மணிப்பூரில் திடீர் பரபரப்பு… ராகுல் காந்தியை தடுத்து நிறுத்திய போலீசார்… உள்ளே அனுமதிக்கவில்லை!

மணிப்பூர் கலவரம் குறித்த செய்திகள் கடந்த சில வாரங்களாகவே தலைப்பு செய்தியாக இடம்பெற்று வருகின்றன. இரண்டு இனக் குழுக்களுக்கு இடையில் நடந்த மோதல் மாநில அளவில் விஸ்வரூபாக வெடித்து கிளம்பியது. இதில் ஏராளமான உயிர் சேதம், பொருட் சேதம் ஏற்பட்டு நிலைமை கட்டுக்கடங்காமல் சென்றது. மணிப்பூர் மாநில நிலவரத்தை கட்டுக்குள் கொண்டு வர மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்தது.

ராகுல் காந்தி மணிப்பூர் பயணம்

தற்போது நிலைமை சீரடைந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் மணிப்பூர் சென்று பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்திக்க காங்கிரஸ் முன்னாள் எம்.பி ராகுல் காந்தி முடிவு செய்தார். குறிப்பாக சுரசந்த்பூரில் உள்ள முகாம்களுக்கு சென்று அங்கு தங்கியுள்ள மக்களுக்கு ஆறுதல் கூற திட்டமிட்டிருந்தார். இதற்காக விமானம் மூலம் இம்பால் சென்று அங்கிருந்து காரில் புறப்பட்டு சென்றார்.

தடுத்து நிறுத்திய போலீசார்

ஆனால் இம்பாலில் இருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் புஷ்னுபூர் அருகே போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டார். தொடர்ந்து அனுமதித்தால் கலவரம் வெடிக்க வாய்ப்புள்ளதாக ஒரு காரணத்தை போலீசார் தெரிவித்துள்ளனர். இதுபற்றி ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்திடம் பேசிய காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால், ராகுல் காந்தியை அனுமதிக்கும் நிலையில் தாங்கள் இல்லை என்று போலீசார் தெரிவித்தனர்.

மகிழ்ச்சியுடன் வரவேற்ற மணிப்பூர் மக்கள்

ஆனால் ராகுலை வரவேற்க சாலையின் இருபுறமும் மக்கள் மகிழ்ச்சியுடன் காத்து கொண்டிருந்தனர். போலீசார் ஏன் தடுத்து நிறுத்தினர் என்று எங்களால் புரிந்து கொள்ள முடியவில்லை. பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்கவே ராகுல் காந்தி சென்றார். 20 – 25 கிலோமீட்டர் பயணித்த பின்னர் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளார்.

ஹெலிகாப்டர் பயணம் என்னாச்சு?

உள்ளூர் போலீசாருக்கு யார் உத்தரவு பிறப்பித்தார்கள் எனத் தெரியவில்லை என்றார். இதுதொடர்பாக பாஜக தரப்பில் கூறுகையில், ராகுல் காந்தி ஹெலிகாப்டர் மூலம் சுராசந்த்பூருக்கு செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. ஆனால் அதை நிராகரித்து விட்டு கார் மூலம் செல்ல ராகுல் காந்தி முடிவு செய்திருக்கிறர். இது பல்வேறு பிரச்சினைகளை ஏற்படுத்த வாய்ப்புண்டு.

கலவரம் நடந்து 14 நாட்கள் ஆச்சு

இன்னும் கூட ஹெலிகாப்டரில் நேரில் செல்ல அவருக்கு வாய்ப்பிருக்கிறது. கடந்த 14 நாட்களாக மணிப்பூரில் எந்தவித கலவரமும் ஏற்படவில்லை. இந்நிலையில் பாதிக்கப்பட்ட மக்களை சந்திப்பதாக கூறி கொண்டு, அரசியல் செய்ய பார்க்கிறார் ராகுல் காந்தி என்று குறிப்பிட்டனர். இந்த சூழலில் ராகுல் காந்தி மீண்டும் கார் மூலம் இம்பால் நகருக்கு திரும்பியுள்ளார். ராகுல் காந்தியின் அடுத்தகட்ட நகர்வுகள் குறித்து எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.