இனி சென்னை சிட்டியே மழை நீரை உறிஞ்சிவிடும்.. அப்படியே 'ஸ்பாஞ்சா' மாறுதாமே.. "டபுள் டமாக்கா" வேறு!

சென்னை:
சென்னை நகரில் இனி எங்குமே மழை நீரே தேங்காத அளவுக்கு ‘ஸ்பாஞ்ச் பூங்கா’ (Sponge Park) என்ற அசத்தலான திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் எதிர்வரும் வடகிழக்கு பருவமழையை சமாளிக்கும் விதமாக ஒட்டுமொத்த சென்னையையும் ஸ்பாஞ்ச் நகராமாகவே மாற்றும் அதிரடி நடவடிக்கையில் மாநகராட்சி நிர்வாகம் இறங்கியுள்ளது.

ஒருகாலத்தில் மழை என்றாலே சென்னைவாசிகள் சிதறி ஓடும் சூழ்நிலை இருந்தது. கொஞ்சம் கூடுதலாக மழை பெய்தாலும், சென்னையில் பல பகுதிகள் மூழ்கிவிடும் அளவுக்குதான் சிட்டின் உள்கட்டமைப்பு இருந்தது. சாலைகளில் படகு விடும் அளவுக்கு மோசமாக இருந்தது சென்னை.

ஆனால், இப்போது நிலைமை தலைகீழாக மாறிவிட்டது என்றே சொல்ல வேண்டும். போர்க்கால அடிப்படையில் சென்னையில் பதிக்கப்பட்ட வெள்ள நீர் குழாய்களால் இப்போது சாலைகளில் மழை நீர் தேங்குவதில்லை. சில இடங்களில் மட்டும் மழை நீர் தேங்குவது ஒரு பிரச்சினையாகவே இருக்கிறது.

பட்டையை கிளப்பும் ஸ்பாஞ்ச் பூங்கா:
இந்நிலையில், சென்னையில் ஒரு இடத்தில் கூட மழை நீர் தேங்கக்கூடாது என்பதற்காக ஸ்பாஞ்ச் பூங்கா திட்டத்தை மாநகராட்சி கையில் எடுத்துள்ளது. ஸ்பாஞ்ச் எப்படி தண்ணீரை உறிஞ்சுமோ அப்படி இந்த ஸ்பாஞ்ச் பூங்காக்கள் சாலையில் தேங்கும் மழை நீரை உறிஞ்சிவிடும். இதற்காக பூங்காங்களுக்கு நடுவே ஒரு பெரிய குளம் அமைக்கப்பட்டு அதனை சுற்றிலும் குழாய்கள் பதிக்கப்படும். மழைக்காலங்களில் நகரில் தேங்கும் மழை நீர் இந்தக் குழாய்கள் மூலமாக இந்தக் குளத்துக்கு சென்றுவிடும். அதிக அளவில் மழை நீரை உறிஞ்சும் அளவுக்கு பிரத்யேக மண்ணும், கடல் பாசிகளும் இந்தக் குளத்தின் அடிப்பகுதியில் இருக்கும்.

57 ஸ்பாஞ்ச் பூங்காக்கள்:
சமீபத்தில் கூட மண்டலம் 6-இல் உள்ள முரசொலி மாறன் பூங்காவில் ஸ்பாஞ்ச் திட்டம் செயல்படுத்தப்பட்டது. சாதாரண மழைக்கே முட்டி அளவுக்கு தண்ணீர் தேங்கும் அந்தப் பகுதி, ஸ்பாஞ்ச் பூங்கா அமைத்ததால் ஒரு சொட்டு தண்ணீர் கூட தேங்கவில்லை. இதன் பயனை கண்கூடாக பார்த்த தமிழக அரசு ஒட்டுமொத்த சென்னையையும் ஸ்பாஞ்ச் சிட்டியாக மாற்ற முடிவு செய்தது. அதன்படி, சென்னை முழுவதும் 57 ஸ்பாஞ்ச் பூங்காக்களை உருவாக்க மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்காக ரூ.7.67 கோடி ஒதுக்கப்பட்டது.

ஸ்பாஞ்ச் சிட்டி:
இந்நிலையில், எதிர்வரும் வடகிழக்கு பருவமழைக்கு முன்பாக 42 ஸ்பாஞ்ச் பூங்காக்களை உருவாக்கும் பணியில் சென்னை மாநகராட்சி தீவிரமாக ஈடுபட்டுள்ளது. சாலைகளை ஒட்டி அமைந்துள்ள பூங்காக்களை ஸ்பாஞ்ச் பூங்காக்களாக மாற்ற முடிவு செய்யப்பட்டு வேலை தொடங்கியுள்ளது. இதன் ஒருபகுதியாக, வடசென்னையின் தண்டையார்பேட்டையில் ரூ.8.5 லட்சத்துக்கு ஸ்பாஞ்ச் பூங்கா கிட்டத்தட்ட முடியும் நிலைக்கு வந்துவிட்டது. வட சென்னையில் 21 பகுதிகள் ஸ்பாஞ்ச் பூங்காங்களாக மாறவுள்ளன. பிற பகுதிகளிலும் இந்தப் பணிகள் நடைபெறவுள்ளன.

டபுள் டமாக்கா:
ஸ்பாஞ்ச் பூங்காவானது மழை நீரை உறிஞ்சி, தண்ணீர் தேங்குவதை தடுப்பதோடு மட்டுமல்லாமல் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நிலத்தடி நீரை பல மடங்கு அதிகரிக்கும் என்பதால் சென்னையில் எதிர்காலத்தில் தண்ணீர் பிரச்சினை என்ற பேச்சுக்கே இடமிருக்காது என்க் கூறுகின்றனர் இயற்கை ஆர்வலர்கள். ஆகவே, சென்னை மக்களுக்கு இது டபுள் டமாக்கா பரிசுதான்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.