கோஹிமா: மணிப்பூரில் வன்முறைகளை கட்டுப்படுத்தாமல் மத்திய அரசு வேடிக்கை பார்ப்பது ஏன் என நாகாலாந்து மாணவர் கூட்டமைப்பு கேள்வி எழுப்பியுள்ளது. மேலும் வடகிழக்கு மாநிலங்களில் மாணவர் கூட்டமைப்பு சார்பாக மணிப்பூரில் அமைதி நிலவ நடவடிக்கை எடுக்க கோரி மெழுகுவர்த்தி ஏந்தி அமைதிப் பேரணி நடத்தப்பட்டது.
நாகாலாந்து தலைநகர் கோஹிமாவில் மணிப்பூர் மாநிலத்தில் அமைதி நிலவ நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மெழுகுவர்த்தி ஏந்தி பேரணி நடைபெற்றது.
இப்பேரணியில் வடகிழக்கு மாணவர் கூட்டமைப்பின் பொதுச்செயலாளரும் நாகாலாந்து மாணவர் கூட்டமைப்பின் முன்னாள் தலைவருமான Mutsikhoyo Yhobu பேசியதாவது: மணிப்பூர் மாநிலம் பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. ஆனால் பிரதமர் மோடி மவுனமாக இருப்பது கடும் அதிர்ச்சி அளிக்கிறது. பிரதமர் மோடியின் மவுனம், வடகிழக்கு மாநில மக்களை ஒட்டுமொத்த இந்தியாவின் மைய நீரோட்டத்தில் இருந்து விலகிச் செல்ல வைக்கிறது.
மணிப்பூர் விவகாரத்தில் மத்திய அரசு ஏதோ ஒரு மறைமுகமான செயல் திட்டத்தை செயல்படுத்திக் கொண்டிருக்கிறது. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, மணிப்பூர் மாநிலத்துக்கு வந்து சென்றார். அவரது கண்களாலேயே பற்றி எரியும் மணிப்பூரை பார்த்தார். 40000 ராணுவ வீரர்கள் மணிப்பூரில் குவிக்கப்பட்டிருக்கின்றனர். ஆனால் மணிப்பூரில் இன்னமும் வன்முறை ஓயவில்லை. மணிப்பூரில் சூறையாடல்கள் ஓயவில்லை. இவை அனைத்துமே மணிப்பூர் வன்முறையை கட்டுப்படுத்துவதில் மத்திய அரசு அக்கறை காட்டவில்லை என்பதையே வெளிப்படுத்துகிறது.
மணிப்பூரின் மைத்தேயி- குக்கி இனக்குழுவினரிடையே அமைதிப் பேச்சுவார்த்தை நடத்த வடகிழக்கு மாணவர் கூட்டமைப்பு முன்முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. எப்போதுமே பிரசனைகளுக்கு வன்முறை தீர்வு கிடையாது. இவ்வாறு Mutsikhoyo Yhobu பேசினார்.
இதனிடையே மணிப்பூர் வன்முறை பாதித்த பகுதிகளை பார்வையிட மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அம்மாநிலம் சென்றுள்ளார். மணிப்பூரில் வன்முறையால் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்த மக்களையும் சந்தித்து ஆறுதல் தெரிவிக்கிறார் ராகுல் காந்தி.
மேலும் திரிபுரா, அஸ்ஸாம், மேகாலயா உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களிலும் மணிப்பூர் மாநிலத்தில் அமைதி நிலவ நடவடிக்கைகள் எடுக்க வலியுறுத்தி North East Students Organisation சார்பாக மெழுகுவர்த்தி ஏந்தி அமைதிப் பேரணி நடத்தப்பட்டது