இதுவரை வழங்கப்பட்ட உரம் கொள்வனவு செய்யும் வவுச்சர்களின் செல்லுபடியாகும் காலம் இரண்டு மாதங்களுக்குரியதாகும், எனினும் உரம் கொள்வனவு செய்வதற்கான காலத்தை இவ்வருடம் டிசம்பர் வரை நீடிக்க விவசாய அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
உரம் கொள்வனவு செய்வதற்காக விவசாயிகளுக்கு அரசாங்கம் மானியமாக வழங்கியுள்ள வவுச்சர்களை பகிர்வதில் அரசியல்வாதிகளையும் பங்குகொள்ளுமாறு விவசாய அமைச்சோ அல்லது அரசாங்கமோ வலியுறுத்தவில்லை என விவசாய அபிவிருத்தி திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சியொன்றுடன் தொடர்புடைய சில அதிகாரிகள் குழுவொன்று வேண்டுமென்றே வவுச்சர் வழங்குவதை தாமதப்படுத்தியதால் சில பகுதிகளில் உர வவுச்சர் வழங்குவதில் சிறியளவு தாமதம் ஏற்பட்டுள்ளதாக விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.
விவசாய சேவை நிலையங்களினால் வழங்கப்படும் வவுச்சர்களை வழங்குவதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகளே பொறுப்பு என்றும், அதே நேரம் அரசியல்வாதிகள் இதில் பங்கேற்க வேண்டும் என எவ்வித அறிவுறுத்தல்களையோ அல்லது சுற்றறிக்கைகளையோ விவசாய அமைச்சோ விவசாயிகள் அபிவிருத்தி திணைக்களமோ வெளியிடவில்லை எனவும் விவசாய அபிவிருத்தி திணைக்களம் வலியுறுத்தியுள்ளது.
மேலும், விசாரணைகள் அனைத்தும் முடிந்தவுடன் வவுச்சர்களை வழங்காமல் காலதாமதத்தை ஏற்படுத்திய அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க விவசாயத்துறை பணிப்பாளர் நாயகத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.