சென்னை:
அமைச்சர்
நடிப்பில் வெளியாகியுள்ள ‘மாமன்னன்’ திரைப்படம் ஒரு ஃப்ளாப் (Flop) படம் என்றும், சும்மா அவங்களே ‘பில்ட் அப்’ கொடுக்குறாங்க எனவும் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மாமன்னன் திரைப்படத்தை கொண்டாடிய ரசிகர்கள்
மாரிசெல்வராஜ் இயக்கத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் ‘மாமன்னன்’. தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் போதிலும், அவரை ஜாதி இழிவு எவ்வாறு துரத்துகிறது, அவரையும் அவரது குடும்பத்தினரையும் எவ்வாறு அலைக்கழிக்கிறது என்பதையும் காட்டும் படமாக ‘மாமன்னன்’ அமைந்துள்ளது. மேலும், இந்த திரைப்படத்தில் சமூக நீதி அழுத்தமாக பேசப்பட்டிருப்பதாகவும் விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கின்றன.
இது ஒருபுறம் இருக்க, தமிழகம் முழுவதும் ‘மாமன்னன்’ திரைப்படம் நல்ல வசூலை குவித்து வருவதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரிடம் ‘மாமன்னன்’ திரைப்படம் குறித்து கேள்வியெழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்து அவர் கூறியதாவது:
பொதுவாக இப்போது வரும் திரைப்படங்களை நான் பார்ப்பது கிடையாது. என் நண்பர் ஒருவர் நேற்று ‘மாமன்னன்’ படத்திற்கு சென்றுவிட்டு வந்தார். அவரிடம் கேட்ட போது, ஒரே வார்த்தையில் திரைப்படம் சுத்த ஃப்ளாப் என்று சொல்லிவிட்டார். பொதுமக்களும் அப்படிதான் சொல்கின்றனர். ஆனால், அவர்கள் (திமுக) மட்டும்தான் படம் நல்லா இருப்பது போல பில்ட் அப் கொடுத்து கொண்டிருக்கிறார்கள். ஏதோ ஐநா சபை பாராட்டியது போல பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
ஏதோ திரைப்படத்தில் சமூக நீதி பேசியிருக்கிறார்கள் எனக் கூறுகிறார்கள். சமூக நீதிக்கும் கொஞ்சம் கூட தகுதியில்லாத கட்சி திமுக. நான் ஒன்று கேட்கிறேன்.. ஆதி திராவிடர்களுக்கு கட்சியிலும், ஆட்சியிலும் அதிக முக்கியத்துவமும், பிரதிநிதித்துவமும் கொடுத்தது ஒரே கட்சி அதிமுக தான். பொதுத்தொகுதியில் யாராவது ஆதி திராவிடரை நிற்க வைப்பார்களா? ஆனா அம்மா (ஜெயலலிதா) நிற்க வச்சாங்க தைரியமாக. நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவராக சரோஜா என்ற ஆதிதிராவிட வகுப்பைச் சேர்ந்த பெண்ணை ஆக்கினாங்க.
எல்லாவற்றுக்கும் மேலாக, சட்டமன்றத் தலைவராக அருந்ததியர் வகுப்பைச் சேர்ந்த தனபாலை ஆக்கியதும் அம்மா தான். ஆனால், அவரை எந்த அளவுக்கு திமுக கேவலப்படுத்தியது என்பதை இந்த நாடே பார்த்துள்ளது. அவரது மேஜையின் மீது ஏறி திமுகவினர் என்னென்ன செய்தார்கள் என்பது எல்லோருக்கும் தெரியும். இவர்களா சமூக நீதியை பற்றி பேசுவது? இவர்களா சமூக நீதியை பற்றி படம் எடுப்பது? இவ்வாறு ஜெயக்குமார் கூறினார்.