உ.பி. | 'பீம் ஆர்மி' சந்திரசேகர் ஆசாத் மீது துப்பாக்கிச் சூடு – நூலிழையில் உயிர் தப்பினார்

சஹாரன்பூர்: ஆசாத் சமாஜ் கட்சி மற்றும் பீம் ஆர்மியின் தலைவர் சந்திரசேகர் ஆசாத் ராவன் மீது துப்பாக்கிச் சூடு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் அவர் பலத்த காயமடைந்துள்ளார் என்று சொல்லப்படுகிறது.

அவரது அவரது வயிற்றில் தோட்டா பாய்ந்த நிலையில், உடனடியாக தியோபந்தில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக சஹாரன்பூர் சிவில் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். தற்போது அவர் அபாய கட்டத்தை தாண்டிவிட்டதாகவும், உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

கட்சி நிர்வாகி ஒருவரின் வீட்டு நிகழ்வில் பங்கேற்று வீடு திரும்பும் வழியில் உத்தரபிரதேச மாநிலம் தியோபந்த் பகுதியில் துப்பாக்கிச் சூடு நிகழ்ந்துள்ளது.

காரில் திரும்பி வந்துகொண்டிருக்கும்போது மர்ம நபர்கள் சந்திரசேகர ஆசாத்தின் காரை நோக்கி சுட்டுள்ளனர். இரண்டு தோட்டாக்கள் பாய்ந்த நிலையில், சந்திரசேகர ஆசாத்தின் வயிற்றில் ஒரு குண்டு பாய்ந்துள்ளது. மற்றொன்று காரின் பின் கதவில் பாய்ந்தது. போலீஸ் விசாரணையை துவங்கியுள்ள நிலையில், இந்த தாக்குதல் குறித்து பீம் ஆர்மி வெளியிட்டுள்ள அறிக்கையில், “சந்திரசேகர் ஆசாத் மீது நடத்தப்பட்ட கொடிய தாக்குதல், பகுஜன் மிஷன் இயக்கத்தைத் தடுத்து நிறுத்தும் கோழைத்தனமான செயல். குற்றம் சாட்டப்பட்டவர்களை விரைவாகக் கைது செய்யவும், கடுமையான நடவடிக்கை எடுக்கவும் மற்றும் சந்திரசேகர் ஆசாத்தின் பாதுகாப்பையும் வேண்டும்” என்று தெரிவித்துள்ளது.

உத்தரபிரதேச முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ் இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து வெளியிட்டுள்ள பதிவில், “மிகவும் கண்டிக்கத்தக்க மற்றும் கோழைத்தனமான செயல். பாஜக ஆட்சியில் மக்கள் பிரதிநிதிகளுக்கே பாதுகாப்பு இல்லாதபோது பொது மக்களுக்கு என்ன நடக்கும் எனத் தெரியவில்லை” என்று பதிவிட்டுள்ளார்.

முதல்வர் ஸ்டாலின் கண்டனம்: உத்தரபிரதேச மாநிலம் சஹாரன்பூரில் பீம் ஆர்மி தலைவர் சந்திரசேகர் ஆசாத் மீது நடத்தப்பட்ட கொலைவெறி தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிக்கிறேன். இந்த வன்முறை சம்பவம் உத்தரபிரதேசத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதை அம்பலப்படுத்துகிறது. சந்திரசேகர் ஆசாத் விரைவில் குணமடைய வாழ்த்துவதுடன், இந்தக் கோழைத்தனமான தாக்குதலுக்குக் காரணமான குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன்.

சந்திரசேகர் ஆசாத் யார்?: சில ஆண்டுகள் முன் மத்திய அரசின் குடியுரிமைச் சட்டத்தை எதிர்த்து டெல்லி ஜும்மா மசூதியில் நடந்த பேரணிக்கு முக்கிய காரணகர்த்தவாக அறியப்பட்டவர் சந்திரசேகர் ஆசாத். அந்தப் பேரணியில் தனது கையில் அரசியலமைப்பின் நகலையும், அம்பேத்கரின் புகைப்படத்தையும் ஏந்திக்கொண்டு முழக்கமிட்டது அவரை வெகு பிரபலமாக்கியது. சந்திரசேகர் ஆசாத் ராவண் என்றும் அழைக்கப்படும் இவரின் பூர்வீகம் மேற்கு உத்தரப் பிரதேசமான சஹாரன்பூர் மாவட்டத்தில் உள்ள காட்கவுலி என்ற கிராமம்.

டெல்லி ஜும்மா மசூதி பேரணி நாடு முழுவதும் அவரை பிரபலப்படுத்தினாலும், அதற்கு முன்பாகவே அவர் உத்தரப் பிரதேச மக்கள் மத்தியில், தனது ‘பீம் ஆர்மி’ அமைப்பு மூலமாகவும், சமூகப் பணிகள் மூலமாகவும் பிரபலமாக வலம்வந்தார். பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த ஆசாத், ‘பீம் ஆர்மி’ அமைப்பை தோற்றுவிக்க முக்கியக் காரணம், பகுஜன் சமாஜ் கட்சியை நிறுவிய கன்ஷிராம். சிறுவயது முதலே கன்ஷிராம் கருத்துகளால் வெகுவாக ஈர்க்கப்பட்டு, பட்டியலின மக்களின் உரிமைகளுக்காக குரல் கொடுத்து வருகிறார். அந்த வகையில் பட்டியலின மக்களின் முன்னேற்றத்துக்காகச் செயல்படும் நோக்கத்துக்காக ‘பீம் ஆர்மி’ அமைப்பை நிறுவி பணியாற்றிவந்தார்.

சில வருடங்கள் முன் நிகழ்ந்த சஹாரன்பூர் கலவரத்தின்போது பீம் ஆர்மி அமைப்பின் செயல்பாடு பட்டியிலன மக்கள் மத்தியில் அவரை கொண்டுச் சேர்த்தது. சஹாரான்பூர் பகுதியில் வசிக்கும் பட்டியிலன மக்களுக்கும் மாற்று சமூக மக்களுக்கும் இடையேயான கலவரத்தை கண்டித்து வலுவான போராட்டங்களை அந்த சமயத்தில் முன்னெடுத்தார் ஆசாத். அந்தப் போராட்டம் லட்சக்கணக்கான பட்டியிலன இளைஞர்களை ஈர்க்க, புதுயுக தலைவராக உருவெடுத்தார். அதேபோல், குடியுரிமைச் சட்ட எதிர்ப்புப் போராட்டங்களுக்கு பிறகு கடந்த சில வருடங்களாக பாஜகவுக்கு எதிராக கடுமையான அரசியல் செய்தும் வருகிறார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.