புதுடெல்லி: பணியாளர் ஓய்வூதிய திட்டத்தின் (இபிஎஸ்) கீழ் அதிக பென்ஷன் தொகை பெறுவதற்காக விண்ணப்பம் செய்யும் கால அவகாசம் ஜூலை 11-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. முன்னதாக அந்தக் கெடு ஜூன் 26-ம் தேதியுடன் முடிவடைவதாக இருந்தது.
இதன் மூலம் ஊழியர்களும், ஓய்வூதியதார்களும் மேலும் 15 நாட்கள் வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இந்தக் கால அவகாசத்தைப் பயன்படுத்தி, ஊழியர்கள் தங்கள் முதலாளிகளுடன் தொடர்புடைய மண்டல அலுவலகத்தில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம். அதேபோல் நிறுவனங்கள் செப்டம்பர் 30-ம் தேதிக்குள் விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்களை சரிபார்த்து ஒப்புதல் வழங்கலாம்.
கடைசி வாய்ப்பு: இதுவே கடைசி வாய்ப்பாக இருக்கும் என்று இபிஎஃப்ஓ அமைப்பு தெரிவித்துள்ளது. ஜூலை 26-ம் தேதி நாடு முழுவதிலும் இருந்து அதிக ஓய்வூதியம் கோரி 16 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளதாக இபிஎஃப்ஓ தெரிவித்துள்ளது. அதேபோல், ஓய்வூதியதாரர்கள், ஊழியர்கள் என சுமார் 1,000 பேருக்கு இபிஎஃப்ஓ சார்பில் கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகுதியுடைய பென்ஷன்தாரர்கள் அல்லது ஊழியர்கள் கேஒய்சி தகவல்களை சேர்ப்பதில் சிரமங்களை சந்தித்தால் அவர்கள் இபிஎஃப்ஐஜிஎம்எஸ் (EPFiGMS) இணையதளம் மூலம் தங்கள் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.