`செந்தில் பாலாஜி கைதுக்காகப் பழிவாங்குகிறார்கள்..!' – சிடுசிடுக்கும் எஸ்.ஜி.சூர்யா

சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியதாக கைதுசெய்யப்பட்டு, ஜாமீனில் வெளியே வந்திருக்கும் தமிழக பா.ஜ.க மாநிலச் செயலாளர் எஸ்.ஜி.சூர்யாவிடம் சில கேள்விகளை எழுப்பினேன்.

“பா.ஜ.க-வினர் கைது அன்றாட செய்திகளில் ஒன்றாகி வருகிறதே… என்ன காரணம்?”

“அண்ணாமலையைப் பற்றியோ பிரதமர் மோடியைப் பற்றியோ விமர்சிப்பவர்கள்மீது புகார் கொடுத்தாலும் நடவடிக்கை இருப்பதில்லை. தி.மு.க-வையோ, அதன் கூட்டணிக் கட்சிகளையோ விமர்சித்தால் மட்டும் உடனடியாக நடவடிக்கை பாய்கிறது. செந்தில் பாலாஜியின் கைது தி.மு.க அரசை பதற்றத்தின் உச்சிக்கே கொண்டு சென்றிருக்கிறது. அதனால்தான் இத்தகைய கைதுகள் நடக்கிறதோ என்று சந்தேகமாக இருக்கிறது. என்னுடைய கைது என்பது செந்தில் பாலாஜி கைதுக்கான அப்பட்டமான பழிவாங்கல் செயல்.”

“அடிதடி வழக்குகள், பாலியல் வழக்குகளில்கூட முகாந்திரம் இல்லாமல் பழிவாங்கலுக்காக கைதுசெய்துவிடுவார்களா?”

“கட்சியில் இணைவதற்கு முன்பே நடந்த குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் சிலர் கைதுசெய்யப்பட்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது. யார் குற்றம் செய்தாலும் அது குற்றம்தான். ஆளுங்கட்சியினர்மீது ஆதாரங்கள் இருந்தாலும் கைதுசெய்யப்படுவதில்லை. பா.ஜ.க-வினரை மட்டும் கைதுசெய்வதில் நியாயமில்லை.”

“இல்லாத ஊரில், இல்லாத கவுன்சிலர் பெயரைச் சொல்லி, நீங்கள் அவதூறு பரப்பியதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முன்வைக்கும் குற்றச்சாட்டுக்கு பதில் என்ன?”

“பெண்ணாடம் பேரூராட்சி மதுரையில் இல்லை என்பது உண்மைதான். பெண்ணாடம் கடலூர் மாவட்டத்தில் இருக்கிறது. நான் கூறிய குற்றச்சாட்டு நடந்ததும் உண்மை. தூய்மைப் பணியாளரை வற்புறுத்தி மலக்குழியில் இறக்கியதற்கான வீடியோ ஆதாரங்களும் இருக்கின்றன. தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் இந்த விவகாரத்தில் தலையிட்டிருக்கிறது. ஆனால் முழு பூசணிக்காயை சோற்றில் வைத்து மறைக்கப் பார்க்கிறது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி.”

எஸ்.ஜி.சூர்யா

“பொது மேடையில் அநாகரிகமாகப் பேசிய தி.மு.க நபரை கட்சியிலிருந்து நீக்கிவிட்டார்கள், ராதாரவியை நீங்கள் எப்போது நீக்கப்போகிறீர்கள்?”

“சிவாஜி கிருஷ்ணமூர்த்தி ஏற்கெனவே 2, 3 முறை மோசமாகப் பேசியிருக்கிறார். இப்போது நடவடிக்கை எடுத்திருப்பது கண் துடைப்பு. உண்மையிலேயே தண்டனை பெற்றுக் கொடுத்தால் மட்டும்தான் ஒப்புக்கொள்ள முடியும். விவகாரம் பெரிதாகி, தேசிய அளவில் கவனம் பெற்றதால், பயத்தினால் நடவடிக்கை எடுத்திருக்கிறார்கள். ராதாரவி என்ன பேசினார் எனத் தெரியவில்லை. நான் சிறையிலிருந்து இப்போதுதான் வெளியில் வந்திருக்கிறேன்.”

“அடுத்து எஸ்.எஸ்.சிவசங்கர்தான், டி.ஆர்.பாலுதான் என்றெல்லாம் பா.ஜ.க-வினர் பேசுவது மிரட்டல் இல்லையா… விசாரணை அமைப்புகளை நீங்கள்தான் இயக்குகிறீர்களா?”

“அவர்கள் ஊழல் செய்ததற்கான முகாந்திரம் இருக்கிறது. பணப் பரிமாற்றம் நடந்ததற்கான ஆதாரங்கள் இருக்கின்றன. அதனால்தான் அவர்கள்மீது நடவடிக்கை எடுக்கச் சொல்கிறோம்.”

“ `வாட்சு பில் கேட்டதற்கே இந்த நிலைமை என்றால், அவதூறு வழக்கு போட்டவர்கள் குறித்து யோசித்துப் பாருங்கள்’ என அமர்பிரசாத் ரெட்டி மிரட்டுகிறாரே… அமலாக்கத்துறை பா.ஜ.க-வால் ஏவப்படுகிறது என்பதை இதன்மூலம் ஒப்புக்கொள்கிறாரா?”

“தொண்டர்களை ஈர்ப்பதற்காக எதுகை, மோனையுடன் பேசும் அரசியல் பேச்சு அவ்வளவுதான்.”

செந்தில் பாலாஜி – அண்ணாமலை

“DMK Files Part 2-ல் எந்தெந்த அமைச்சர்களின் சொத்து & ஊழல் பட்டியலை எதிர்பாக்கலாம்… முன்னாள் ஆட்சியாளர்களின் ஊழல் பட்டியலும் அதில் நிச்சயம் இருக்குமா?”

“வெய்ட் பண்ணுங்க. மிக ஷாக்கிங்கான, எதிர்பாக்காத பெயர்கள்கூட அந்தப் பட்டியலில் கண்டிப்பாக இருக்கும். நிச்சயம் தி.மு.க-வை அது உலுக்கத்தான் போகிறது. இப்போதே என்னால் எதையும் லீக் செய்ய முடியாது.”

“தமிழர் பிரதமராவார் என்று அமித் ஷா கூறியது எடப்பாடி பழனிசாமியைத்தான் என்று குண்டை தூக்கிப் போடுகிறாரே செல்லூர் ராஜூ?”

“அமித் ஷா பேசிய கூட்டத்தில் நானும் இருந்தேன். பா.ஜ.க தலைவராகவும், பிரதமராகவும் வருங்காலத்தில் தமிழகத்திலிருந்து வர வேண்டுமென்று அமித் ஷா கூறினார். தமிழகத்திலிருந்து தமிழர்தான் வர வேண்டுமென்ற அவசியம் கிடையாது. நரேந்திர மோடியே தமிழ்நாட்டிலிருந்து போட்டியிட்டு பிரதமராக வரலாம். எதிர்காலத்தில் தமிழரும் வரலாம். அப்படித்தான் நான் அதைப் பார்த்தேன்.”

“பிரதமர் மோடி தமிழ்நாட்டில் போட்டியிடுவார் என ஒரு பேச்சு இருந்துகொண்டே இருக்கிறது. அது உண்மைதான் என்பதுபோல இருக்கிறதே உங்கள் பதில்?”

“(சிரிக்கிறார்…) நான் உறுதிப்படுத்தவில்லை. அவரவர் தலைவர், அந்தந்த மாநிலங்களில் போட்டியிட வேண்டுமென்று ஒவ்வொரு மாநிலத்துக்கும் ஆசை இருக்கும். எங்களுக்கும் மிகப்பெரிய ஆசை இருக்கிறது. ஆனால் அதைப்பற்றி முடிவெடுக்கும் அதிகாரம் எங்களுக்கு இல்லை. பாசிட்டிவான முடிவு எடுப்பார்கள் என்று எதிர்பார்த்து காத்திருக்கிறோம்.”

மோடி, எடப்பாடி பழனிசாமி

“அண்ணாமலையை நீக்கினால்தான் கூட்டணி குறித்து பேசுவோம் என எடப்பாடி பழனிசாமி நிர்ப்பந்திப்பதாகச் சொல்லப்படுகிறதே… உண்மைதானா?”

“அரசியலுக்காகப் பரப்பபடும் அத்தகைய செய்திகளில் உண்மையில்லை. அண்ணாமலையின் பிறந்தநாளுக்குக்கூட எடப்பாடி பழனிசாமி தொலைபேசியில் வாழ்த்தினார். இருவருக்குள்ளும் நல்ல உறவு இருக்கிறது. கூட்டணி வலுவாக இருக்கிறது.”

“மணிப்பூர் கலவரம் தொடர்பாக பிரதமர் எதுவுமே சொல்லாமல் மௌனம் காப்பது ஏன் என எதிர்க்கட்சிகள் கேட்கின்றவே?”

“கலவரத்தை மட்டுப்படுத்தி சகஜ நிலைக்குக் கொண்டுவருவதுதான் முக்கியம். உள்துறை அமைச்சர் அமித் ஷா இரண்டு முறை மணிப்பூருக்குச் சென்று வந்துவிட்டார். அவர் பிரதமருக்குத் தகவல் கொடுத்துக்கொண்டுதான் இருக்கிறார். அவரே பேச வேண்டுமென்று, இதில் அரசியல் செய்ய எதுவும் இல்லை.”

மணிப்பூர் கலவரம்

“வன்முறையை கைவிடுங்கள் என இரு தரப்புக்கும் பிரதமர் வெளிப்படையாக கோரிக்கை வைத்தால், சுமுகத் தீர்வு கிட்ட வாய்ப்பு ஏற்படும் அல்லவா… அதைசெய்ய என்ன தயக்கம்?”

“நிச்சயமாக, அது குறித்து ஆலோசனை நடக்கிறது. தகுந்த நேரத்தில் சரியானதைச் செய்வார்கள்.”

“50 நாள்களுக்கும் மேல் கலவரம் தொடருகிறது என்றால், அது மணிப்பூரை ஆளும் பா.ஜ.க அரசின் தோல்வி இல்லையா?”

“இடைப்பட்ட சில நாள்கள் கலவரமின்றி அமைதியாகத்தான் இருந்தது. மீண்டும் சில இடங்களில் கலவரம் வெடித்தது. இருப்பினும் கலவரத்தை கட்டுப்படுத்துவதில் முன்னேற்றம் இல்லை என்று சொல்லிவிட முடியாது.”

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.