முத்தலாக் தடையை போல் பொது சிவில் சட்டமும் முஸ்லிம் பெண்களுக்கு சாதகமா? – எதிர்ப்பை சமாளிக்க பாஜக முன்னிறுத்தும் கருத்துகள்

புதுடெல்லி: முஸ்லிம்களிடையே ஒரே சமயத்தில் மூன்று முறை ‘தலாக்’ எனக் கூறி விவாகரத்து செய்யும் நடைமுறை பல நூற்றாண்டுகளாக இருந்தது. இதனால் முஸ்லிம் பெண்கள் பாதிக்கப்படுவதை தடுக்க சட்டம் இயற்றுமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து மத்திய அரசு முத்தலாக் தடை சட்டத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியது. இதற்கு உ.பி. சட்டப்பேரவை தேர்தல் மற்றும் 2019 மக்களவை தேர்தல்களில் பாஜகவுக்கு பலன் கிடைத்திருந்தது.

இந்த வகையில், பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்பட்டாலும் முஸ்லிம் பெண்கள் பலன் அடைவார்கள் என பாஜக கருதுகிறது. இதன் பலனை வரும் தேர்தல்களில் பெற பாஜக திட்டமிடுகிறது. எனினும், பொது சிவில் சட்டத்திற்கு முஸ்லிம்கள் இடையே எதிர்ப்பு கிளம்பும் சூழல் உள்ளது. இந்த எதிர்ப்பை சமாளிக்க பாஜகவின் சிறுபான்மையினர் பிரிவு ஒரு திட்டம் வகுத்துள்ளது.

அதன்படி, நாடு முழுவதிலும் முஸ்லிம் பெண்களிடம் பொது சிவில் சட்டத்தால் பலன்கள் கிடைக்கும் என பிரச்சாரம் செய்ய உள்ளது. பாஜக சிறுபான்மையினர் பிரிவின் கருத்துப்படி, பொது சிவில் சட்டத்தால் முஸ்லிம் பெண்களுக்கு சொத்தில் சம உரிமை கிடைக்கும். குழந்தைகள் இல்லாத தம்பதிகள் பிறர் குழந்தைகளை தத்து எடுக்கும் உரிமை கிடைக்கும். தற்போது ஷரீயத் சட்டப்படி முஸ்லிம் ஆண்களுக்கு நான்கு பெண்களை மணமுடிக்கும் உரிமை உள்ளது. பொது சிவில் சட்டம் அமலுக்கு வந்தால் அவர்கள் இவ்வாறு திருமணம் செய்ய முடியாது.

குற்றங்களுக்கு தண்டனை அளிக்கும் விசாரணைகளில் ஒரு பெண் தனித்து கூறும் சாட்சி ஷரீயத்தில் ஏற்புடையது அல்ல. ஒன்றுக்கும் மேற்பட்ட முஸ்லிம் பெண்கள் கூறும் சாட்சிக்கு மட்டுமே ஷரீயத்தில் இடம் உள்ளது. இதுபோல், பொது சிவில் சட்டத்தால் முஸ்லிம் பெண்களுக்கு அதிகமான பலன் கிடைக்கும் என வலியுறுத்த பாஜக தயாராகிறது.

இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடி நேற்று முன்தினம் போபாலில் பேசும்போது, “ஒரே வீட்டில் இரண்டு வகை சட்டங்கள் ஏற்புடையதா? பொது சிவில் சட்டம் அமலுக்கு வந்தால்தான் முஸ்லிம்களுக்கு நீதி கிடைக்கும். இதைத்தான் உச்ச நீதிமன்றம் வலியுறுத்தி வருகிறது” என்றார்.

இதனிடையே மத்திய சட்ட ஆணையம் சார்பில் கடந்த ஜுன் 14 முதல், பொது சிவில் சட்டத்தை அமல்படுத்தும் நடவடிக்கை தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இச்சட்டம் குறித்து பொதுமக்களிடம் கருத்துகள் கேட்கப்பட்டுள்ளன. இதன் மீது விரைந்து முடிவு எடுத்து, மக்களவை தேர்தலுக்கு முன்பாக பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த பாஜக விரும்புகிறது.

முன்னதாக பொது சிவில் சட்டத்தை பாஜக ஆளும் மாநிலங்களில் அமல்படுத்த உத்தராகண்ட் மற்றும் குஜராத்தில் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது இந்த சட்டத்தை திடீரென நாடாளுமன்றத்தில் நிறைவேற்றி தேசிய அளவில் அமல்படுத்த முயற்சிக்கப்படுகிறது. இதன் பின்னணியில் அடுத்த வருடம் வரவிருக்கும் மக்களவை தேர்தல் இருப்பதாகத் தெரிகிறது.

பாஜக ஆட்சி தொடங்கியது முதல் காஷ்மீருக்கான தனி அந்தஸ்தை ரத்து செய்வது, அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவது, பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவது ஆகிய 3 முக்கிய கொள்கைகளை வலியுறுத்தி வந்தது. இவற்றில் முதலிரண்டு கொள்கைகளை பாஜக நிறைவேற்றியது. தற்போது பொது சிவில் சட்டம் மட்டும் பாக்கி உள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.