வாஷிங்டன்
கோடீஸ்வரர் பில் கேட்ஸின் தனியார் அலுவலகத்தில் வேலை தேடிய சில பெண்களிடம் அவர்களின் பாலியல் வரலாறுகள், நிர்வாண புகைப்படங்கள் மற்றும் ஆபாசங்கள் போன்ற சில பொருத்தமற்ற கேள்விகள் கேட்கப்பட்டதாக ஒரு அறிக்கை கூறுகிறது.
அமெரிக்காவின் பிரபல மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் பில் கேட்ஸ். அந்நிறுவனத்தின் நிறுவனர்களில் ஒருவரும் ஆவார்.
பல காலம் இவர் சர்ச்சைகளில் இருந்து விலகி இருந்த நிலையில், மனைவியிடம் இருந்து விவாகரத்து பெற்றது முதலே இவரது பெயரும் சர்ச்சைகளில் சிக்கி வருகிறது. அப்படியொரு சம்பவம் தான் இப்போது மீண்டும் நடந்துள்ளது.
பில் கேட்ஸ் நிறுவனத்தில் பணிபுரிய பல்வேறு இளைஞர்கள் விண்ணப்பிப்பார்கள் என்பது அனைவருக்கும் தெரியும். இதற்கிடையே இதில் விண்ணப்பிக்கும் பெண்களிடம் வெளிப்படையாகவே பாலியல் மற்றும் உடலுறவு சார்ந்த கேள்விகள் கேட்கப்பட்டதாக தி வால் ஸ்டிரீட் ஜெர்னல் செய்தி வெளியிட்டுள்ளது.
பெண்களிடம் அவர்களின் பாலியல் வரலாறு மற்றும் ஆபாசப் படங்கள் குறித்தெல்லாம் கேள்விகள் கேட்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. மேலும், இதற்கு முன்பு வாழ்கையில் என்றாவது போதைப்பொருளைப் பயன்படுத்தி உள்ளீர்களா… எப்போதாவது திருமணத்திற்குப் புறம்பான உறவில் இருந்துள்ளீர்கள் என்பது போன்ற கேள்விகளும் கேட்கப்பட்டுள்ளன.
அங்குள்ள பாதுகாப்பு நிறுவனம் ஒன்றே இந்த விரிவான நேர்காணலை நடத்துகிறது.
பில் கேட்ஸ் அலுவலகத்தில் பல சென்சிடிவ் தகவல்கள் இருக்கும். யாரிடமாவது இதுபோன்ற விவகாரங்களில் சிக்கி, பிளாக்மெயில் செய்யப்படுபவராக இருந்தால் சென்சிடிவ் தகவல்கள் எளிதாக லீக் ஆகலாம் என்பதாலேயே பில் கேட்ஸ் தரப்பு இந்த நடவடிக்கைகளை எடுக்கப்பட்டு இருக்கலாம் கூறப்படுகிறது.
வால் ஸ்டிரீட் ஜெர்னல் வெளியிட்டுள்ள அந்த செய்தியில், “பெண்களிடம் திருமணத்திற்குப் புறம்பான உறவுகளில் இருந்துள்ளீர்களா எனக் கேள்வி கேட்டுள்ளனர். மேலும், எந்த வகை ஆபாசப் படங்கள் பிடிக்கும் என்றும் கேட்டுள்ளனர்.
மேலும், மொபைல் போனில் நிர்வாண புகைப்படங்கள் இருக்கிறதா என்றும் கேட்டுள்ளனர். மேலும், காசுக்காக டான்ஸ் ஆடியுள்ளனரா என்ற கேள்விகளைக் கூட கேட்டுள்ளனர். இன்னும் சிலரிடம் பாலியல் உறவால் பரவும் நோய் இருக்கிறதா என்று கேட்கப்பட்டுள்ளது” என்று அதில் கூறப்பட்டுள்ளது.
அதேநேரம் ஆண்கள் யாரிடமும் இதுபோன்ற கேள்விகள் கேட்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது, இருப்பினும் ஒரு சில ஆண்களிடம் அவர்களின் பாலியல் வாழ்க்கை குறித்து கேள்வி எழுப்பி இருக்க வாய்ப்புள்ளது எனக் கூறப்படுகிறது.
இது தொடர்பாக கேட்ஸ் அலுவலகத்தின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், இதுபோன்ற கேள்விகள் கேட்கப்பட்டதா என எங்களுக்கு எதுவும் தெரியாது.. இதுபோன்ற கேள்விகளை ஏற்றுக் கொள்ள முடியாது.
இது ஒருவரது தனியுரிமையை மீறுவதாக அமைகிறது. இது குறித்துச் சம்மந்தப்பட்ட நிறுவனத்திடம் விளக்கம் கேட்க உள்ளோம்” என கூறி உள்ளார்.
இந்த நேர்காணலுக்கும் பில் கேட்ஸுக்கும் நேரடியாக எந்தவொரு தொடர்பும் இல்லை என்ற போதிலும், அவரது அலுவலகத்தில் நடந்த நேர்காணலில் இதுபோன்ற கேள்விகள் கேட்கப்பட்டது பெரும் சர்ச்சையைக் ஏற்படுத்தி உள்ளது.