தெலங்கானா மாநிலம், செக்கந்தராபாத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கு உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டாவைச் சேர்ந்த வாலிபருடன் திருமணம் ஏற்பாடானது. மணமகன் பெண் பார்க்க வந்த போது பெண்ணின் வயிறு பெரிதாக இருந்தது.
ஏன் வயிறு பெரிதாக இருக்கிறது என்று மணமகன் வீட்டார் கேட்டதற்கு வயிற்றில் கல் இருந்தது என்றும், அதனை அகற்றியபோது தற்காலிகமாக வயிறு பெரிதாக இருப்பதாக பெண் வீட்டார் சொல்லி சமாளித்தனர். மணமகனும் பித்த வாந்தி போல் இதுவும் சாதாரணமான ஒன்றுதான் என்று நினைத்து திருமணத்தை முடித்துக்கொண்டார். திருமணம் முடிந்தவுடன் மணமக்கள் முதலிரவுக்கு சென்றனர். முதலிரவில் மணமகள் தனக்கு வயிறு வலிப்பதாக சொன்னார். காலையில் அவரை மணமகன் வீட்டார் மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றனர்.
டாக்டர் மணமகளை சோதித்த போது அவர் 7 மாதம் கர்ப்பமாக இருந்தது தெரியவந்தது. அதோடு திருமணமான அடுத்த நாளே அப்பெண்ணிற்கு பிரசவ வலியும் ஏற்பட்டது. முதல் நாள் திருமணம் இரண்டாவது நாளில் குழந்தை என்றவுடன் மணமகன் அதிர்ச்சியாகிவிட்டார். மணமகளை ஏற்றுக்கொள்ள முடியாது என்று தெரிவித்தார். பெண் வீட்டாருக்கு தகவல் தெரிவித்து அவர்களை நொய்டாவுக்கு வரவழைத்தனர். இரு தரப்பினரும் போலீஸ் நிலையத்தில் பேச்சுவார்த்தை நடத்தினர். திருமணத்துக்கு முன்பே பெண் கர்ப்பமாக இருந்தது பெண் வீட்டாருக்கு ஏற்கெனவே தெரிந்திருந்தது.
அது தெரிந்தே திருமணம் செய்து வைத்திருந்தனர். மணமகளை ஏற்றுக்கொள்ள முடியாது என்று மணமகன் திட்டவட்டமாக தெரிவித்தார். இதையடுத்து மகளையும், அவரது குழந்தையையும் தெலங்கானாவில் இருந்து வந்த பெற்றோர் தங்களுடன் அழைத்துச் சென்றனர். இதில் இரு தரப்பினரும் சமரசமாக சென்றதால் போலீஸில் புகார் செய்யப்படவில்லை.