சென்னை: சென்னை மாநகராட்சி முதன்முறையாக தெருவிளக்குகளை Refurbish செய்து பயன்படுத்த முடிவு செய்துள்ளது.
சென்னை மாநகராட்சியில் 15 மண்டலங்களில் 2.90 லட்சம் தெரு விளக்குகள் பராமரிக்கப்பட்டு வருகிறது. பேருந்து சாலைகளில் உள்ள தெரு விளக்குள், உட்புற சாலைகளில் உள்ள தெரு விளக்குகள், பூங்காவில் உள்ள விளக்குகள், உயர் கோபுர விளக்குகள் என்று பல்வேறு வகையான விளக்குகள் சென்னை மாநகராட்சியால் பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த விளக்குகளில் பெரும்பாலான விளக்குகள் எல்.இ.டி விளக்குகள் ஆகும். இதன் மூலம் சென்னை மாநகராட்சிக்கான மின் கட்டணம் சேமிக்கப்படுகிறது.
இந்நிலையில், தற்போது சென்னையின் பல்வேறு இடங்களில் தெரு விளக்குள் அமைக்கும் பணியை சென்னை மாநகராட்சி மேற்கொண்டு வருகிறது. இதன் உடன் சேர்த்து பழைய தெரு விளக்குகளை refurbish செய்து பயன்படுத்த சென்னை மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது. இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், “சென்னை மாநகராட்சியில் உள்ள சோடியம் விளக்குகளை எல்இடி விளக்குகளாக மாற்றும் பணி 2013ம் ஆண்டு தொடங்கியது. அதன்பிறகு தொடர்ந்து பழைய சோடியம் விளக்குகள், எல்இடி விளக்குகளாக மாற்றப்பட்டுவருகிறது.
புதிதாக பல்வேறு இடங்களில் எல்இடி விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு கடந்த 2013ம் ஆண்டு வாங்கி எல்இடி விளக்குகளின் வாரண்டி 7 ஆண்டுகள் ஆகும். இந்த 7 ஆண்டுகளில் இந்த விளக்குகளை ஏதாவது பிரச்சனை ஏற்பட்டால் அந்த நிறுவனங்களை சரி செய்து கொடுத்து விடும். 7 ஆண்டுகள் முடிந்த பிறகு மாநகராட்சி தான் பிரச்சினை ஏற்படும் விளக்குகளை சரி செய்ய வேண்டும்.
இதன்படி, தெரு விளக்குகளில் ஏதாவது சிறிய பிரச்சனை ஏற்பட்டால் மாநகராட்சியே உதிரி பாகத்தை வாங்கி சரி செய்யும். ஒன்று மேற்பட்ட பிரச்சனை ஏற்பட்டால் அதை refurbish செய்து பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதில் முதல் கட்டமாக 2 ஆயிரம் தெரு விளக்குகள் refurbish செய்ய அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு செய்தால், புதிதாக தெரு விளக்குகள் வாங்கும் செலவும் குறைகிறது. மேலும் ஒரு தெரு விளக்கின் வாழ் நாள் காலமும் அதிகிரிக்கிறது. முதல் முறையாக refurbish செய்யும் பணியை மேற்கொள்ள உள்ள மாநகராட்சி சென்னை மாநகராட்சி தான்” என்று அவர்கள் கூறினர்.