நெட்டே நெட்டே பனைமரமே; முதல்வர் வெளியிட்ட பனை நூல், `தமிழ் மண்வளம்' இணையதளம்… என்ன சிறப்பம்சம்?

பயிரின் மகசூலை உயர்த்துவதில் மண் வளம் முக்கிய பங்காற்றுகிறது. மண் வளம் என்பது, மண்ணின் தன்மை, மண்ணிலுள்ள கரிம, அமிலநிலை, தழை, மணி, சாம்பல் போன்ற பேரூட்டச்சத்துக்கள், இரும்பு, மாங்கனீசு போன்ற நுண்ணூட்டச்சத்துக்களின் அளவினை குறிக்கும். மகசூலுக்கு முக்கிய காரணியாக விளங்கும் மண்ணின் வளம் குறித்து ஒவ்வொரு விவசாயியும் அறிந்து அதற்கேற்ப உரமிடுவது மிகவும் அவசியமாகும்.

“தமிழ் மண்வளம்” இணையதளம்

விளைநிலங்களின் மண்வளத்தை மேம்படுத்தும் வகையில், கடந்த 2022-23 ஆம் ஆண்டு வேளாண்மை நிதிநிலை அறிக்கையில், “தமிழ் மண்வளம்” என்ற இணைய முகப்பு உருவாக்கப்படும் என்று வேளாண்மை – உழவர் நலத்துறை அமைச்சரால் அறிவிக்கப்பட்டது. அதன்படி, “தமிழ் மண்வளம்” எனும் இணையதளம் உருவாக்கப்பட்டது.

தமிழ்மண் வளம் இணையதளம் முகப்பு

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (28.06.2023) தலைமைச் செயலகத்தில், வேளாண்மை உழவர்நலத்துறை சார்பில், விவசாயிகள் தங்கள் நிலத்தில் உள்ள மண்வளத்தினை அறிந்து, அதற்கேற்ப உரமிடுவதை ஊக்குவிப்பதற்காக உருவாக்கப்பட்டுள்ள இந்த “தமிழ் மண்வளம்” எனும் புதிய இணையதள பயன்பாட்டை தொடங்கி வைத்தார்.

“தமிழ் மண்வளம்” இணைய முகப்பின் பயன்கள்

விவசாயிகள் கணினி மூலமாகவோ அல்லது கைபேசி மூலமாகவோ http://tnagriculture.in/mannvalam எனும் இணையதள முகவரியில் தமிழ்மண் வளம் இணையதளத்தை அணுகலாம். இந்த இணைய முகப்பில், விவசாயிகள் தங்கள் மாவட்டம், வட்டாரம், கிராமம், தங்களது நிலத்தின் புல எண், உட்பிரிவு எண்ணை பதிவு செய்தால், உடனடியாக, மண் வளம் குறித்த அனைத்து விபரங்களும் கொடுத்து, பதிவிறக்கம் செய்யப்பட்டு, அவர்களது கைபேசியில் மண்வள அட்டையாக மின்னணு வடிவில் கிடைக்கும். இந்த இணைய முகப்பு தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், இதில் மண்டல வாரியாகவும் மாவட்டத்தில் உள்ள வட்டாரம் மற்றும் கிராமங்கள் வாரியாகவும் மண்ணின் வகைகள் தரப்பட்டுள்ளன.

தமிழ்மண் வளம் இணையதளம் முகப்பு

மண்ணின் தன்மை, நிலத்தடி நீரின் வகைப்பாடு, உப்பின் நிலை, களர்-அமில நிலை (pH), அங்ககக் கரிமம் (Organic Carbon), சுண்ணாம்புத்தன்மை (Calcareousness) போன்ற வேதியியல் குணங்கள் பற்றிய விபரங்களும், தழை, மணி, சாம்பல் சத்துக்கள் போன்ற விவரங்களும், கந்தகம், இரும்பு, மாங்கனீசு, துத்தநாகம், தாமிரம், போரான் போன்ற விவரங்களும், வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண் காடுகள் சார்ந்த எவ்வகை பயிர்களை சாகுபடி செய்யலாம், தேர்ந்தெடுக்கும் பயிருக்கு எவ்வளவு உரமிட வேண்டும் போன்ற பரிந்துரைகளையும் விவசாயிகள் தெரிந்து கொள்ளலாம்.

“தமிழ் மண்வளம்” என்ற இணைய முகப்பு இந்திய அளவில் முதன் முறையாக அறிமுகப்படுத்தப்பட்டு, நாட்டிலேயே நுண்ணூட்டச்சத்துகளை அறிந்துகொள்வதில் முன்னோடியாக விளங்குகிறது. இந்த இணைய முகப்பின் பயனாக, விவசாயிகள் தங்கள் நிலத்தின் மண் வளத்தை அறிந்து, அதற்கேற்ப உரமிடுவதன் மூலம் சாகுபடி செலவு குறைவதுடன், மண் வளம் காக்கப்பட்டு, பயிர் மகசூல் அதிகரிக்கும்.

“நெட்டே நெட்டே பனைமரமே”

அடுத்ததாக பனையின் சிறப்பினை பொதுமக்கள், மாணவர்கள் உள்ளிட்ட அனைவரும் அறிந்து கொள்ளும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ள “நெட்டே நெட்டே பனைமரமே” என்ற காலப்பேழை புத்தகத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டார்.

“நெட்டே நெட்டே பனைமரமே” வெளியீடு

பனை மரம், அனைத்து பாகங்களையும் மானுடத்திற்குக் கொடையாய் அளிக்கும் அற்புதமான மரமாகும். அதன் குருத்தோலை தோரணம் கட்டவும், அழகியல் பொருட்கள் செய்யவும் பயன்படுகிறது. சாரை ஓலை, கூடை முடையவும், பாய் பின்னவும் உதவுகிறது. பச்சை மட்டை வேலி அமைக்கவும், நார் எடுக்கவும் உதவுகிறது. பனங்காய் நுங்கும், பனம்பழமும் தருகிறது. பனங்கொட்டை, கிழங்காக மாறி உண்ணப் பயன்படுகிறது. பாளை, பதநீர் பெற உபயோகமாகிறது. ஓலை கூரை வேயவும், பதநீர், கஞ்சி போன்றவற்றை ஊற்றிக் குடிக்க உதவும், பட்டை பின்னவும் பயன்படுகிறது. உச்சிப்பகுதி, மரத்தொட்டி செய்ய உதவுகிறது. பத்தை மட்டை தும்பு எடுக்கவும், தரை தேய்க்கும் பிரஷ் செய்யவும் பயன்படுகிறது. நடு மரம், உத்தரம் செய்ய உதவுகிறது. தூர்ப்பகுதி, வட்ட வடிவிலான பத்தலாக பயன்படுகிறது. வேர் மழைக்காலங்களில் நிகழும் மண்ணரிப்பைத் தடுக்க உதவுகிறது.

இத்தகைய சிறப்புமிக்கதும் தமிழ்நாட்டின் மாநில மரமான பனையின் முக்கியத்துவம் கருதி, 2021-22 ம் ஆண்டு தமிழ்நாட்டின் முதலாவது வேளாண்மை நிதிநிலை அறிக்கையில், பனைமரத்தின் எண்ணிக்கையினை அதிகரிக்கவும், பனை பொருட்களை மதிப்புக் கூட்டுதல் மூலம் பனைத்தொழிலை மேம்படுத்தவும், பனை மேம்பாட்டு இயக்கம் செயல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு, கடந்த இரண்டு ஆண்டுகளாக இவ்வியக்கம் சிறப்பான முறையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

“நெட்டே நெட்டே பனைமரமே” வெளியீடு

 அதன் தொடர்ச்சியாக, தொன்று தொட்டு தமிழரின் வாழ்வோடு இணைந்து பல பயன்களை அளித்து வரும் பனையின் சிறப்பு குறித்து பொதுமக்கள், மாணவர்கள் உள்ளிட்ட அனைவரும் அறிந்து பயன்பெறும் வகையிலும், பனையின் சிறப்பினைப் போற்றும் வகையிலும், தூத்துக்குடி, இராமநாதபுரம் போன்ற பனை மரங்கள் அதிகம் காணப்படும் மாவட்டங்களில் களஆய்வில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள், சேகரிக்கப்பட்ட செய்திகளை உள்ளடக்கிய “நெட்டே நெட்டே பனைமரமே” என்ற தலைப்பிலான காலப்பேழை (Coffee Table) புத்தகம் தயாரிக்கப்பட்டு,  தமிழ்நாடு முதலமைச்சரால் நேற்று வெளியிடப்பட்டது.

 இந்த நிகழ்ச்சியில், வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்,  அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா,  தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு,  வேளாண்மை உழவர் நலத்துறைச் செயலாளர் சி.சமயமூர்த்தி,  வேளாண்மை உழவர் நலத்துறை சிறப்புச் செயலாளர் நந்தகோபால், வேளாண்மை ஆணையர் சுப்பிரமணியன்,  வேளாண்மை வணிகம் மற்றும் வேளாண் விற்பனைத் துறை இயக்குநர் ச.நடராஜன்,  தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை இயக்குநர் இரா. பிருந்தாதேவி,  மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.