ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரிக்க, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், வைகைப்புயல் வடிவேலு நடிக்க, மாரி செல்வராஜ் இயக்கத்தில் நேற்று வெளியான ‘மாமன்னன்’ படத்துக்குக் கலவையான விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கின்றன.
படம் வெளியாவதற்கு முன்பாக கமல் நடித்த ‘தேவர் மகன்’ படத்தில் நடித்த வடிவேலுவின் இசக்கி கதாபாத்திரத்தின் நீட்சிதான் மாமன்னன் என மாரி செல்வராஜ் பேசியதையொட்டி நிறைய விவாதங்கள் எழுந்தன. படம் வெளியான நிலையில், அஇஅதிமுகவைச் சேர்ந்த முன்னாள் சபாநாயகர் தனபாலின் கதையைத்தான் படத்தில் காட்டியிருக்கிறார்கள் என்கிற பேச்சு எழத் தொடங்கியிருக்கிறது.
கொங்கு மண்டலப் பகுதியிலிருந்து அரசியலுக்குள் வந்த பட்டியலினச் சமூகத்தைச் சேர்ந்த தனபாலை சபாநாயகர் பதவி வழங்கியவர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா என அஇஅதிமுகவினர் நேற்றே சமூக வலைதளங்களில் பரப்புரை செய்யத் தொடங்கி விட்டார்கள்.
அ.தி.மு.க வைச் சேர்ந்த பலரும் நேற்றிலிருந்து தனபால் குறித்த பல பதிவுகளை பதிவிட்டு வருகின்றனர். திமுக வை விமர்சித்தும் ஜெயலலிதாவைப் புகழ்ந்தும் இருக்கின்றன அந்தப் பதிவுகள்.
இன்னொரு புறம், திமுக தொண்டர்கள் மற்றும் நடுநிலையானவர்களுக்குமே ‘ஏன் ஜெயலலிதா செய்த ஒரு நல்ல விஷயத்தைப் பாராட்டுகிற மாதிரியான ஒரு கதையைத் தேர்ந்தெடுத்து உதயநிதி நடித்தார்’ எனக் குழம்பிப் போயுள்ளனர்.
‘பட்டியலின வேட்பாளர்’, ’சேலம் மாவட்ட அரசியல்’, ‘சபாநாயகர்’, `ராசிபுரம் தொகுதி’ என்பன போன்ற குறியீடுகள்தான் கதை தனபாலுடையது எனப் பேச வைப்பதாகச் சொல்லப்படும் நிலையில், முன்னாள் சபாநாயகர் தனபாலிடமே இதுகுறித்துப் பேசலாமெனத் தொடர்பு கொண்டோம்.
‘’ஆமாங்க, நேத்துல இருந்து நிறைய பேர் என்னைத் தொடர்பு கொண்டு பேசிட்டேதான் இருக்காங்க. அமைச்சர் உதயநிதி நடிக்க அவங்க குடும்ப நிறுவனம் தயாரிச்ச படத்தின் கதை என்னைப் பத்தினதா இருக்குன்னு அவங்க சொல்லித்தான் தெரிஞ்சுகிட்டேன். நான் எழுபதுகள்ல இருந்து அதிமுகவுல இருக்கேன். அம்மாவுக்கு விசுவாசமா இருந்தேன். இன்னைக்கும் கட்சியின் நலன் தான் முக்கியம்னு நினைச்சுதான் இயக்கப் பணி செய்துட்டு வர்றேன்.
என்னுடைய தீவிரமான விசுவாசத்தையும் கட்சிப் பணிகள்ல காட்டிய ஆர்வத்தையும் பார்த்துட்டுதான் அம்மா எனக்குப் பெரிய பெரிய பதவிகள் தந்தாங்க. கட்சியில அமைப்புச் செயலாளர் ஆக்கினாங்க. பிறகு அமைச்சாரானேன். துணை சபாநாயகர் பிறகு சபாநாயகர்னு எல்லாப் பதவிகளுமே அம்மா என் மீது நம்பிக்கை வச்சுத் தந்தாங்க. அந்த நம்பிக்கைக்குப் பங்கம் வராம நானும் என் பதவிக் காலத்துல திறம்பட பணிபுரிந்தேன். மிச்சமிருக்கிற காலமும் இந்த இயக்கத்துக்காகவே உழைச்சிட்டிருப்பேன்.
இப்ப இந்த ‘மாமன்னன்’ படம் என் கதையின் சாயலில் இருக்குன்னா அதை அம்மாவுக்குக் கிடைச்ச வெற்றியாத்தான் நான் பார்க்குறேன். அதுக்காக படத்தை எடுத்த அதுல நடிச்ச உதயநிதிக்கு நன்றி. படத்தை இன்னும் நான் பார்க்கலை. இனிமேல்தான் பார்க்கணும்’’ என்கிறார் தனபால்.