என்னை அள்ளி அரவணைத்த கமல்.. இயக்குநர் மாரி செல்வராஜ் நெகிழ்ச்சி பதிவு!

சென்னை: பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய மாமன்னன் திரைப்படம் நாளை வெளியாக உள்ள நிலையில், நடிகர் கமல்ஹாசனை சந்தித்து படக்குழுவினர் நன்றி தெரிவித்துள்ளனர்.

மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகி உள்ள மாமன்னன் படத்தில், வடிவேலு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும், உதயநிதி, ஃபஹத் பாசில், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் நடித்துள்னனர்.

இப்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். ரெட் ஜெயன்ட் மூவீஸ் நிறுவனம் படத்தை தயாரித்துள்ளது. தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

மாமன்னன் நாளை ரிலீஸ்: மாமன்னன் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் மிகவும் பிரமாண்டமாக நடைபெற்றது. இதில் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான், நடிகர்கள் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, கீர்த்தி சுரேஷ், இயக்குநர் மாரி செல்வராஜ் உள்ளிட்ட படக்குழுவினருடன் கமல்ஹாசன், சிவகார்த்திகேயன், பா.இரஞ்சித் என தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திரங்கள் பலரும் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டனர்.

சர்ச்சை பேச்சு: இந்த விழாவில் பேசிய மாரி செல்வராஜ்,தேவர் மகன் திரைப்படம் தனக்குள் மனபிறழ்வை உண்டாக்கியது. அந்த படம் சரியா… தவறா என புரியாமல் மனதிற்குள் அப்படி ஒரு வலியை ஏற்படுத்தியது என்று கமலின் முன் பேசி இருந்தார். இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் மிகப்பெரிய அளவில் பேசுபொருளானது.

maamannan Director mari selvaraj and udhayanidhi stalin meet Kamal haasan

விளக்கம்: இதையடுத்து, இதற்கு விளக்கம் கொடுத்த மாரி செல்வராஜ், நான் மாமன்னன் படத்தின் கதையை எழுதுவதற்கு காரணம், தேவர் மகன் படத்தில் வடிவேலு நடித்த இசக்கி கேரக்டர்தான். எனக்கும் கமல் சாருக்கும் இடையே நடந்த உரையாடல், என் எமோஷன். மாமன்னன் படம் பற்றி பேசும்போது இசக்கி கேரக்டர் பற்றி பேசாமல் இருக்க முடியாது. அதனால் அந்த மேடையில் அப்படி பேசினேன் கமல் அதை புரிந்து கொண்டார் என விளக்கமும் கொடுத்திருந்தார்.

தீரா நம்பிக்கையோடும்: இந்நிலையில், உதயநிதி மற்றும் மாரி செல்வராஜ், கமல்ஹாசனை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர். இது தொடர்பாக மாரி செல்வராஜ் தனது ட்விட்டர் பதிவில் பெரும் ப்ரியத்தோடும் தீரா நம்பிக்கையோடும் என்னையும் என் படைப்புகளையும் அள்ளி அரவணைத்துக்கொண்ட கலைஞானி கமல் சாருக்கு இதயத்திலிருந்து என் நன்றியை உரித்தாக்குகிறேன் எனக் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.