உணவு பாதுக்காப்பு: தமிழ்நாட்டில் கோவை தான் பெஸ்ட்! ஸ்டாலினிடம் வாழ்த்து பெற்ற டீம்!

இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரநிர்ணய ஆணையத்தால் நடத்தப்பட்ட Eat Right Challenge போட்டியில் தமிழ்நாட்டின் 13 மாவட்டங்களுக்கு சிறந்த செயல்பாட்டிற்கான பாராட்டுச் சான்றிதழ்கள் மற்றும் மாநில உணவு பாதுகாப்பு குறியீட்டிற்கான செயல்பாட்டில் இந்திய அளவில் தமிழ்நாடு மூன்றாம் மாநிலமாக தேர்வு செய்யப்பட்டு விருது வழங்கப்பட்டது.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் இன்று (30.6.2023) தலைமைச் செயலகத்தில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் மற்றும் அதிகாரிகள் விருதை காண்பித்து வாழ்த்து பெற்றனர்.

இதில் சிறந்த செயல்பாட்டிற்கான விருதிற்கு கோயம்புத்தூர், திண்டுக்கல், மதுரை, பெரம்பலூர், சென்னை, காஞ்சிபுரம், சேலம், திருவள்ளூர், திருப்பூர், சிவகங்கை, நாமக்கல், திருச்சிராப்பள்ளி, வேலூர் ஆகிய மாவட்டங்கள் தேர்வு செய்யப்பட்டன.

அதற்காக வழங்கப்பட்ட பாராட்டுச் சான்றிதழ்கள் மற்றும் 2022-2023-ஆம் ஆண்டிற்கான மாநில உணவு பாதுகாப்பு குறியீட்டிற்கான செயல்பாட்டில் இந்திய அளவில் தமிழ்நாடு மூன்றாம் மாநிலமாக தேர்வு செய்யப்பட்டு, அதற்காக வழங்கப்பட்ட விருதினை முதல்வர் ஸ்டாலினிடம் காண்பித்து வாழ்த்துப் பெற்றனர்.

அந்த நிகழ்ச்சியில், உணவு வணிகங்களுக்கான உரிமம் / பதிவுச் சான்று வழங்குதல் மற்றும் உணவு மாதிரிகள் எடுத்து கண்காணித்தல், பாதுகாப்பான மற்றும் ஆரோக்கியமான உணவு வழங்குவது குறித்து தர மதிப்பீடு செய்தல் மற்றும் சான்று வழங்குதல், தரமான, பாதுகாப்பான, செறிவூட்டப்பட்ட, ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவு பழக்கத்தை ஏற்படுத்துதல், உணவு உட்கொள்ளும் முறையில் மாற்றத்தை ஏற்படுத்துதல் குறித்த விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் போன்ற ஆக்கப்பூர்வமான செயல்பாடுகள் தொடர்பாக இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரநிர்ணய ஆணையத்தால் நடத்தப்பட்ட 2022-2023ஆம் ஆண்டிற்கான Eat Right Challenge போட்டியில் இந்திய அளவில் 260 மாவட்டங்கள் கலந்து கொண்டனர்.

மாநில அளவிலான செஸ் போட்டி

அதில், வெற்றி பெற்றது என தேர்வு செய்யப்பட்ட 31 மாவட்டங்களில் தமிழ்நாட்டில் உள்ள கோயம்புத்தூர், திண்டுக்கல், மதுரை, பெரம்பலூர், சென்னை, காஞ்சிபுரம், சேலம், திருவள்ளூர், திருப்பூர், சிவகங்கை, நாமக்கல், திருச்சிராப்பள்ளி, வேலூர் ஆகிய 13 மாவட்டங்கள் சிறந்த செயல்பாட்டிற்கான விருதுகளை பெற்றுள்ளது. இப்போட்டியில், கோயம்புத்தூர் மாவட்டம் இந்திய அளவில் முதலிடம் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும், இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரநிர்ணய ஆணையம் உணவு பாதுகாப்பு துறையில் மனித வளம் மற்றும் நிறுவனங்களைப் பற்றிய தரவுகள், தர நிர்ணய விதிமுறைகளைப் பின்பற்றுதல், உணவு பொருட்களைப் பரிசோதிப்பதற்கான கட்டமைப்பு மற்றும் கண்காணிப்பு, பயிற்சி மற்றும் திறன் மேம்பாடு, நுகர்வோருக்கு அதிகாரமளித்தல் ஆகிய ஐந்து குறியீடுகளின் அடிப்படையில் தர மதிப்பீடு செய்து, 2022-2023-ஆம் ஆண்டிற்கான மாநில உணவு பாதுகாப்பு குறியீட்டிற்கான செயல்பாட்டில் இந்திய அளவில் தமிழ்நாடு மூன்றாம் மாநிலமாக தேர்வு செய்யப்பட்டு, அதற்கான விருதும் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில், தலைமைச் செயலாளர் இறையன்பு, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மைச் செயலாளர் ககன்தீப் சிங் பேடி,உணவு பாதுகாப்புத் துறை ஆணையர் ஆர். லால்வேனா, உணவு பாதுகாப்புத் துறை இயக்குநர் (ம) கூடுதல் ஆணையர் மரு. தேவபார்த்தசாரதி, துணை இயக்குநர் பிரதீப் கே. கிருஷ்ணகுமார், மாவட்ட நியமன அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.