இன்றைய பங்குச் சந்தை வர்த்தகத்தில் சென்செக்ஸ், நிஃப்டி குறியீடுகள் முதலீட்டாளார்களுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் விதமாக ஏற்றத்தில் காணப்படுகிறது. இது முதலீட்டாளர்கள் மத்தியில் ஒரு நல்ல விஷயமாக இருந்தாலும், எம்சிஎக்ஸ் பங்கு விலையானது இன்று காலை வர்த்தகத்திலேயே கடும் வீழ்ச்சியை கண்டிருந்தது. இதுவே பேசுபொருளாக முதலீட்டாளர்கள் மத்தியில் மாறியுள்ளது.
இம்மாதத்தின் இவ்வாரத்தின் கடைசி வர்த்தக நாளான இன்று, சந்தையில் நிலவி வரும் இந்த போக்கால் முதலீட்டாளர்களின் முழு கவனமும் எம்சிஎக்ஸ் பங்கின் மீது விழுந்துள்ளது.
12% மேலாக சரிவினைக் கண்டுள்ள இந்தப் பங்கின் விலை, இனிமேலும் சரியுமா? என்ன காரணத்தினால் சரிவினைக் கண்டுள்ளது. இது குறைந்த விலையில் வாங்க சரியான நேரமா? ஏன் இந்த சரிவு? கவனத்தில் கொள்ள வேண்டியது என்ன? வாருங்கள் பார்க்கலாம்.
எம்சிஎக்ஸ்-க்கான தொழில்நுட்ப ஆதரவை வழங்கி வரும் ஐடி நிறுவனமான, 63 மூன்ஸ் டெக்னாலஜி நிறுவனத்துடனான ஒப்பந்தத்தை, ஜூலை 1ல் இருந்து 6 மாதங்கள் நீட்டித்துள்ளது. இந்த அறிவிப்பானது வெளியான நிலையில் தான் எம்சிஎக்ஸ் பங்குகள் கடும் வீழ்ச்சி கண்டு வருகின்றன.
சரிவா? ஏற்றமா?
எம்சிஎக்ஸ் பங்கு விலையானது கடும் வீழ்ச்சியினை சந்தித்து வந்தாலும், 63 மூன்ஸ் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் பங்கு விலையானது 18% மேலாக ஏற்றத்தினை கண்டுள்ளது. இது இன்று காலை வர்த்தகத்திலேயே அதன் 52 வார உச்சமான (BSE) 265.20 ரூபாயினையும் எட்டியுள்ளது.
இது குறித்து எம்சிஎக்ஸ் பங்குச் சந்தைக்கு தாக்கல் செய்த அறிக்கையில், ஒரு காலாண்டுக்கு முந்தைய தொகையான 125 கோடி ரூபாய் ஒப்பந்த தொகையாக பரிசீலனை செய்யுமாறு கூறியுள்ளதாக தெரிவித்துள்ளது. இது கடந்த மார்ச் 2023 காலாண்டில் செலுத்தப்பட்ட 87 கோடி ரூபாயை விட அதிகம் என்பதும் கவனத்தில் கொள்ளத்தக்கது.
சர்ச்சை!
எம்சிஎக்ஸ்- 63 மூன்ஸ் உடனான தொழில்நுட்ப ஆதரவு குறித்தான நீண்ட கால ஒப்பந்தமானது, எம்சிஎக்ஸ் ஒரு புதிய தொழில்நுட்ப சேவை வழங்குநரை தேர்வு செய்ததால், செப்டம்பர் 30, 2022ல் முடிவடைந்தது. எனினும் புதிய சேவை வழங்குநரை தேர்வு செய்யும் வரையில் குறுகிய காலத்திற்கு 63 மூன்ஸ் நிறுவனத்துடனான ஒப்பந்தத்தினை நீட்டித்தது.
இதுவே அந்த சமயத்தில் பெரும் சர்ச்சையை கிளப்பியது. எனினும் நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் புதிய டிரேடிங் தளத்திற்கு மாறுவதில் சிக்கல் இருந்தது. இது சரியான நேரத்தில் செய்யப்படாத நிலையில்தான் ஒப்பந்தம் மேற்கொண்டு 63 மூன்ஸ் நிறுவனத்துடன் மீண்டும் நீட்டிக்கப்பட்டது. இது தற்போது மீண்டும் தள்ளிப் போடப்பட்டுள்ளது.
ஏற்றம் தான்!
எம்சிஎக்ஸ் தனது செலவினைக் குறைக்கும் பொருட்டு, டிசிஎஸ் நிறுவனத்துடன் தொழில்நுட்ப ஒப்பந்தத்தை தேர்வு செய்தது. ஆனால் இந்த ஒப்பந்தம் தொடர்ந்து தாமதமாகி வரும் நிலையில், எம்சிஎக்ஸ் அதிக செலவினை எதிர்கொள்ளலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எப்படியிருப்பினும் கடந்த ஒரு மாதத்தில் எம்சிஎக்ஸ் பங்கு விலையானது 20% ஏற்றத்தில் காணப்படுகிறது. இதே 63 மூன்ஸ் டெக்னாலஜி நிறுவனத்தின் பங்கு விலை 33% ஏற்றம் கண்டுள்ளது.
நம்பாதீர்கள்..!
63 மூன்ஸ் நிறுவனத்துடனான ஒப்பந்தம் நீட்டிக்கப்பட்ட நிலையில், அது எம்சிஎக்ஸ் நிறுவனத்தின் செலவினை அதிகரிக்கலாம். இது லாப வரம்பில் தாக்கம் ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் தான் எம்சிஎக்ஸ் பங்கு விலையானது பெரும் சரிவினைக் கண்டு வருகிறது. எனினும் இந்த சரிவானது இப்படியே தொடரும் என்று கூறி விட முடியாது.
இப்பிரச்னையானது முடிவுக்கு வரும்பட்சத்தில், அது எம்சிஎக்ஸ் நிறுவனத்தின் லாப வரம்பில் ஏற்றத்தினை கொடுக்கலாம். இதனால் பங்கு விலையானது மீண்டும் ஏற்றம் காணத் தொடங்கலாம். ஆக இதனை நம்பி முதலீட்டாளர்கள் எந்த முடிவையும் நீண்டகால நோக்கில் எடுக்காதீர்கள்.