ரசாயன உரங்களை குறைப்பதற்கு மாற்று உரங்களை ஊக்குவிக்க ‘பிரதமர் பிரணாம்’ திட்டம்

புதுடெல்லி: பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை குழு கூட்டம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் டெல்லியில் நேற்று நடைபெற்றது. இதில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து மத்திய அரசு நேற்று வெளியிட்ட அறிக்கை:

2023-24-ம் ஆண்டு சர்க்கரை பருவத்திற்கான (அக்டோபர் முதல் செப்டம்பர் வரை) நியாயமான விலை நிர்ணயத்துக்கு இக்கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. கரும்பு விவசாயிகளுக்கு சர்க்கரை ஆலைகள் 10.25 சதவீத பிழிதிறன் கொண்ட கரும்புக்கு குவிண்டாலுக்கு தரவேண்டிய குறைந்தபட்ச விலை ரூ.315 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு 0.1 சதவீத பிழிதிறன் அதிகரிப்புக்கு குவின்டாலுக்கு ரூ.3.07 உயர்த்தி வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

மேலும் கரும்பு விவசாயிகளின் நலனை கருத்தில்கொண்டு 9.5 சதவீத சர்க்கரை கட்டுமானத்திற்கு கீழே உள்ள கரும்புக்கு எந்தவித விலைக்குறைப்பும் செய்யக்கூடாது என அரசு முடிவெடுத்துள்ளது. தேசிய ஆராய்ச்சி அறக்கட்டளை (என்ஆர்எஃப்) அமைப்பதற்கான மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யவும் அரசு முடிவு செய்துள்ளது. இந்தியாவில் அறிவியல் ஆராய்ச்சிக்கு வழிகாட்டும் உயர்நிலை அமைப்பாக என்ஆர்எஃப் இருக்கும்.

நாடு முழுவதும் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், ஆய்வு நிறுவனங்கள் மற்றும் ஆய்வகங்களில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டை என்ஆர்எஃப் ஊக்குவிக்கும். அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் நிர்வாக அமைப்பாக என்ஆர்எஃப் அமையும். பல்வேறு துறைகளை சேர்ந்த தலைசிறந்த ஆராய்ச்சியாளர்கள் மற்றும் தொழில் சார்ந்தவர்கள் மூலம் இந்த அமைப்பு நிர்வகிக்கப்படும்.

பிரதமர், இந்த அமைப்பின் தலைவராக இருப்பார். அறிவியல், தொழில்துறை, மற்றும் கல்வித் துறை அமைச்சர்கள் துணைத் தலைவர்களாக இருப்பார்கள்.

மாற்று உரங்களை ஊக்குவிப்பதற்கும் ரசாயன உரங்களை நம்பியிருப்பதைக் குறைப்பதற்கும் மாநிலங்களை ஊக்குவிக்கும் ‘பிரதமர் பிரணாம்’ திட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டின் ஒரு பகுதியாக கடந்த பிப்ரவரி 1-ம் தேதி நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்த திட்டத்தை முதலில் அறிவித்தார். வேளாண் துறைக்காக அறிவிக்கப்பட்ட திட்டங்களில் இதுவும் ஒன்றாகும்.

அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு (2022-23 முதல் 2024-25 வரை) யூரியா மானியத்திற்கு ரூ.3,68,676 கோடி தொகுப்பு நிதி வழங்கப்பட்டுள்ளது. நாடு யூரியா இறக்குமதியை சார்ந்திருப்பதை குறைக்கவும் 2025-26-ம் ஆண்டுக்குள் இந்தியா தன்னிறைவு அடையவும், 6 யூரியா உற்பத்தி ஆலைகளை நிறுவுதல், புத்துயிரூட்ட இந்த ஒதுக்கீடு உதவியாக இருக்கும்.

கடந்த 2022-ம் ஆண்டு ஆக.22-ம் தேதி மத்திய அரசுக்கும் பேரிடர் தாங்கும் உள்கட்டமைப்புக்கான கூட்டணிக்கும் (சிடிஆர்ஐ) இடையே கையெழுத்தான உடன்படிக்கைக்கு அங்கீகாரம் வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

கடந்த 2019 செப்டம்பர் 23-ம் தேதி நியூயார்க்கில் நடைபெற்ற ஐ.நா. பருவநிலை மாற்ற நடவடிக்கைக்கான உச்சி மாநாட்டின்போது பிரதமர் மோடி சிடிஆர்ஐ அமைப்பை தொடங்கி வைத்தார். பருவநிலை மாற்றம் மற்றும் பேரிடர் கட்டுப்பாட்டு விஷயங்களில் உலகத் தலைமைக்கான இந்தியாவின் முயற்சியாக இது பார்க்கப்பட்டது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.