வரலட்சுமி ரூட்டில் பயணிக்க துவங்கிய ரஜிஷா விஜயன்

தனுஷ் நடித்த கர்ணன் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் நுழைந்தவர் மலையாள நடிகை ரஜிஷா விஜயன். அடுத்ததாக ஜெய்பீம் படத்திலும் சமூக ஆர்வலராக நடித்து பாராட்டுக்களை பெற்றார். இந்த நிலையில் மலையாளத்தில் தொடர்ந்து அவர் நடித்து வரும் படங்களின் கதைகளும் அதில் அவர் ஏற்று நடிக்கும் கதாபாத்திரங்களும், தான் ஹீரோவுடன் டூயட் பாடும் ஒரு வழக்கமான நடிகை அல்ல என்கிற ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளன. குறிப்பாக தமிழில் எப்படி வரலட்சுமி தனித்துவம் வாய்ந்த கதாபாத்திரங்களையும், நெகட்டிவ் கதாபாத்திரங்களையும் மட்டுமே செலக்ட் செய்து நடித்து வருகிறாரோ அதே பாதையில் தான் தற்போது ரஜிஷா விஜயனும் பயணிக்க துவங்கியுள்ளார்.

கடந்த வருடம் வெளியான கீடம் என்கிற படத்தில் போலீசாரின் அனுமதி இன்றி சைபர் கிரைம் மூலமாக குற்றவாளிகளின் குற்ற செயல்களை அவர்களுக்கே தெரியாமல் அம்பலப்படுத்தும் கதாபாத்திரம் ஒன்றில் நடித்திருந்தார். அதற்கு அடுத்ததாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியான பகலும் பாதிராவும் என்கிற படத்தில் நாயகனையே பணத்திற்காக கொலை செய்யும் கதாபாத்திரத்தில் நடித்தார். இது தமிழில் கொன்றால் பாவம் என்கிற படத்தில் வரலட்சுமி ஏற்று நடித்திருந்த கதாபாத்திரம் தான். இந்த படத்தின் இயக்குனர் அஜய் வாசுதேவ் கூறும்போது கிட்டத்தட்ட நான்கு நடிகைகளிடம் இந்த கதாபாத்திரத்தில் நடிக்க பேசியபோது அனைவரும் இது ரிஸ்க் என மறுத்து விட்டனர். ஆனால் ரஜிஷா விஜயனோ உடனே ஒப்புக்கொண்டதுடன் அதில் எப்படி நடிப்பை வெளிப்படுத்தலாம் என ஆர்வமாக டிஸ்கஷன் செய்யும் அளவிற்கு முன் வந்தார் என்று கூறியுள்ளார்.

அதேபோல சமீபத்தில் வெளியான 'கொள்ள' (கொள்ளை) என்கிற படத்தில் தனது தாத்தாவின் ஆசையை நிறைவேற்றுவதற்காக ஒரு வங்கியை கொள்ளையடிக்க முயற்சிக்கும் பெண் கதாபாத்திரத்தில் நடித்து ஆச்சரியப்படுத்தினார். இப்படி தனித்தன்மை கொண்ட கதாபாத்திரங்களில் நடிப்பதன் மூலம் திரையுலகில் நீண்ட நாட்கள் நீடித்திருக்க முடியும் என்பதுடன் தனித்தன்மை வாய்ந்த நடிகை என்கிற அடையாளத்தையும் பெற முடியும் என நம்புகிறாராம் ரஜிஷா விஜயன்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.