இலாகா இல்லாத அமைச்சர் செந்தில் பாலாஜியை குறிவைத்து ஆளுநர் ஆர்.என்.ரவி எடுத்த நடவடிக்கை ஒட்டுமொத்த தமிழகத்தையும் பரபரப்பில் ஆழ்த்தியுள்ளது. அடுத்த சில மணி நேரங்களில் ஆளுநர் பின் வாங்கியதும் கவனம் பெற்றது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் சட்ட வல்லுநர்கள் உடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார்.
அமலாக்கத்துறை தீவிரம்
மறுபுறம் பைபாஸ் அறுவை சிகிச்சைக்கு பின்னர் தொடர் ஓய்வில் இருக்கும் செந்தில் பாலாஜியை கண்கொத்தி பாம்பாக அமலாக்கத்துறை கவனித்து வருகிறது. விசாரணைக்காக காவலில் எடுக்க நீதிமன்ற கதவுகளை முட்டி மோதியும் எடுபடவில்லை. மருத்துவர்கள் அவரது உடல்நலன் குறித்து சர்டிபிகேட் கொடுத்த பின்னரே விசாரணைக்குள் நுழைய முடியும் என்று நீதிமன்றம் கட் அண்ட் ரைட்டாக சொல்லிவிட்டது.
செந்தில் பாலாஜியிடம் விசாரணை
இந்த சூழலில் மற்றொரு விஷயத்தை அமலாக்கத்துறை கையிலெடுத்துள்ளது. அமைச்சர் செந்தில் பாலாஜியை விசாரிக்க முடியவில்லை என்றால் பரவாயில்லை. அவரது சகோதரர் அசோக் இருக்கிறாரே? அவரை பிடித்தால் ஒட்டுமொத்த ரகசியங்களையும் போட்டு உடைத்துவிடுவார் என அமலாக்கத்துறை காய் நகர்த்தி வருகிறது.
சகோதரர் அசோக்கிற்கு சம்மன்
ஆனால் அதில் ஒரு சிக்கல் இருக்கிறது. அவருக்கு 4 முறை சம்மன் அனுப்பியும் இதுவரை நேரில் ஆஜராகவில்லை என்று தெரிகிறது. ஆள் எங்கே இருக்கிறார் என விசாரித்தால் ஒருவருக்கும் தெரியவில்லை. இதன்மூலம் தலைமறைவாகி விட்டதாக தெரிகிறது.
அதிமுக ஆட்சியில் நடந்த முறைகேடு
இதற்கிடையில் கடந்த அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறையில் பணம் கொடுத்து வேலை வாங்கியதாக கூறப்படும் ஓட்டுநர்கள், நடத்துநர்கள் என 80க்கும் மேற்பட்டோருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. அவர்களை அழைத்து விசாரித்தால் பண மோசடி விவகாரத்தில் ஏதேனும் துப்பு கிடைக்கலாம் என எதிர்பார்க்கின்றனர்.
ஓட்டுநர், நடத்துநர்கள் திக் திக்
இந்நிலையில் அந்த 80க்கும் மேற்பட்ட நபர்கள் திக் திக் மனநிலையில் இருக்கிறார்களாம். எப்படி விசாரணையில் இருந்து தப்பிப்பது? உண்மையை உளறாமல் உஷாராக இருப்பது? என தீவிரமாக யோசித்து வருவதாக பேச்சு அடிபடுகிறது. இவர்கள் மூலம் செந்தில் பாலாஜி சகோதரர் அசோக் சிக்குவாரா?
அடுத்தகட்ட நடவடிக்கைகள் என்ன?
இல்லை போலீசாரின் நேரடி தேடுதலில் சிக்கப் போகிறாரா? அமலாக்கத்துறையின் அடுத்தகட்ட நகர்வுகள் எப்படி இருக்கும்? போன்ற கேள்விகள் எழுவதை தவிர்க்க முடியவில்லை.