“போலீஸ் விசாரணை என்ற பெயரில் ஏற்படும் இறப்புகளுக்கு என்றுதான் முடிவுகாட்டுமோ திமுக..?" – இபிஎஸ்

தஞ்சாவூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் நகரச் செயலாளரும், சிறிய நகைக்கடை நடத்தி வந்தவருமான ராஜசேகரனை, திருட்டு நகைகளை வாங்கியதாகச் சந்தேகத்தின் பேரில் கடந்த 22-ம் தேதி திருச்சி போலீஸார் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். கூடவே அவரின் மனைவியையும் போலீஸார் அழைத்துச் சென்றனர். விசாரணையில் ராஜசேகரனிடம், பெண் சப்-இன்ஸ்பெக்டர் உமா சங்கரி கடுமையாக நடந்துகொண்டதாகக் கூறப்படுகிறது.

ராஜசேகரன்

இதனால் எந்த தவறும் செய்யாததற்கு இப்படி செய்கிறார்களே என்று மனஉளைச்சலுக்கு ஆளான ராஜசேகரன், கடந்த 25-ம் தேதியன்று ரயில் முன்பு பயந்து தற்கொலை செய்துகொண்டார். காவல்துறையின் விசாரணையால் மனஉளைச்சலுக்கு ஆளாகி ராஜசேகரன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் காவல்துறையையும், ஆளும் தி.மு.க அரசையும் நோக்கி பல கேள்விகளை எழுப்பியிருக்கிறது.

அந்த வரிசையில் அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, `காவல்துறை விசாரணை என்ற பெயரில் ஏற்படும் உயிரிழப்புகளுக்கு இந்த திறனற்ற விடியா தி.மு.க என்றுதான் முடிவுகாட்டுமோ’ என அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.

அந்த அறிக்கையில், “இந்த விடியா தி.மு.க அரசின் ஏவல்துறையாக விளங்கும் காவல்துறை, அ.தி.மு.க-வினர்-மீதும், அரசின் குறைகளைச் சுட்டிக்காட்டுபவர்கள்மீதும் அடக்குமுறையை ஏவிவிடுவது மட்டுமல்லாமல், ஆளுங்கட்சிக்கு கண்ணை மூடிக்கொண்டு ஜால்ரா அடிக்கும் கட்சியைச் சேர்ந்தவரையே கொடுமைப்படுத்திய அவலம் அரங்கேறியிருக்கிறது. விடியா அரசையும், பொம்மை முதலமைச்சர் ஸ்டாலினையும் தூக்கிப் பிடித்து நிறுத்தும் இயக்கங்களில் ஒன்றான, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பட்டுக்கோட்டை நகர முன்னாள் செயலாளர் ராஜசேகரன் என்பவர் காவல்துறை கொடுத்த தொடர் டார்ச்சரால் தற்கொலை செய்துகொண்ட கொடுமை நடந்திருக்கிறது.

எடப்பாடி பழனிசாமி

ராஜசேகரன் சில நாள்களுக்கு முன்பு ஒருவரிடம் திருட்டு நகையை வாங்கியதாகக் கூறி அவரை விசாரிக்க திருச்சி பகுதி காவலர்கள் அழைத்துச் சென்றிருப்பதாகச் செய்திகள் வந்திருக்கின்றன. நகைக்கடை தொழிலில் விசாரணை என்பது வழக்கமான ஒன்றுதான் என்று சொன்னாலும், அவருடைய மனைவி லட்சுமியையும் சம்பந்தமே இல்லாமல் அழைத்துச் சென்று விசாரணை என்ற பெயரில் கொடுமைப்படுத்தியதாகத் தெரிகிறது. இதன் காரணமாக கடுமையான மனஉளைச்சலுக்கு ஆளான ராஜசேகரன் ரயில் முன்பு பாய்ந்து தன் உயிரை மாய்த்துக் கொண்டார்.

போராட்ட குணமுள்ள பொதுவுடைமைக் கட்சியைச் சேர்ந்த ஒருவர் தற்கொலைக்கு தூண்டப்படுகிறார் என்று சொன்னால், அதற்கு காரணமானவர்கள்மீது தமிழக காவல்துறை தலைவர் மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். குறிப்பாக திருச்சியைச் சேர்ந்த பெண் காவலர், ராஜசேகரனையும், அவரது குடும்பத்தினரையும் மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளாக்கினார் என்ற செய்தி ஏற்புடையதல்ல. காவல்துறையைக் கையில் வைத்திருக்கும் பொம்மை முதலமைச்சரின் கட்டுப்பாட்டில் அந்தத்துறை இல்லாமல், தரிகெட்டு அலைவது தமிழகத்தை மயான பூமியாக்கும் என்று எச்சரிக்கை விரும்புகிறேன். இந்த அராஜக ஆட்சியில் தவறு செய்பவர்கள் தப்பிப்பதும், நேர்மையாக தொழில் செய்பவர்கள் தண்டிக்கப்படுவதும் கொடுமையிலும் கொடுமை.

ஸ்டாலின்

ராஜசேகர் தற்கொலைசெய்த வழக்கை, தனி அமைப்பை நியமித்து விசாரிக்க வேண்டும் என்று இந்த விடியா தி.மு.க அரசை வலியுறுத்துகிறேன். மேலும், காவல்துறையினரின் கொடுமை தாங்காமல் தற்கொலை செய்துகொண்ட ராஜசேகரன் குடும்பத்துக்கு 50 லட்சம் ரூபாய் நிவாரண நிதி உதவி வழங்க வேண்டும் என்றும், இந்த விவாகரத்தில் சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகள் உட்பட அனைவரையும் விசாரித்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் காவல்துறைக்குப் பொறுப்பு வகிக்கும் விடியா தி.மு.க அரசின் நிர்வாகத் திறனற்ற முதலமைச்சரை வலியுறுத்துகிறேன்” என்று எடப்பாடி பழனிசாமி கூறியிருக்கிறார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.