மும்பை: முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அரசு நீண்ட நாட்கள் நீடிக்காது என்று உத்தவ் தாக்கரே அணியைச் சேர்ந்த சஞ்சய் ரவுத் தெரிவித்துள்ளார்.
சிவசேனா (யுடிபி) மாநிலங்களவை எம்பி சஞ்சய் ரவுத் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, “மகாராஷ்டிரா துணைமுதல்வர் தேவிந்திர பட்னாவிஸ் கடந்த 2019ம் ஆண்டு ஒரு சோதனையை மேற்கொண்டார். அவரது அந்தச் சோதனை தோல்வியில் முடிந்து அவருக்கு எதிராகவே திரும்பியது. அவர் தேசியவாத காங்கிரஸ் தலைவர் அஜித் பவாருடன் இணைந்து ஆட்சி அமைக்க முயற்சித்தார். 2019ம் ஆண்டு நவம்பர் 23ம் தேதி காலையில் அஜித் பவாரை துணை முதல்வராக்கி, முதல்வராக பதவியேற்றுக்கொண்ட பட்னாவிஸை மக்கள் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. அந்தக் கூட்டணி மூன்று நாட்கள் மட்டுமே நீடித்து.
இது குறித்து ஏற்கனவே அளித்த பேட்டி ஒன்றில், ‘கடந்த 2019ம் ஆண்டு பாஜகவுடன் இணைந்து ஆட்சி அமைக்க சரத் பவார் ஒப்புக்கொண்டார். பின்னர் தனது முடிவில் பின்வாங்கி இரட்டை விளையாட்டு ஆடினார்’ என்று தேவேந்திர பட்னவிஸ் தெரிவித்திருக்கிறார். ஆனால், இந்த விஷயத்தில் சரத் பவார் ஏதாவது செய்திருந்திருந்தால் பராவயில்லை. நீங்கள் ஒரு சோதனையை செய்தீர்கள். அது தோல்வியடைந்து உங்களுக்கு எதிராக முடிந்தது. அதற்கு பின்னர் சரத் பவார் உத்தவ் தாக்கரே தலைமையில் (சிவசேனா, காங்கிரஸ், என்சிபி கூட்டணியில்) ஒரு அரசை உருவாக்கி அதன் பின்னணியில் இருந்தார். இதுதான் உண்மை. தற்போதுள்ள ஷிண்டே தலைமையிலான அரசு நீண்ட நாட்கள் நீடிக்காது. இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு பிறகு இந்த அரசு மாறிவிடும்” இவ்வாறு தெரிவித்தார்.
கடந்த 2022ம் ஆண்டு ஜூன் மாதம் சிவசேனா கட்சியில் ஏற்பட்ட பிளவினைத் தொடர்ந்து கிளர்ச்சியில் ஈடுபட்ட ஏக்நாத் ஷிண்டே, பாஜகவுன் இணைந்து ஆட்சி அமைத்து முதல்வராகவும், தேவிந்திர பட்னாவிஸ் துணைமுதல்வராகவும் பதவி ஏற்றுக்கொண்டனர். அந்த அரசு பதவி ஏற்று இன்றுடன் (ஜூன் 30) ஓராண்டை நிறைவு செய்துள்ளது. முன்னதாக, மகாராஷ்டிராவில் கடந்த 2019ம் ஆண்டு சட்டபேரவைத் தேர்தலுக்கு பின்னர் முதல்வர் பதவி குறித்த சர்ச்சையால் சிவசேனா தலைவர் (அப்போது பிளவுபடவில்லை) உத்தவ் தாக்கரே பாஜகவுடனான உறவை முறித்துக்கொண்டார். அதனைத் தொடர்ந்து தேவேந்திர பட்னாவிஸ், தேசியவாத காங்கிரஸின் அஜித் பவாருடன் இணைந்து ஆட்சி அமைத்தார். அடுத்த 80 மணி நேரத்தில் அந்த அரசு கவிழ்ந்தது. அதனைத் தொடர்ந்து சரத் பவார், காங்கிரஸ், சிவசேனாவுடன் இணைந்து மகா விகாஷ் அகாதி கூட்டணியை உருவாக்கினார். உத்தவ் தாக்கரே தலைமையிலான அந்த அரசு, கடந்த ஆண்டு ஜூன் 29ம் தேதி சிவசேனா கட்சியில் ஏபட்ட கிளர்ச்சியைச் தொடர்ந்து கவிழ்ந்தது குறிப்பிடத்தக்கது.