மாமல்லபுரத்தில் 6.79 ஏக்கரில் புதிய பேருந்து நிலையம்: அமைச்சர் சேகர்பாபு தகவல்

சென்னை: மாமல்லபுரத்தில் 6.79 ஏக்கரில் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்படவுள்ளதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.

மாமல்லபுரத்தில் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் சார்பில் கட்டப்படவுள்ள புதிய பேருந்து நிலையத்திற்கான இடத்தினை அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன் மற்றும் பி.கே.சேகர்பாபு ஆய்வு செய்தனர். இதனைத் தொடர்ந்து அமைச்சர் பி.கே.சேகர்பாபு இன்று செய்தியாளர்களிடம் கூறுகையில், “மாமல்லபுரத்தில் அமையவிருக்கின்ற இந்த பேருந்து நிலையத்தில் 6.79 ஏக்கர் நிலப்பரப்பில் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட சதுர அடியில் 50 பேருந்துகள் ஒரே நேரத்தில் நிற்கக் கூடிய அளவுக்கு வடிவமைக்கப்படவிருக்கிறது. இந்தப் பேருந்து நிலையம் வரபெற்றால் மாமல்லபுரத்தில் ஏற்கெனவே இருக்கின்ற பழைய பேருந்து நிலையத்தில் போக்குவரத்து நெரிசல் கட்டுப்படுத்தப்படும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.

மாமல்லபுரத்தில் தற்போதுள்ள பேருந்து நிலையம் 0.31 ஏக்கர் பரப்பளவில், 10 பேருந்துகளை நிறுத்தும் திறன் கொண்டது. சென்னைப் பெருநகரப் போக்குவரத்துக் கழகம் (MTC) மற்றும் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் (TNSTC – விழுப்புரம் மண்டலம்) மாமல்லபுரத்தில் இருக்கும் பேருந்து நிலையத்தில் இருந்து திருத்தணி, தாம்பரம், செங்கல்பட்டு, கல்பாக்கம், திருப்போரூர், கோயம்பேடு மற்றும் திருவான்மியூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்குத் தங்கள் பேருந்துகளை இயக்குகின்றன. தற்போதுள்ள பேருந்து நிலையம் உள்ள இடத்தில் போதிய இடவசதி இல்லாததால், கிழக்கு கடற்கரை சாலை மற்றும் திருக்கழுக்குன்றம் சாலை அருகாமையில் புதிய பேருந்து நிலையம் அமைக்க முன்மொழியப்பட்டது.

புதிதாக அமையவிருக்கின்ற இந்தப் பேருந்து நிலையத்தில் முன்பதிவு மையம், தானியங்கி பணம் வழங்கும் இயந்திரம், சுற்றுலா தகவல் மையம், மருந்தகம், தாய்மார்கள் பாலூட்டும் அறை, பணியாளர்கள் தங்கும் விடுதி, பயணிகள் ஓய்விடம், வாகன நிறுத்துமிடம் உள்ளிட்ட வசதிகளைக் கொண்டதாக அமையும். ஆகவே, இந்தப் பேருந்து நிலையத்தை விரைவாக இந்த பகுதியில் கொண்டு வருவதற்கு உண்டான அனைத்து மேம்பாட்டு பணிகளையும் விரைவுபடுத்த திட்டமிட்டிருக்கின்றோம். இதோடு மட்டுமல்லாமல் கிளாம்பாக்கம், குத்தம்பாக்கம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய பகுதிகளில் புதிய பேருந்து நிலையங்களும், முடிச்சூர் பகுதியில் ஆம்னி பேருந்துகள் நிறுத்துவதற்குண்டான பேருந்து நிலையமும் அமைப்பதற்குண்டான திட்டங்கள் வகுக்கப்பட்டிருக்கின்றன.

இந்த ஆட்சி காலத்தில், புதிய பேருந்து நிலையங்களும், ஏற்கெனவே தொடங்கப்பட்டு பணியில் மந்தமாக இருந்த பேருந்து நிலையங்களையும் விரைவுபடுத்துகின்ற பணிகளையும் சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், மாமல்லபுரத்தை துணைக்கோள் நகரமாக்கும் பணியும் நடைபெற்று கொண்டுள்ளது” என்று அமைச்சர் சேகர்பாபு கூறினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.