சென்னை: தயாரிப்பாளர் ரவீந்தர் அமெரிக்காவைச் சேர்ந்த இளைஞரிடம் ரூ.15 லட்சத்தினை ஏமாற்றியதாக புகார் எழுந்துள்ள நிலையில், இன்ஸ்டாகிராமில் கூலாக பதில் அளித்துள்ளார்.
தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகர் லிப்ரா புரொடக்ஷன் என்ற நிறுவனத்தின் மூலம் நட்புனா என்னனு தெரியுமா, நளனும் தமயந்தியும், முருங்கைக்காய் சிப்ஸ் போன்ற திரைப்படங்களை தயாரித்துள்ளார்.
இவர் கடந்தாண்டு சீரியல் நடிகை மகாலட்சுமியை திருமணம் செய்து கொண்டு சோஷியல் மீடியாவில் மிகப்பெரிய அளவில் பிரபலமானார்.
பணமோசடி: இந்நிலையில், அமெரிக்காவைச் சேர்ந்த விஜய் என்பவரிடம் தயாரிப்பாளர் ரவீந்தர் கடந்த ஆண்டு மே மாதம் 8ம் தேதி, ரூ20 லட்சம் ரூபாய் பணத்தை கேட்டுள்ளார். இதற்கு அமெரிக்காவைச் சேர்ந்த விஜய், என்னிடம் 20 லட்சம் இல்லை, 15 லட்சம் ரூபாய் தான் இருக்கிறது என்று ரவீந்தரின் வங்கி கணக்கில் செலுத்தி உள்ளார்.
பணம் தராமல் இழுத்தடிப்பு: அடுத்த வாரமே பணத்தை திருப்பி கொடுத்ததாக கூறிய ரவீந்தர், ஆனால், சொன்னபடி பணத்தை திருப்பி தராமல் இழுத்தடித்துள்ளார். மேலும், விஜய்யின் செல்போன் நம்பரை பிளாக் செய்து விட்டதால், விஜய்யின் மனைவி ரவீந்தரிடம் கிளப் ஹவுஸ் செயலியில் பேசிய போது, ஆபாசமாக பேசிஉள்ளார்.
புகார் வாபஸ்: இதனால், ஆத்திரம் அடைந்த விஜய், ஆன்லைன் மூலம் அமெரிக்காவிலிருந்து ரவீந்திரன் பணம் கேட்டதற்கான வங்கி ஆதாரம் மற்றும் தொலைபேசி ஆடியோ ஒன்றையும் சென்னை கமிஷ்னருக்கு புகார் அளித்தார். இச்சம்பவம் கோலிவுட் வட்டாரத்தில் பேசுபொருளாகி உள்ளது. இந்தப் புகார் பற்றி பேசியுள்ள ரவீந்தர் தரப்பு, தாங்கள் பணம் தர ஒப்புக் கொண்ட நிலையில், விஜய் புகாரை வாபஸ் பெற உள்ளதாக தெரிவித்துள்ளார்.
அன்பு தானே எல்லாம்: இந்நிலையில், ரவீந்தர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், தனது புகைப்படத்தை பகிர்ந்து, நம்மை வெறுப்பவர்களால் நாம் சூழப்பட்டிருக்கும் நேரத்தில், அன்பைப் பகிர்ந்து, அன்பு இருப்பதை நிரூபிப்போம் எனும் கேப்ஷன் போட்டு கூலா பதில் அளித்துள்ளார்.