\"டைட்டானிக்!\" கொடூர விபத்து நடந்து 10 நாள் கூட ஆகல.. அதற்குள் அடுத்த சுற்றுலாவாம்! ஓஷன்கேட் சர்ச்சை

வாஷிங்டன்: டைட்டானிக் நீர்மூழ்கிக் கப்பல் வெடித்துச் சிதறி 5 பேர் உயிரிழந்த 10 நாட்கள் கூட ஆகாத நிலையில், ஓஷன்கேட் நிறுவனம் இப்போது மீண்டும் டைட்டானிக் நீர்மூழ்கிக் கப்பல் குறித்து விளம்பரம் கொடுத்துள்ளது.

கடந்த 1912ஆம் ஆண்டில் டைட்டானிக் கப்பல் தனது முதல் பயணத்திலேயே அட்லாண்டிக் பெருங்கடலில் மூழ்கியது.. கடந்த நூற்றாண்டில் நடந்த மிக மோசமான விபத்துகளில் ஒன்றாக இது கருதப்படுகிறது. இதில் சுமார் 1500 பேர் உயிரிழந்தனர்.

கப்பலின் சிதிலமடைந்த பகுதிகளே பெரும் போராட்டத்திற்குப் பிறகு 1970களில் தான் கடலுக்கு அடியில் எங்கு இருக்கிறது என்பது கண்டறியப்பட்டது. அதைத் தொடர்ந்து டைட்டானிக் பகுதிகள் குறித்த ஆய்வுகள் தொடர்ச்சியாக நடந்து வருகிறது.

டைட்டானிக் கப்பல் விபத்து: இதற்கிடையே டைட்டானிக் கப்பலின் சிதிலமடைந்த பகுதிகளை நேரில் காண அழைத்துச் செல்வதாகக் கூறி ஓஷன்கேட் என்ற நிறுவனம் விளம்பரப்படுத்தியது. அதில் ஓஷன்கேட் சிஇஓ உட்பட பெரும் பணக்காரர்கள் 5 பேர் சென்றனர். இருப்பினும், நீர்மூழ்கிக் கப்பல் கிளம்பிய கொஞ்ச நேரத்திலேயே அது கனெக்ஷனை இழந்தது. அந்த கப்பல் கடலுக்கு அடியில் வெடித்துச் சிதறியதில் 5 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

டைட்டானிக் நீர்மூழ்கிக் கப்பல் வெடித்துச் சிதறி ஐந்து பேர் உயிரிழந்து 10 நாட்கள் ஆகியுள்ள நிலையில், ஓஷன்கேட் நிறுவனம் இன்னும் டைட்டானிக் சிதிலமடைந்த பாகங்களைக் காணச் செல்லும் டைட்டன் நீர்மூழ்கிக் கப்பல் பயணம் குறித்த விளம்பரங்களை வெளியிட்டு வருகிறது. பல சர்வதேச ஊடகங்கள் ஓஷன்கேட் இன்னும் இந்த விளம்பரத்தை வெளியிட்டு வருவதை உறுதி செய்துள்ளனர்.

விளம்பரம்: அட்லாண்டிக் பெருங்கடலில் மூழ்கிக் கிடக்கும் டைட்டானிக் கப்பலின் பாகங்களைக் காண அடுத்த ஆண்டு ஜூன் 12 முதல் ஜூன் 20 வரை ஒரு பயணம்.. ஜூன் 21 முதல் ஜூன் 29 வரை ஒரு பணம் என இரண்டு பயணங்களைத் திட்டமிட்டுள்ளதாக ஓஷன்கேட் தனது விளம்பரத்தில் தெரிவித்துள்ளது. இதில் பயணிக்க விரும்பும் நபர் $250,000 டாலர், அதாவது இந்திய மதிப்பில் 2 கோடி ரூபாய் கொடுத்து டிக்கெட் வாங்க வேண்டும்.

நீர்மூழ்கிக் கப்பலில் பயணம், தங்கும் ஹோட்டல், தேவையான அனைத்து பயிற்சிகள், கருவிகள் மற்றும் கப்பலில் இருக்கும் போது உணவுகள் என்று அனைத்தையும் உள்ளடக்கிய ஒன்றாக இது இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. இதற்கான விரிவான திட்டத்தையும் ஓஷன்கேட் வகுத்துள்ளது. கடலுக்கு அடியில் செல்ல வேண்டும் என்பதால் அதற்கான டிரைனிங்கும் வழங்கப்படுமாம். அதன் பின்னரே அவர்கள் கடலுக்கு அடியில் அழைத்துச் செல்லப்படுவார்கள்.

மோசமான விபத்து: இதற்குப் பெரியளவில் விளம்பரப்படுத்தப்பட்டது. இருப்பினும், கடந்த வாரம் இது முதல் பயணத்திலேயே மோசமான விபத்தைச் சந்தித்தது. இந்த விபத்தில், ஓஷன்கேட் சிஇஓ ஸ்டாக்டன் ரஷ், பிரிட்டிஷ் கோடீஸ்வரர் ஹமிஷ் ஹார்டிங், பிரெஞ்சு டைவிங் நிபுணர் பால்-ஹென்றி நர்ஜோலெட் மற்றும் பாகிஸ்தானைச் சேர்ந்த தொழிலதிபர் ஷாஜதா தாவூத் மற்றும் அவரது மகன் சுலேமான் ஆகியோர் உயிரிழந்தனர்.

முதல் பயணத்திலேயே இந்த விபத்து ஏற்பட்ட நிலையில், இந்த டைட்டானிக் பயணத்தை அந்த நிறுவனம் முழுமையாக ரத்து செய்துள்ளது. இருப்பினும், பயணத்திற்கான விளம்பரம் மட்டும் அதன் தளத்தில் இருப்பதால் நெட்டிசன்கள் குழப்பமடைந்தனர். இது குறித்து விரைவில் அதிகாரப்பூர்வ விளக்கம் அளிக்கப்படும் எனத் தெரிகிறது.

சர்ச்சை விளம்பரம்: முன்னதாக டைட்டன் நீர்மூழ்கிக் கப்பல் மாயமாகி அதைத் தேடும் பணிகள் நடந்து வந்த போதே, ஓஷன்கேட் நிறுவனம் தங்கள் நீர்மூழ்கி கப்பலுக்குத் துணை பைலட் தேவை என விளம்பரப்படுத்தியது. உள்ளே 5 பேர் இருந்த நிலையில், அவர்களின் நிலை என்ன ஆனது எனத் தெரியாமல் இருந்த போது இந்த விளம்பரத்தை அவர்கள் வெளியிட்டது பெரும் சர்ச்சையானது. நெட்டிசன்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், அந்த விளம்பரம் திரும்பப் பெறப்பட்டது.

இந்த டைட்டன் நீர் மூழ்கிக் கப்பலும் டைட்டானிக் கப்பலை போலவே முதல் பயணத்திலேயே விபத்தில் சிக்கியது. அதைத் தேடும் பணிகள் சில நாட்கள் நடந்த நிலையில், அதன் எஞ்சியிருக்கும் பாகங்கள் சமீபத்தில் மீட்கப்பட்டது. விபத்திற்கான காரணம் குறித்தும் நீர்மூழ்கிக் கப்பலில் இருக்கும் பாதுகாப்பு குறைபாடு காரணமா என்பது குறித்தும் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். டைட்டானிக் கப்பலில் இருந்து 1,600 அடி தொலைவில், இந்த நீர்மூழ்கிக் கப்பல் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டது.

Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.