செந்தில் பாலாஜி தகுதி நீக்கம்: திடீரென உள்ளே வந்த அமித் ஷா – சறுக்கிய ஆர்.என்.ரவி

செந்தில் பாலாஜியை அமைச்சரவையிலிருந்து நீக்குவதாக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி நேற்று அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு பரபரப்பை கிளப்பினார்.

“செந்தில் பாலாஜி மீது பணமோசடி செய்தல் உள்ளிட்ட பல்வேறு ஊழல் வழக்குகள், கடுமையான குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. அமைச்சர் பதவியை தவறாக பயன்படுத்தி, தன் மீதான விசாரணைக்கும் அவர் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறார். தற்போது நீதிமன்ற காவலில் அமலாக்கத் துறை விசாரணையில் உள்ளார். அதுமட்டுமில்லாமல், தமிழக காவல் துறையிலும் அவர் மீது சில வழக்குகள் உள்ளன. இதனால் செந்தில் பாலாஜி அமைச்சரவையில் தொடர்ந்தால் அரசு இயந்திரத்தின் செயல்பாடு பாதிக்கப்படும்.” என்று கூறி அவரை அமைச்சரவையிலிருந்து நீக்குவதாக ஆளுநர் ஆர்.என்.ரவி அறிவித்தார்.

இது தமிழ்நாட்டு அரசியல் களத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த அறிவிப்பு வெளியான சிறிது நேரத்திலேயே சென்னை வேளச்சேரியில் செய்தியாளர்களைச் சந்தித்த முதலமைச்சர்

, “அமைச்சரவையிலிருந்து நீக்க ஆளுநருக்கு அதிகாரம் இல்லை. இதை சட்ட ரீதியாக சந்திப்போம்” என்று கூறினார்.

இந்த சூழலில் நள்ளிரவு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் எழுதிய ஆளுநர், செந்தில் பாலாஜியை நீக்கிய உத்தரவை நிறுத்திவைப்பதாக அறிவித்துள்ளார்.

செந்தில் பாலாஜியை அமைச்சரவை பதவியிலிருந்தே நீக்க வேண்டும்

அந்த கடிதத்தில், “செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்கி உத்தரவு பிறப்பித்து கடிதம் அனுப்பியிருந்தேன். இது தொடர்பாக ஒன்றிய அரசின் தலைமை வழக்கறிஞரிடம் ஆலோசனை பெறுமாறு ஒன்றிய உள்துறை அமைச்சர் எனக்கு அறிவுறுத்தியுள்ளார். நான் ஒன்றிய அரசின் தலைமை வழக்கறிஞரை இது தொடர்பாக அணுகியுள்ளேன். அதுவரை செந்தில் பாலாஜியை அமைச்சரவையிலிருந்து நீக்கியது தொடர்பான என எனது உத்தரவை நிறுத்தி வைக்கிறேன்” என்று கூறியிருந்தார்.

இந்த விவகாரம் தொடர்பாக அரசியல் விமர்சகர்களிடம் பேசினோம். “அரசியலமைப்புச் சட்டத்தின் படி, அமைச்சரவையில் ஒருவரை சேர்க்கவோ, நீக்கவோ ஆளுநருக்கு அதிகாரம் இல்லை. முதலமைச்சரின் பரிந்துரையின் படியே அவர் செயல்பட முடியும். இப்படியிருக்க தன் மீது கவனத்தை திருப்புவதற்காக அவசர கதியில் ஆளுநர் இது போன்ற நடவடிக்கையில் இறங்கியுள்ளார். சட்டப்படி அவ்வாறு நீக்க முடியாது என்பதால் அமித் ஷா இதில் தலையிட்டு ஆளுநர் ரவிக்கு கடிவாளம் போட்டுள்ளார். ஆளுநர் தேவையில்லாமல் கிளப்பிய இந்த விவகாரத்தை அப்படியே ஆறப்போடுவதற்காக ஒன்றிய அரசின் தலைமை வழக்கறிஞரை ஆலோசிக்கிறோம் என்று கூறி பின்வாங்கும் நிலை அவர்களுக்கு ஏற்பட்டுள்ளது” என்று கூறியுள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.