மகாராஷ்டிர மாநிலத்துக்கு 600 கார்கள் புடை சூழ சென்ற தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவுக்கு சரத் பவார் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தெலங்கானா முதல்வர் கே.சந்திரசேகர ராவ், தேசிய அளவில் கால் பதிக்க வேண்டும் என்பதற்காக தனது தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சியை பாரத் ராஷ்டிர சமிதி என மாற்றினார். வரும் தேர்தல்களில் பிற மாநிலங்களிலும் போட்டியிட அவர் திட்டமிட்டுள்ளார்.
இந்நிலையில், சந்திரசேகர ராவ் 2 தினங்களுக்கு முன்பு ஹைதராபாத்தில் இருந்து மகாராஷ்டிர மாநிலம் சோலாப்பூர் மாவட்டம் பண்டார்பூர் சென்று, அங்குள்ள விட்டல் ருக்மணி கோயிலில் சாமி தரிசனம் செய்தார். பின்னர் சர்கோலியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அவர் பேசினார். அவருடன் தெலங்கானா அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்எல்ஏ-க்கள், எம்எல்சி-க்கள் மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் உள்ளிட்டோர் 2 பஸ்கள் மற்றும் 600 கார்களில் சென்றனர். சுமார் 6 கி.மீ. தொலைவுக்கு இவரது வாகனங்கள் அணிவகுத்தன.
இதுகுறித்து தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் புனே நகரில் செய்தியாளர்களிடம் நேற்று கூறும்போது, “பக்கத்து மாநில முதல்வர் இங்கு வந்து கோயிலில் சாமி தரிசனம் செய்வதற்கு எந்தத் தடையும் இல்லை. ஆனால், தனது வலிமையை பறைசாற்றுவதற்காக ஏராளமான வாகனங்கள் புடைசூழ வந்தது கவலை அளிப்பதாக உள்ளது. அவரது பயணம் இரு மாநிலங்களுக்கு இடையிலான உறவை மேம்படுத்தும் வகையில் அமைந்திருந்தால் அது நன்றாக இருந்திருக்கும்” என்றார்.