்குமாம். 2018-ல் காங்கிரஸ் கட்சி 36.4% வாக்குகள்தான் பெற்றது. 2018-ல் பாஜக 44.9% வாக்குகளைப் பெற்றிருந்தது. தற்போதைய தேர்தலில் 41.3% வாக்குகளைத்தான் பெறக் கூடும் என்கிறது இந்த கருத்து கணிப்பு.
கடந்த சில மாதங்களாக அதிரடியாக பல்வேறு நலத் திட்ட உதவிகளை, இலவசங்களை ஆளும் பாஜக முதல்வர் சிவராஜ்சிங் சவுகான் அறிவித்து வருவதால் பாஜகவுக்கான செல்வாக்கு சற்று கூடுதலாகி இருக்கிறது என்பதையே இந்த தேர்தல் கருத்து கணிப்புகள் தெரிவிக்கின்றன என்பது மூத்த பத்திரிகையாளர்கள் நிலைப்பாடு.