முங்கர்: ‘‘பிஹார் தலைநகர் பாட்னாவில் சமீபத்தில் நடந்த எதிர்க்கட்சி கூட்டத்தில் கலந்து கொண்ட தலைவர்கள் எல்லாம் ஊழலில் ஈடுபட்டவர்கள்’’ என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியுள்ளார்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று பிஹார் தலைநகர் பாட்னா வந்தார். விமான நிலையத்திலிருந்து அவர் ஹெலிகாப்டர் மூலம் முங்கர் மாவட்டம் லக்கிசாராய் நகருக்கு ஹெலிகாப்டரில் சென்றார். அசோக் தாம் பகுதியில் உள்ள சிவன் கோயிலுக்கு சென்று அமித் ஷா வழிபட்டார். பின் லக்கிசாராய் பகுதியில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் அவர் கலந்து கொண்டு பேசியதாவது:
பிஹார் மாநிலம் ஊழலுக்கு எதிராக எப்போதும் குரல் கொடுத்துள்ளது. கடந்த 23-ம் தேதி பாட்னாவில் நடந்த எதிர்க்கட்சி கூட்டத்தில் கலந்து கொண்ட தலைவர்கள் எல்லாம் ஊழலில் ஈடுபட்டவர்கள். இவர்கள் செய்த ஊழிலின் மொத்த மதிப்பு ரூ.20 லட்சம் கோடிக்கு மேல் இருக்கும்.
அடுத்தாண்டு மக்களவை தேர்தலில் ஊழல் தலைவர்களுக்கு பிஹார் மக்கள் சரியான பதிலடி கொடுப்பர். பிஹாரில் தேசிய ஜனநாயக கூட்டணியை அழித்த தலைவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்.
மத்தியில் 9 ஆண்டு பாஜக தலைமையிலான ஆட்சியால், பிஹார் மாநிலத்தில் மருத்துவ கல்லூரிகள், விரைவு சாலைகள், பாலங்கள், புதிய ரயில் பாதைகள், 130 மெகா வாட் அனல் மின் நிலையங்கள் போன்ற உள்கட்டமைப்புகள் கிடைத்துள்ளன. இவ்வாறு அமித் ஷா பேசினார்.
அமித் ஷா வருகையை முன்னிட்டு பிஹாரில் ஆளும் மெகா கூட்டணி கட்சி சார்பில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன. மணிப்பூர் கலவரம் பற்றி விமர்சித்தும், சிபிஐ, அமலாக்கத்துறை, வருமான வரித்துறை போன்ற விசாரணை அமைப்புகளை மத்திய அரசு தவறாக பயன்படுத்துவதாகவும் விமர்சிக்கப்பட்டிருந்தன.
இந்நிலையில் அமித் ஷாவின் பிஹார் வருகை குறித்து முதல்வர் நிதிஷ் குமார் நிருபர்களிடம் கூறும்போது, ‘‘பிஹாருக்கு யார் வேண்டுமானாலும் தாராளமாக வரலாம். பிஹார் மாநிலத்துக்கு வர அனைவருக்கும் உரிமை உண்டு. பொது சிவில் சட்டம் குறித்து சொல்வதற்கு ஒன்றும் இல்லை. பாட்னாவில் நடந்த எதிர்க்கட்சிகள் கூட்டம் முடிந்து விட்டது. அடுத்த விஷயம் குறித்து பிறகு பேசுவோம்’’ என்றார்.