மேட்டுப்பாளையம்: ‘பாகுபலி’ யானையின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதால் அதனை மயக்க ஊசி செலுத்தி பிடிக்கும் பணி தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக வனத்துறை அறிவித்துள்ளது.
கோவை மேட்டுப்பாளையம் பகுதியில் ‘பாகுபலி’ என்ற பெரிய உருவம் உடைய ஆண் யானை சுற்றி வருகிறது. இந்த யானை உணவு தேடி அவ்வப்போது, வனப்பகுதியை விட்டு வெளியேறுவதும், பயிர்களை உண்பதுமாக இருந்து வருகிறது. இந்நிலையில், கடந்த 21-ம் தேதி இந்த யானையின் வாயிலிருந்து வந்த எச்சிலுடன், ரத்தமும் கலந்து வருவதை வனத்துறையினர் கண்டறிந்தனர். இதையடுத்து, யானையை கண்டறிய தேடுதல் குழுவும், சிகிச்சை அளிக்க கால்நடை மருத்துவர்கள் அடங்கிய மருத்துவ குழுவும் அமைக்கப்பட்டது. ட்ரோன் மூலமும் யானையின் நடமாட்டம் கண்காணிக்கப்பட்டது.
வாயில் காயம் இருப்பது உறுதி செய்யப்பட்டதால், யானைக்கு மயக்க ஊசி செலுத்தி பிடிக்க முடிவு செய்யப்பட்டது. இதற்கு உதவ, முதுமலையில் இருந்து வசீம், விஜய் ஆகிய இரண்டு கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டன. மொத்தம் 72 வனப் பணியாளர்கள் அடங்கிய குழுவினர், பல சிறப்பு குழுக்களாக பிரிக்கப்பட்டு யானையின் நடமாட்டம், உடல்நலம் குறித்து கண்காணித்து வந்தனர்.
இதனிடையே, யானை உடல் நலத்துடன் இருப்பது உறுதிசெய்யப்பட்டாதல் அதனை மயக்க ஊசி செலுத்தி பிடித்து சிகிச்சை அளிக்கும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இதுதொடர்பாக வனத்துறையினர் கூறியதாவது: காயமடைந்த யானையின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதால், வாழை, பாக்கு, மூங்கில், சீங்கை கொடி, மரப்பட்டைகள், பலா போன்றவற்றை சாப்பிட்டது. நல்ல முறையில் தண்ணீர் அருந்தியது. சாணம், சிறுநீர் கழிப்பதும் நன்றாக உள்ளது. வாயில் இருந்து வரும் உமிழ்நீர் நல்ல முறையில் உள்ளதாகவும் மருத்துவக்குழுவினரால் கண்டறியப்பட்டது.
நாட்டு வெடிகுண்டு காரணமில்லை: யானைக்கு ஏற்பட்ட காயமானது இரண்டு யானைகளுக்கு இடையே ஏற்பட்ட நட்பு மோதல் காரணமாகவோ, மரங்களை உடைத்து உண்ணும்போது ஏற்பட்ட குத்து காரணமாகவே ஏற்பட்டிருக்கலாம் என மருத்துவ குழுவினர் தெரிவித்தனர். இந்த காயமானது அவுட்காய் எனப்படும் நாட்டு வெடிகுண்டால் ஏற்பட்டிருக்க வாய்ப்பில்லை எனவும் கால்நடை மருத்துவ குழுவினர் தெரிவித்தனர். யானையின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதால், அதனை மயக்க ஊசி செலுத்தி பிடித்து சிகிச்சை அளிக்கும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. அது நடமாடும் இடங்களில் மருந்து, ஊட்டச்சத்து மாத்திரைகளை பழங்களில் வைத்து அளிக்கப்பட்டு வருகிறது. மருத்துவக் குழுவினரின் பரிந்துரைப்படி, யானையின் உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்படும்” இவ்வாறு அவர்கள் கூறினர்.