வருடாந்த பேருந்து கட்டண திருத்தத்தில் எவ்வித மாற்றமும் செய்யப்பட மாட்டாது என தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் ஷஷி வெல்கம, இன்று (30) அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் தெரிவித்தார்.
இதற்கமைய அவர் மேலும் தெரிவிக்கையில் இதுவரையில் பேணப்பட்டு வந்த குறைந்தபட்ச பேருந்து கட்டணம் இன்று (30) நள்ளிரவு முதல் எவ்வித மாற்றமும் இன்றி நடைமுறைப்படுத்தப்படும் என்றார்.
தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தேசிய கொள்கை ஒவ்வொருவருடமும் ஜீலை முதலாம் திகதி பேருந்து கட்டணத்தில் மாற்றங்களை ஏற்படுத்தும். இவ் வருடம் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் உடன்படிக்கைக்கு உட்பட்டு மேற்கொள்ளப்பட்ட கணக்கீடுகளின் படி 6.4 வீதத்தினால் பேருந்து கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும், இத்தகைய பேருந்து கட்டண அதிகரிப்புகளும் தேவை என பேருந்து உரிமையாளர் சங்கங்கள் தெரிவித்துள்ளன.
ஆனால் முன்னர் ஏற்பட்ட கொரோனா பெருந்தொற்றினை அடிப்படையாகக் கொண்டு இவ் அதிகரிப்பானது 20 வீதமாக வழங்கப்பட்ட நிலையில் சில மாதங்களுக்கு முன்னர் இக் கட்டணங்கள் 10 வீதமாக குறைக்கப்பட்டன எனவும் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் ஷஷி வெல்கம தொடர்ந்து கருத்து தெரிவித்திருந்தார்.
பேருந்துக் கட்டண அதிகரிப்பால் மக்கள் நேரடியாக பாதிக்கப்படுவதால், தற்போதிருக்கும் 10 வீத கட்டணத்தில் எவ்வித திருத்தமும் செய்யப்படாது என்றும் கூறினார்.
தொடர்ந்து பயணிகளிடம் அதிக பணம் பெற வேண்டாம் என உரிமையாளர்களை அவர் கேட்டுக் கொண்டதுடன், இது தொடர்பில் அவர்களுக்கு அதிக முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.
மேலும் இவ்வாறு அதிக கட்டணம் வசூலிப்பவர்கள் தொடர்பில் 1955 என்ற தொலைப்பேசி இலக்கத்திற்கு முறைப்பாடு செய்ய முடியும் எனவும் இது தொடர்பில் அடுத்த வாரத்திலிருந்து தகுந்த நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் கூறினார்.