புவனேஸ்வர்: ஒடிசா ரயில் விபத்து பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்த நிலையில், இதில் உயிரிழந்தவர்களின் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படைக்கப்பட்டு வருகிறது. இருப்பினும் இன்னும் 52 உடல்கள் அடையாளம் காணப்படாமல் மருத்துவமனையிலேயே வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.
வழக்கமாக 12841 எனும் எண் கொண்ட கோராமண்டல் எக்ஸ்பிரஸ் மேற்குவங்கத்தின் ஹவுரா ரயில் நிலையத்திலிருந்து சென்னைக்கு வாரத்திற்கு 6 நாட்கள் இயக்கப்படுகிறது. இந்நிலையில், கடந்த 2ம் தேதியன்று வழக்கம் போல இந்த ரயில் பிற்பகல் 3.20 மணியளவில் ஹவுரா ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்டிருக்கிறது. சான்ட்ராக்சி, காரக்பூர் ஆகிய ரயில் நிலையங்களை கடந்த இந்த ரயில் பத்ராக் ரயில் நிலையத்திற்கு வந்து சேரவில்லை.
பத்ராக் ரயில் நிலையத்தில் காத்திருந்த பயணிகள் மற்றும் ரயில்வே அதிகாரிகளுக்கு சந்தேகம் வலுவடைந்திருக்கிறது. ஆனால் ரயிலுக்கு என்ன ஆனது என்கிற விவரம் யாருக்கும் தெரியவில்லை. அதுபோல பெங்களூர் யஷ்வந்த்பூரிலிருந்து ஹவுரா நோக்கி வந்துக்கொண்டிருந்த மற்றொரு ரயிலும் பல்சோர் ரயில் நிலையத்தை கடக்கவில்லை. ஓரிரு மணி நேரம் ஆகியும் இந்த ரயில்கள் குறிப்பிட்ட ரயில் நிலையத்தை அடையாமல் இருந்ததால் சந்தேகத்தின் பேரில் லோக பைலட்டிடம் தொடர்புகொள்ளப்பட்டது.
ஆனால் பதில் ஏதும் இல்லை. எனவே ரோந்து சென்று பார்த்தபோதுதான் ரயில்கள் விபத்தில் சிக்கியுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. இரண்டு பயணிகள் ரயில் ஒரு சரக்கு ரயில் என மொத்தம் 3 ரயில்கள் விபத்தில் சிக்கியிருந்தன. உடனடியாக மீட்பு பணியில் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டனர். இந்த கோர விபத்தில் 280க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். அதேபோல 1,000க்கும் அதிகமானோர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டனர். சம்பவ இடத்தை மத்திய ரயில்வேத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்னவ் நேரில் சென்று பார்வையிட்டார்.
மீட்பு பணிகள் முடிக்கப்பட்டு ஓரிரு நாட்களில் மீண்டும் அதே பாதையில் ரயில் போக்குவரத்து தொடங்கியது. மறுபுறம் உயிரிழந்தவர்களை அடையாளம் காண்பதில் சிக்கல் எழுந்தது. சில உடல்களில் முகம், தலை போன்றவை முற்றிலுமாக சிதைந்து இருந்ததால் அந்த உடல்கள் யாருடைய என்பதை சரியாக கண்டுபிடிக்க முடியவில்லை. இதனையடுத்து காணாமல் போனதாக புகார் அளித்தோரின் டிஎன்ஏவையும், உயிரிழந்தவர்களின் டிஎன்ஏவும் பரிசோதனை செய்யப்பட்டு உடல்கள் அடையாளம் காணப்பட்டது.
இருப்பினும் 81 உடல்களை அடையாளம் காண்பதில் எழுந்த சிக்கல் காரணமாக அவை புவனேஸ்வரில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் வைத்து பராமரிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது வரை 52 உடல்கள் அடையாளம் காணப்படாமல் உள்ளதாக புவனேஸ்வர் மாநகராட்சி மேயர் சுலோச்சனா தாஸ் கூறியுள்ளார்.
“அடையாளம் காண்பதில் சிக்கல் இருந்த 81 உடல்கள் எய்ம்ஸ் மருத்துவமனையில் வைத்து பராமரித்து வந்தோம். சிலர் தங்கள் உறவினர்களை காணவில்லை என்று கூறி எங்களிடம் வந்தார்கள். அவர்களின் டிஎன்ஏ மற்றும் உயிரிழந்தவர்களின் டிஎன்ஏ ஆகியவற்றை பரிசோதித்து பார்த்ததில் 29 உடல்கள் சரியாக அடையாளம் காணப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்க தேவையான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. உறவினர்களின் சொந்த ஊருக்கு உடல்களை எடுத்து சென்று கொடுக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இல்லையெனில் உறவினர்கள் விரும்பினால் உடல்களை இங்கேயே தகனம் செய்துகொள்ளலாம். அதற்கான ஏற்பாடுகளையும் மாநகராட்சி சார்பில் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இன்னும் 51 உடல்கள் அடையாளம் காணப்படாமல் இருக்கிறது” என்று கூறியுள்ளார்.