சென்னை: அமைச்சர் பதவியில் இருந்து செந்தில் பாலாஜி நீக்கப்படுவதாக நேற்று ஒரு பக்க அறிக்கை வெளியிட்ட ஆளுநர் ஆர்.என்.ரவி, செந்தில் பாலாஜி நீக்கப்படுவதற்கான காரணம் குறித்து முதல்வர் முக. ஸ்டாலினுக்கு 5 பக்க கடிதம் எழுதி உள்ளார். அதன் விவரம்: “குற்றம்சாட்டப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியை பதவியில் இருந்து நீக்க பரிந்துரைத்து கடந்த மே 31-ஆம் தேதி கடிதம் அனுப்பி இருந்தேன். அந்தக் கடிதத்தின் நியாயத்தை எடுத்துக்கொள்வதற்கு பதில் நீங்கள் ஜூன் 1-ம் தேதி எனக்கு ஆத்திரமாக பதில் எழுதியிருந்தீர்கள். அதில் மிதமிஞ்சிய வார்த்தைகளை பயன்படுத்தி இருந்தீர்கள்.
இரண்டு வாரம் கழித்து ஜூன் 15-ம் தேதி, அமைச்சர் செந்தில் பாலாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் காரணத்தினால் அவர் வகித்து வந்த பொறுப்புகளை வேறு இரு அமைச்சர்களுக்கு ஒதுக்கியும், செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக தொடருவார் என்றும் பரிந்துரைத்து கடிதம் அனுப்பியிருந்தீர்கள். ஆனால், செந்தில் பாலாஜி அமலாக்கத் துறையால் ஜூன் 14-ம் தேதி கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் மருத்துவமனையில் சிகிச்சைப் பெறும் விஷயத்தை நீங்கள் கடிதத்தில் தெரிவிக்கவில்லை.
இதனைத் தொடர்ந்து செந்தில் பாலாஜி ஏன் இலாகா இல்லாத அமைச்சராக தொடர வேண்டும் என்று முழு விளக்கம் கேட்டு அன்றே நான் கடிதம் எழுதியிருந்தேன். அதற்கு விளக்கம் அளிக்காமல் தங்களின் பரிந்துரையை நடைமுறைப்படுத்தக் கோரி விரும்பத்தகாத வார்த்தைகளில் அன்றே பதில் எழுதியிருந்தீர்கள். அந்தக் கடிதம் எனக்கு 16-ம் தேதி கிடைத்தது.
மற்ற இரண்டு அமைச்சர்களுக்கும் பொறுப்புகளை ஒதுக்கும் உங்களின் பரிந்துரையை ஏற்றுக்கொண்ட நான், நியாயமான விசாரணை நடக்கவேண்டும் என்பதற்காக செந்தில் பாலாஜி அமைச்சராக நீடிப்பதை ஏற்றுக்கொள்ளவில்லை. எனினும், இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி நீடிப்பார் என்று நீங்கள் அரசாணை வெளியிட்டீர்கள்.
செந்தில் பாலாஜி மீதான வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் பல்வேறு கருத்துகளுக்கு எதிராக அவரை அமைச்சராகத் தொடரச் செய்வதன் மூலம் ஆரோக்கியமற்ற சார்பு நிலையை காட்டி இருக்கிறீர்கள். இதனால், செந்தில் பாலாஜி அமைச்சரவையில் தொடர்ந்தால் அரசு இயந்திரத்தின் செயல்பாடு பாதிக்கப்படும். எனவே, இதுபோன்ற சூழல்களில் இந்திய அரசியலமைப்பு சட்டப் பிரிவு 154, 163 மற்றும் 164 ஆளுநருக்கு வழங்கியுள்ள அதிகாரத்தின்படி, அமைச்சர் செந்தில் பாலாஜியை நான் பதவியிலிருந்து நீக்கம் செய்கிறேன்” என்று முதல்வருக்கு ஆளுநர் கடிதம் எழுதி உள்ளார்.
அமைச்சர் செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்குவதாக அறிவித்த ஆளுநர் ஆர்.என் ரவி, அடுத்த சில மணி நேரங்களில் தனது முடிவை நிறுத்திவைப்பதாக மற்றொரு அறிக்கை வெளியிட்டார். அதில், “அமைச்சர் பதவியில் இருந்து செந்தில் பாலாஜி நீக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக அட்டர்னி ஜெனரலின் ஆலோசனையைப் பெறுமாறு மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தி உள்ளது. இதையடுத்து, அட்டர்னி ஜெனரலை நான் தொடர்பு கொண்டிருக்கிறேன். அவர் தனது கருத்தை தெரிவிக்கும் வரை, செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கிய நடவடிக்கை நிறுத்திவைக்கப்படுகிறது” என தெரிவிக்கப்பட்டிருந்தது.